வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் பேரில் 80 சதவீதமானோர் வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள போதும் இந்த அகதிகளுக்கு நிரந்தர முகாம்களையே வீடுகளாக நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக தோன்றுவதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மெனிக்பாம் பகுதியில் நிரந்தரமான கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் ரைம்ஸுக்கு கூறியுள்ளனர். மெனிக் பாமில் 6 வலயங்களில் 4 வலயங்களுக்கு தங்களால் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் இரு வலயங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூன்ய வலயமென மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதியும் அடங்கும் என்றும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் பணிபுரிய எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கையிலுள்ள “ரிலீவ்’ இன்ர நெஷனல் அமைப்பின் தலைவர் ராஜித ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆனால், கட்டிடங்கள் எழுப்பப்படுவதை வெளியிலிருந்து பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பிற்குப் பின்னர் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இந்தப்பகுதி உருவாகிவருவதாக சில நிவாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர். பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள் என்று பாரிய நகரமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இங்கு வங்கிகளில் அகதிகள் 100 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
இந்த வலயங்களில் அரசாங்கம் நிரந்தர புகலிடங்களுக்கான வேலைகளை மேற்கொள்கின்றது. சீமெந்து தரைகள், மரக்கட்டமைப்புகள், இரும்புக் கூரைகள் என்பன அமைக்கப்படுகின்றன என்று உதவிப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். தன்னை அடையாளங் காட்டவேண்டாமென அவர் கேட்டுக்கொண்டதாக ரைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.