05

05

காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்

kattankudy_arms.gifஅரசாங் கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று பெருந்தொகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை ஆயுதங்களைக் கையளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேற்படி பள்ளிவாசலில் நடந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் அதிபர் எடி சன் குணதிலக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பால, ஆரையம்பதி பொலிஸ் பொறுப்பதிகாரி கப்டன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு; ரீ-56 ரக துப்பாக்கி -17, எஸ்.எம்.ஜீ. 01, சொட்கன்-01, 03 ரக துப்பாக்கி-04, ஜே.ஆர். ரக கைக்குண்டு-03, எஸ்.எம்.ஜீ. கைக்குண்டு-10, 38 ரக குண்டு-01, ரீ-56 ரக ரவைகள்-1076, ரீ-56 ரக மகkன்-25, ல்கட்டாஸ்-01, 9 எம்.எம்.பிஸ்டல்-01, 9எம்.எம்.மகkன்-07

மேற்படி ஆயுத ஒப்படைப்பின் பின்னர் கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக உரையாற்றினார்

முல்லைத்தீவு ஈழம் வங்கி – மீட்கப்பட்ட நகைகளை உரியோரிடம் ஒப்படைக்க இராணுவம் ஏற்பாடு

முல்லைத்தீவு மக்களால் ஈழம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை நிவாரணக் கிராமங்களில் உரியவர்களிடம் கையளிக்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஈழம் வங்கியில் அடகு வைத்த நகைகளை படையினர் அண்மையில் மீட்டனர். அடகுவைத்தவர்களின் விபரங்களுடன் கூடிய தங்க நகைகள் அடங்கிய 8709 பொதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அடகு வைத்தவர்களுக்கு வழங்கிய பற்றுச்சீட்டின் பிரதிகள் நகையுடன் பொதி செய்யப்பட்டு வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1040 தங்க வளையல்களையும் கண்டெடுத்துள்ளனர்.

852 பெரிய தங்க வளையல்களும், 188 சிறிய தங்க வளையல்களும், 45 தங்க வளையல் துண்டுகள், கைச்சங்கிலி என்பவற்றையும் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தமிழில் நேர்முக வர்ணனை

cricket20-20.jpgகாலியில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர்பான தமிழ் நேர்முக வர்ணனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் முழு நேரமாக ஒலிபரப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எம்.எச். அஸ்வர் தமிழ் மொழியில் நேர்முக வர்ணனையை செய்கிறார்.
இதுவரை காலமும் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனை முழு நேரமாக சிங்கள மொழியிலும் இடையிடையே ஆங்கில, தமிழ் மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் தமிழ் மொழியிலும் முழுநேரமாக நேர்முக வர்ணனை இடம்பெறுமெனவும் அஸ்வர் தெரிவித்தார்.

காலியில் நேற்று காலை 10 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. நேற்று ஆட்டமுடிவின் போது இலங்கை அணி முதலாவது இனிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தேர்தல் கடமைகளுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

election.gifயாழ்.  மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயற்சி செயலமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாக்காளர்கள்  பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக இம்முறை 500 அரச உத்தியோகத்தர்களும்  யாழ். மாநகரசபைத் தேர்தலுக்கென இம்முறை ஆயிரம் அரச உத்தியோகத்தர்களும்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள் எவ்வித தங்கு தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும்  உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜக்சனின் பெயரில் மின்னஞ்சலில் பரவும் வைரஸ் – கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

மைக்கேல் ஜக்சனின் பெயரைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜக்சன் என்ற பெயரில் ஈமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலில் ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மின்னஞ்சல் கூறுகிறது. அடடா என்று ஆச்சரியப்பட்டுத் திறந்து பார்த்தால் அவ்வளவுதான் கணினி காலியாகி விடுகிறதாம்.

இந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் நமது கணினி மட்டுமல்லாது, யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம். அதேபோல, மைக்கேல் ஜக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.

கூட்டமைப்பினரை ஜனாதிபதி தனியாக சந்திப்பதற்கு தீர்மானம்

sampanthr.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களிடமே ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீண்டநேரம் தனியாகச் சந்தித்து பேசிய ஜனாதிபதி கூட்டமைப்பினரை அடுத்த வாரமளவில் தனியாக சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை அவர் இம்மாதத்திற்குள் சந்திப்பார் என்றும் அதற்கான அழைப்பு ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக விரைவில் அனுப்பப்படும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப 332 விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக 332 விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம் சிறந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி நியமனம் செய்யப்படவுள்ள 332 விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களுள் 131 பேர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் பெறும் பாடசாலையில் மூன்று வருடங்களும் மாகாணத்தில் 5 வருடங்களும் கடமையாற்றுவதுடன், எதிர்காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் இடம்பெறும்போது தாம் விரும்பிய மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலாம் என செயலாளர் உபுல் வீரவர்தன மேலும் தெரிவித்தார்.

