தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்கவில்லை.
இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு ஐ.தே.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.