நீர் கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரியமுல்ல பகுதியில் சனிக்கிழமை சிரமதானப் பணிகள் நடைபெற்றது. மாநகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை 154 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் லக்ஷ்மன் தெரிவித்தார். இவர்களில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்றும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரே, மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ.சற். பரீஸ், கட்டான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி விஜித குரே ஆகியோரும் கலந்துகொண்டனர். தெப்பாஎல வாவி நீர்கொழும்புக்கும்கட்டானைக்கும் எல்லையாக உள்ளதால் அதனைச் சுத்தம் செய்து நீர் விரைவாக செல்ல ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ராசிக் பரீத் மாவத்தை, லாசரஸ் வீதி, மூர்வீதி, மொஸ்க் வீதி, ஐயூப் ஹாஜியார் மாவத்தை, ரகுமானா பாத் வீடமைப்புத் திட்டம் ஆகிய இடங்களில் இந்தச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன.