புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பெருமளவில் தங்க நகைகள் கண்டெடுப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் வெற்றி பெற்ற பிறகு, புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 150 கிலோவுக்கும் அதிகமான தங்கமும், 800 க்கும் மேற்பட்ட தங்க வளையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.

இந்த நகைகள் பொதுமக்களால் விடுதலைப் புலிகளிடம் அடமானம் வைக்கப்பட்டதாகவோ அல்லது வெளியேறும் மக்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான உத்திரவாதமாகவோ கொடுத்திருக்கலாம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கின்றார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நகைகளை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணி முடிந்த பிறகு உரியவர்களை கண்டறிந்து உறுதி செய்யப்பட்டவுடன் நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள சில நகைகளில் அதன் உரிமையாளர் குறித்த குறிப்புகளும் இருந்தாலும், சிலவற்றில் எந்தவிதமான பதிவுக் குறிப்புகளும் இல்லை என்பதால் அது குறித்து எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த நகைகள் குறித்த பதிவுக் குறிப்புகளும் ஆவணங்களும் தயாரானவுடன், வவுனியாப் பகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் உள்ள மக்களிடையே இந்தச் செய்தி எடுத்துச் செல்லப்பட்டு உரிமையாளர்கள் அதை கோருவதற்கு வழி செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தற்போது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நகைகள் இராணுவத்தின் வசம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தொடர்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *