மாதம்பை யிலுள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை தொடர்பில் பிரதான சந்தேக நபரான ஆனமடு பிரதேசசபை உறுப்பினரொருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வான்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் கொஸ்வத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மாதம்பை நகரிலுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா சம்பளப் பணம் லுணுவில பாலத்தில் வைத்து பொலிஸ் சீருடையணிந்த சிலரால் கொள்ளையடிக்கப்பட்டது.
இக் கொள்ளையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை கொஸ்வத்தை பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரதான சந்தேக நபராக ஆனமடு பிரதேசசபை உறுப்பினர் இருப்பதாக சிலாபம் விசேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இனங்கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொள்கின்றனர்.