July

July

2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தும்

icc-world-cup-2011.jpgஇந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐசிசி.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போட்டியை கூட்டாக நடத்தவிருந்த பொருப்பிலிருந்து பாகிஸ்தானை விலக்கியது ஐசிசி என்பது நினைவிருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட 14 போட்டிகளையும் இந்தியா, இலங்கை, வங்கதேசத்திற்கு பிரித்துக் கொடுத்து விட்டது ஐசிசி.

ஆனால் இதை எதிர்த்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது நிலையில் எந்த மாறறமும் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில், பாகிஸ்தான் எடுக்கும் எந்த நடவடிக்கையும் போட்டியை, இந்தியா, வங்கதேசம், இலங்கை இணைந்து நடத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தெற்காசியாவை விட்டு போட்டித் தொடரை மாற்றும் எண்ணமே இல்லை. அதற்கான தேவையும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா, இலங்கை, வங்கதேசமே போட்டித் தொடரை நடத்தும் என்றார் மார்கன்.

இரான் தூதுரக பணியாளர்கள் விவகாரம் தொடர்கிறது

miliband_.jpgஇரானால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் ஒருவரை விடுதலைச் செய்வதற்கான ஆவணங்கள் கையொப்பமாகி விட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

இரானின் செயலால் தான் கடும் கோபமுற்று இருப்பதாக கூறிய டேவிட் மிலிபேண்ட், இவ்வாறு தொடர்ந்து வம்புக்கிழுக்கும் செயலை செய்து வந்தால் இரான் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

கடந்த மாதம் இரானில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நடைபெற்ற வன்முறையை பிரிட்டன் தூண்டி விட்டதாக இரான் குற்றம் சுமத்தி பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்: ஜனதிபதி

he_president.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் எனவும் ஆனால், சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது எனவும்  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார் என இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை மேற்கோள்காட்டி பீ.பீ.ஸி தமிழ் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ‘’13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்’’ குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும்,  ஆயினும்,  அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே தீர்வுத்திட்டம் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இந்த நாட்டில் ‘’சமஷ்டிக்கு’’ இடம் கிடையாது என்றும், தேசிய நல்லிணக்கத்துக்கு பல்லினங்களின் கலப்பு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: 

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களையும் விரைவில் மீளக் குடியமர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகுமெனவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பிரச்சினகைளுக்கும் தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது எனவும்,  தெரிவித்துள்ள ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர்,  இவற்றின் பிரதிபலன்களை விரைவில் காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.  இலங்கை மக்களின் சுபீட்சத்துக்காகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பொதிமுறை அறிமுகம்

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கமைய இதற்கான கலக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிஹேவா நேற்று தெரிவித்தார்.

இந்த புதிய பொதிமுறைக்கு வேலையற்றவர்களுக்கான சேமநலன் காப்புறுதி திட்டம்  என பெயரிடப்பட்டுள்ளது. தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்த நஷ்டஈடு கொடுப்பனவு ஒன்று இந்த பொதிமுறைக்கமைய வழங்கப்படும்.

இந்த புதிய பொதிமுறை தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சர் அதாவுத செனவிரட்னவுக்கு வழங்கியுள்ளதுடன், விஷேட குழுவொன்றையும் நியமித்துள்ளார். நிதி, தொழில் உறவுகள், கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள், மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச் சபை, ஊழியர், சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இக்குழுவில் அடங்குவர்.

இந்த பொதிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை தனது தலைமையில் கூடி ஆலோசனை செய்து, ஆரம்பக்கட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். தொழில் இழந்தவர்களுக்கு இந்த புதிய பொதிமுறைக்கமைய மாதாந்தம் நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழி லிழக்கும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்து 50 வீத கொடுப்பனவு சுமார் ஒருவருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திரும்ப தொழில் கிடைக்கும் வரை அல்லது இழந்த தொழில் மீண்டும் நியமிக்கப்படும் வரை இந்த தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரது தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி அவசர யோசனை முன்வைத்ததை அடுத்து தொழில் அமைச்சர் குறுகிய காலத்தில் இதற்கான திட்ட வரைபை தயாரித்து வருகின்றார். உலக பொருளாதார நெருக்கடியை அடுத்து கைத்தொழில் துறையைச் சேர்ந்த 6.5 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் தொழில்களை இழந்தனர்.

இந்நிலையில் உலக வங்கியின் அண்மைக்கால அறிக்கையின் படி மிகவும் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் ஏற்றுமதி துறை சிறிய பாதிப்புக்குள்ளான போதிலும், தற்பொழுது அது சீராகிவருகின்றது என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1994-1997 ஆம் ஆண்டு காலத்தில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற நெருக்கடிக்கு ‘சிரம வாசனா’ என்ற நிதியத்தை ஆரம்பித்து உரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்த திட்டம் புதிய பொதிமுறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்தேவி ரயிலில் தீப்பிடிப்பு: இரு பெட்டிகள் முற்றாக சேதம்

train.jpgயாழ்தேவி ரயில் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றிக்கொண்டது.

கொழும்பிலிருந்து நேற்றுக் காலை தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற யாழ்தேவி ரயிலிலே காலை 10.40 மணியவில் தீப்பிடித்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யாழ்தேவி ரயில் அநுராதபுரம் சாலியபுரம் ரயில்வே நிலையத்தை அடையும் தறுவாயிலேயே ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பரவியதாக அநுராதபுரம் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர் கூறினார்.

ரயிலின் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள பெட்டியிலேயே முதலில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் இத்தீ வேகமாக இரண்டாவது பெட்டிக்கும் பரவியுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தினால் அல்லோலகல்லோலம் அடைந்ததையடுத்து ரயில் திறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத் தீப்பிடிப்பு சம்பவத்தினால் பயணிகள் எவரும் பாதிப்படையவில்லையெனவும் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் யாழ்தேவியின் ரயிலின் ஒரு பெட்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றைய ரயில் பெட்டியும் பெருமளவு சேதமாகியுள்ளது. சிற்றுண்டிச்சாலை அமைத்துள்ள பகுதியிலேயே தீ ஏற்பட்டதனால் சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென்ற சந்தேகம் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாளர், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வாகனங்களில் இருக்கைப்பட்டி அணியாமல் பயணம் செய்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனங்களில் பயணம் செய்வோருக்கு இருக்கை பட்டி (Seat belt)கட்டாயப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் வாகன பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளை கருத்திற் கொள்ளும் போது வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகள் இருக்கைப் பட்டி அணியாமையினாலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பழைய வாகனங்கள் உட்பட சகல வாகனங்களிலும் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கமைய முதற் தடவையாக இருக்கைப்பட்டி அணியாமல் பிடிபடுபவர்களுக்கு 1000 ரூபா முதல் 2000 ரூபா வரைக்கும், இரண்டாவது தடவைக்கு 2000 ரூபா முதல் 3000 ரூபா வரைக்கும், மூன்றாவது தடவைக்கு 3000 ரூபா முதல் 4000 ரூபா வரைக்கும் அபராதம் அறவிடப்படவுள்ளது. அத்துடன் வாகன சாரதியின் அனுமதி பத்திரமும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றம்

யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாகக் குடியிருக்கும் குடும்பங்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.  திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ. அழகரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்சிராங்குடாவைச் சேர்ந்த 125 குடும்பங்களும் சாகாமத்தைச் சேர்ந்த 141 குடும்பங்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வட,கிழக்கு அபிவிருத்தியில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த பிரதமர் யோசனை

ratnasri-wickramanayake.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, காட்டுத் தர்பாருக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கோ இனிமேல் இடமளிக்கப்படாதெனவும் கூறினார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற பயிற்சி முடித்து வெளியேறும் படை வீரர்களுக்கான நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த நாட்டிலுள்ள ஒருபகுதி மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களை படுகொலை செய்யும் இராணுவம் எம்மிடம் இல்லை.  இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலும் காட்டுத் தர்பார் அதிகாரம் செலுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். அதே போன்றே ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டது. தற்போது எம் முன்னால் உள்ளது அபிவிருத்தி யுத்தமே. இதனையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அபிவிருத்தி திட்டமொன்றை முடிக்க ஒப்பந்தக் காரர்கள் மூன்று வருடங்கள் கோரினால் அதனை எமது படைவீரர்கள் சில தினங்களில் முடித்து விடுவார்கள்.

நீண்டகால வரலாறு கொண்ட எமது தாய்நாட்டை, அதன் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது படையினரின் பொறுப்பு. எமது படைவீரர்கள் உலகிலேயே சிறந்த வீரர்களாகவும் மிகவும் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.  எந்தவொரு சமூகத்திற்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்படியான சமூகமே முன்னேறும். ஒழுக்கமுடையவர்களால் ஒருபோதும் சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாது. இளைஞர்கள் அனைவருக்கும் எமது படைவீரர்களின் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் அனைவரையும் படையில் சேருமாறு நான் கூறுவதாக நினைக்கக் கூடாது.

பிரபாகரனின் செயற்பாடுகளினால் எமது நாடு 30 வருடங்கள் பின் தங்கிவிட்டது. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட கலிங்க மகான் என்ற மன்னருக்கு அடுத்த படியாக மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர் பிரபாகரன். உலகில் நிகழும் கொடூரமானவராக இருந்த அவரின் பயங்கரவாதத்திற்கு எம்மால் முடிவுகட்ட முடிந்திருக்கின்றது. இதற்கு படைவீரர்களின் அர்ப்பணிப்பே காரணமாகும்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்ட 281 படைவீரர்கள் நேற்று அங்கிருந்து வெளியேறினர். இவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம்பெற்றது.

நாளை நாடளாவிய ரீதியில் அரச மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் டாக்டர்கள் நாளை செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமாகியுள்ளதாகவும் பொது மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை, மருத்துவம் தொடர்பாக தமது சங்கம் தெரிவிக்கும் ஆலோசனைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்றுக்கொண்டாலும் சுகாதார அமைச்சர் அதனை ஏற்பதில்லை எனவும் இச் சங்கத்தின் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் உள்ளக நியமனங்கள், இடமாற்றங்கள் என்பன அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, நாட்டிற்கு சிறந்த மருத்துவ சேவை இடம்பெற வேண்டுமானால் சுகாதார அமைச்சர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் மேலும் தெரிவித்தது.

நாளை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் காசல் வைத்தியசாலை, லேடி றிச்வே ஆஸ்பத்திரி, மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் டாக்டர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1 கோடி 20 இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது

_arrested.jpgமாதம்பை யிலுள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை தொடர்பில் பிரதான சந்தேக நபரான ஆனமடு பிரதேசசபை உறுப்பினரொருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன்போது அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வான்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் கொஸ்வத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மாதம்பை நகரிலுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா சம்பளப் பணம் லுணுவில பாலத்தில் வைத்து பொலிஸ் சீருடையணிந்த சிலரால் கொள்ளையடிக்கப்பட்டது.

இக் கொள்ளையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை கொஸ்வத்தை பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரதான சந்தேக நபராக ஆனமடு பிரதேசசபை உறுப்பினர் இருப்பதாக சிலாபம் விசேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இனங்கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொள்கின்றனர்.