வட கொரியா 4 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை

north-korea.jpgவட கொரியா நாடு கடந்த சில மாதங்களாக ஏவுகனைகளை விண்ணில ஏவி சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாடு சுமார் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. கடந்த மே மாதம் 25ம் திகதி வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதை கண்டு கொள்ளாத வட கொரியா அடுத்தடுத்து 4 தடவை அணு ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதித்துப் பார்த்தது.  இதையடுத்து அணு ஏவுகணைகளை சோதித்துப் பார்க்க வடகொரியாவுக்கு தடை விதித்து ஐ. நா. சபை தீர்மானம் கொண்டு வந்தது.

இதையும் வடகொரியா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணை ஆய்வில் அந்த நாடு ஈடு பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென 4 குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணைகள் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் சக்தி கொண்டவை.

இந்த சோதனை அண்டை நாடான தென்கொரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்து நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்க்க தயாராகி வருவதாக ஜப்பான் உளவுத் துறை கூறி யுள்ளது. தற்போது வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் சுமார் 6,700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களை இந்த ஏவுகணைகளால் தகர்க்க முடியும்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பெருமளவில் தங்க நகைகள் கண்டெடுப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் வெற்றி பெற்ற பிறகு, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 150 கிலோவுக்கும் அதிகமான தங்கமும், 800 க்கும் மேற்பட்ட தங்க வளையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.

இந்த நகைகள் பொதுமக்களால் விடுதலைப் புலிகளிடம் அடமானம் வைக்கப்பட்டதாகவோ அல்லது வெளியேறும் மக்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான உத்திரவாதமாகவோ கொடுத்திருக்கலாம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கின்றார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நகைகளை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணி முடிந்த பிறகு உரியவர்களை கண்டறிந்து உறுதி செய்யப்பட்டவுடன் நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள சில நகைகளில் அதன் உரிமையாளர் குறித்த குறிப்புகளும் இருந்தாலும், சிலவற்றில் எந்தவிதமான பதிவுக் குறிப்புகளும் இல்லை என்பதால் அது குறித்து எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த நகைகள் குறித்த பதிவுக் குறிப்புகளும் ஆவணங்களும் தயாரானவுடன், வவுனியாப் பகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் உள்ள மக்களிடையே இந்தச் செய்தி எடுத்துச் செல்லப்பட்டு உரிமையாளர்கள் அதை கோருவதற்கு வழி செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தற்போது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நகைகள் இராணுவத்தின் வசம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தொடர்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

கிழக்கில் ஆயுதக்களைவு தீவிரம்: முதற்கட்டம் காத்தான்குடியில் பூர்த்தி – அடுத்தகட்ட களைவு ஏனைய பிரதேசங்களில்

kattankudy.jpgகிழக்கில் ஆயுதக் குழுக்களை நிராயுத பாணிகளாக்கும் நடவடிக்கைகளைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைய காத்தான்குடி பகுதியிலுள்ள குழுக்கள் தமது ஆயுதங்களை நேற்று கையளித்ததாக கிழக்குப் பிரா ந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார். ஒப்படைக்காத குழுக்களை முற்றுகையிட்டு ஆயுதங்கள் பறிக்கப்படுமென்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவென நேற்றுப் பிற்பகல் மூன்று மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடு த்து, ரி 56 துப்பாக்கிள், ‘ஷொட்கன், ‘கல்கட்டாஸ்’ துப் பாக்கிகள் போன்றவற்றை பொலிஸார் சேகரித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோரைத் தேடி நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படமாட்டாதென்றும் கிழக்கு டி.ஐ.ஜி. தெரிவித்தார். இதேநேரம், ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழுக்கள் ஆயுதங்களை ஒப் படைப்பதற்கு வேறு திகதிகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக காத்தான்குடியில் ஆயுதக் களைவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குணதிலக, கிழக்கில் ஆயுதக் குழுக்களை நிராயுத பாணிகளாக்கும் நடவடிக்கை அடுத்து வரும் தினங்களில் தீவிரப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார். கிழக்கில் முதன் முதலாக ரி.எம்.வி.பீ. அமைப்பினர் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆயுதங்களைப் படையினரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.