23

23

மடுத்திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு…

கத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆகஸ்ட் மாத திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.  திருவிழாவுக்கு தனியார் வாகனங்களில் வருகின்ற யாத்திரிகர்கள் தமது அடையாள அட்டைகளின் இலக்கங்கள், பெயர் விபரங்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் அடங்கிய பட்டியல் பிரதிகளை எடுத்துவருமாறு ஆலய பரிபாலகர் அறிவித்துள்ளார்.

திருவிழா ஆரம்பதினத்திலிருந்து 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையும் யாத்திரிகர்கள் இரவில் மடுவில் தங்கமுடியாது. இந்நாட்களில் மடு றோட் சந்தியில் இருந்து மடு ஆலயத்துக்கு காலை 6 மணிக்கு பின்னர் யாத்திரிகர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். ஆயினும் 12 ஆம் திகதி புதன்கிழமை முதல் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மடுவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நாட்களில் வழமைபோல மாலை 6.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும். இம்முறை மடுவுக்கு வருகின்ற யாத்திரிகர்கள் போதுமான அளவு உணவுப்பொருட்கள், விறகு, தண்ணீரை எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் மதுபானம், ஐஸ்கிறீம், விளையாட்டுப்பொருட்கள் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்படக் கூடிய அசௌகரியங்களை நல் மனதுடன் ஏற்று, திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுமாறு யாத்திரிகர்களை வினயமாக கேட்டுக்கொள்வதாக மடு பரிபாலகர் தெரிவித்துள்ளார்.

புகையிரத ஆணைச்சீட்டு பதிவுக் காரியாலயத்தை கல்முனையில் அமைக்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள்

train0000.jpgஅம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையாகவுள்ள புகையிரத ஆணைச்சீட்டை பதிவு செய்யும் காரியாலயத்தை கல்முனையில் அமைத்துத் தருமாறு பெருந்தோட்ட முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீனிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் கிழக்க மாகாணத்தில் சுமுகமான நிலைமையொன்று தோன்றியுள்ளதனால் புகையிரதத்தின் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமது பயணத்தை மேற்கொள்வதற்காக ஏனைய புகையிரத நிலையங்களில் நடைமுறையிலுள்ள முன் கூட்டிய ஆசனங்களை பதிவு செய்வதற்காக பொத்துவில்,அக்கரைப்பற்று, நிந்தவூர், அம்பாறை, சம்மாந்துறை மற்றும் கல்முனையைச் சேர்ந்த பயணிகள் மட்டக்களப்பிற்குச் சென்றே ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும் ஒரு பயணி ஆசனம் ஒன்றை பதிவு செய்வதற்காக 10 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைமுறையிலுள்ளது.இதனால்,திடீரென பயணம் செய்யும் ஒருவரால் இவ்வாறான ஆசனப் பதிவை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான பயணச் சிக்கலிலிருந்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல வருடங்களுக்கு முன் கல்முனையில் இயங்கிவந்த புகையிரத ஆசனத்தை முன் கூட்டியே பதிவு செய்யும் காரியாலயத்தை மீண்டும் இயங்கச் செய்து புகையிரத பயணத்தை சீர்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

கிழக்கில் வீதிகள் வெறிச்சோட்டம்

sun.jpg‘சூரிய கிரகணம்’ அச்சம் காரணமாக அம்பாறை மாவ ட்டத்திலுள்ள முக்கிய வீதிகளும், பிரதேசங்களும் நேற்று புதன்கிழமை மு.ப. 8.00 மணிவரை வெறிச் சோடிக் காணப்பட்டன.

மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களின் வரவு குறைவ டைந்திருந்ததாகவும், அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகை கணிசமானளவு வீழ்ச்சி கண்டிருந்ததாகவும் அதிபர்களும், அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அதிகமான பாடசாலைகள் மு.ப. 8.00 மணிக்குப் பின்னரே ஆரம்பமாகின. இருந்த போதிலும் அச்சம் காரணமாக அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நேற்று பாடசாலைக்கு அனுப்பி வைக்கவில்லை. அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் நேரம் பிந்தி சமுகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அதிகாலை தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குப் புறப்படாது வீட்டில் முடங்கியிருந்தனர். வர்த்தக நிலையங்களும், வழமையான நேரத்தை விடவும் பிந்தியே திறக்கப்பட்டன.

கடற்கரையை அண்டி வாழும் மக்கள் அச்சம் காரணமாக ஏற்கனவே இடம் பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டப் பள்ளிவாசல் களில் சூரிய கிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட்டதுடன் பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டன.

சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு 25ஆம் திகதி கொழும்பில்

saarc_colombo_2009.jpgசார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.

காலை 9.00 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளதோடு அன்றைய தினம் மாலை சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.