மலை யகப் பகுதிகளில் டெங்கு ஒழிப்புக்கான விசேட விழிப்புணர்வு வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிய மனித உரிமை ஆணையகம் (செடக் நிறுவனம்) ஹட்டன், கொட்டகல, தலவாக்கலை, நுவரெலியா நகரசபைகளின் உதவியோடும் பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்போடும் பிரதான நகரங்களில் வீதி நாடகம் அரங்கேற்றம், கையேட்டுப் பிரதிகள் விநியோகம் போன்ற விழிப்புணர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் மலையகப் பிரிவு இத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கண்டி, மாத்தளை பகுதிகளிலும் இச்செயற்றிட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் மலையகப் பகுதிக்கான பொறுப்பாளர் ஆ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
3000 இற்கும் மேற்பட்ட பெருந்தோட்டப்புற மக்கள் இதன் மூலம் டெங்கு நோய் தொடர்பான சிறந்த விளக்கங்களைப் பெறுவதோடு டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். மொத்தம் 15000 டெங்கு நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதுடன் 146 பேரளவில் இறந்துள்ளனர். இவ்வாறு மரணமானோரில் 46 பேர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்றிட்டம் மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும் பொதுமக்கள் டெங்கு நோய் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.