July

July

வன்னியில் உயிரிழந்தவர்களுக்காக ஆடி அமாவாசை தினத்தில் வழிபாடு

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான ஆத்மசாந்தி லோக மோட்ச வழிபாட்டு நிகழ்வு ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை இந்து அமைப்புகளின் ஒன்றியம் செய்திருப்பதாக அமைப்பின் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

யோகமோட்ச நிகழ்வுக் கிரியைகளை கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுரு இராஜ இராஜ ஸ்ரீ.க.நகுலேஸ்வரக்குருக்களும் மாவைக் கந்தன் ஆலய ஆதீன கர்த்தா மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக் குருக்களும் இணைந்து நடத்தி வைப்பார்கள். இந்நிகழ்வையொட்டி அடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து அமைப்புகளின் ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் வன்னி அகதிகளின் உறவுகளான 127 பேரின் பெயர்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான மரணக்கிரியைகள் கூட உறவுகளால் செய்யப்படவில்லை. சகல மக்களையும் இவ் ஆத்மசாந்தி வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் ஆடி அமாவாசை புனித நாளில் அவர்களுக்கான பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஊழலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களை வழங்குக – பாதுகாப்பு செயலாளர்

kottabaya.jpgகப்பம் அல்லது லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடும்; காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாதாள உலகக் கோஷ்டியினரைப் பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார். ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இரு பெண்களுக்கு பிணை

கடவுச்சீட்டில் மோசடி செய்து சிங்கப்பூர் ஊடாக ஜேர்மனி மற்றும் இத்தாலிக்குச் செல்ல முயன்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இரு இளம் பெண்களையும் தலா 20 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடீ அல்விஸ் அனுமதித்தார். கொட்டாஞ்சேனை மற்றும் கலேவெலயைச் சேர்ந்த யுவதிகளே குற்றஞ்சாட்டப்பட்டவர்களாவர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம்கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது

sun.jpg
சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம்கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

நாளை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் காலை 5.28 மணிக்கு ஆரம்பிக்கும்
காலை 6.21 மணிக்கு உச்சகட்டமாக 63 சதவீதம் அளவுக்கு கிரகணம் தெரியும். இந்த சூரியகிரகணம் 360 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், மிக நீண்ட அரிய சூரியகிரகணமாகும். முழு கிரகணம் (சூரியன் முழுமையாய் மறைவது) 6 நிமிடங்கள் 39 வினாடிகள் நீடிக்கும்.

இதை கருப்புக் கண்ணாடிகள் மூலமோ அல்லது கருப்பு பிலிம்கள் மூலமோ பார்க்கக் கூடாது. விஞ்ஞானிகளின் துணையுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பில்டர் கண்ணாடிகள் மூலம்தான் பார்க்கலாம். வெறும் கண்களாலோ, பாதுகாப்பில்லாத கண்ணாடிகள், பிலிம்கள் மூலமோ பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அச்சப்பட ஏதுமில்லை..

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முழுச் சந்திரன் சூரியனை மறைப்பது தான் சூரியகிரகணமாகும். இதில் அச்சப்பட எதுமில்லை. இது ஒரு மிக அழகிய வானியல் நிகழ்வாகும். இதை வெறும் கண்களால் பார்த்தால் கண்களுக்கு பாதி்ப்பு வரும் என்பதைத் தவிர வேறு எந்த விதத்திலும் அச்சப்பட தேவையில்லை.

அதே நேரத்தில் பூமியைப் போலவே சூரியன், நிலவு உள்பட அனைத்து கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. இதனால் தான் முழு நிலவுக் காலத்திலும் அமாவாசையின்போதும் கடல் மட்டம் உயர்வதும் குறைவதும் நடக்கிறது.

அந்த வகையில் நிலவும், சூரியனும் ஒரே கோட்டில் வரும்போது அவற்றின் மொத்த ஈர்ப்பு சக்தியிலும் புவியின் ஈர்ப்பு சக்தியிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும் அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

3 ஆவது டெஸ்ட் – முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் 299 ஓட்டம்

srilanka-cri.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று தொடங்கிய 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் சகல விக்கட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் கப்டன் சங்ககாரா முதலில் பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடப் பணித்தார். பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த குர்ரம் மன்சூர்முகமது யூசுப் இணைஇ நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைச்சதங்களைப் பூர்த்தி செய்தனர். இதில் சதத்தை நோக்கி முதலில் முன்னேறிய குர்ரம்இ எதிர்பாராத விதமாக சமிந்தவாஸின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 93 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் முகமது யூசுப் 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார்.

தற்போது துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இலங்கை நேரப்படி 2.30 மணி வரை 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

புத்தளத்தில் கற்கை நெறியையும் வதிவிட பயிற்சிகளையும் ஆரம்பிக்க ஏற்பாடு

புத்தளம் மாவட்டத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கற்கை நெறிகளையும், வதிவிட பயிற்சிகளையும் அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. என். எப். பெரேரா தெரிவித்தார்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் கிளையை புத்தளத்தில் விஸ்தரிப்பது தொடர்பான கூட்டமொன்று நேற்று புத்தளத்திலுள்ள கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே உபவேந்தர் பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உட்பட பகுதி தலைவர்கள் புத்தளம் நகருக்கு வருகை தந்தனர். வயம்ப பல்கலைக்கழக கற்கை நெறிகளை நடாத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். பிரதி அமைச்சர் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த உபவேந்தர்,
பிரதி அமைச்சர் பாயிஸ் எமது பல்கலைக்கழகத்தினை பொறுத்தவரை மிக முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார். அவரின் அமைச்சினூடாக நாம் நிறைய பிரயோசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வயம்ப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளன. இந்த தருணத்தில் எமது செயற்பாடுகளை புத்தளத்தில் விஸ்தரிப்பதில் பெருமை அடைகின்றார்.

உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்சார், ஊழியர்கள், நிபுணர்களுக்கு தேவையான கற்கை நெறிகளையும் பயிற்சி வகுப்புகளையும் புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம். குறிப்பாக விஞ்ஞான, விவசாய துறைசார் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகளை செய்கின்றோம். தெங்கு உற்பத்தி, கடல்சார் தொழில், விவசாய உற்பத்தி தொடர்பான டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புக்கள், பட்டப்பின் படிப்புக்களை புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம் என்று உபவேந்தர் தெரிவித்தார்.

யாழ்., வவுனியா தேர்தலில் பசப்பு வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாது – அமைச்சர் ரிஷாட்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தாத பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவே கணிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம், மலீஹாபுரம் மீள் குடியேற்றத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பதியுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பதியுத்தீன் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த ஒவ்வொரு மகனும் தமது மண்ணை நேசிப்பவனாக இருந்தால் தமது மீள் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், தமது பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் அரசுக்கு எதிராக செயற்படவே முடியாது.

மாறாக சில சுயேச்சைக் குழுக்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வாக்காகவே அமையும். ஆகவே ஜனாதிபதியும், அரசும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாழ்படுத்தி விடவேண்டாம். அதிகமான போர் வீரர்களை பலி கொடுத்து தாயக மண்ணை மீட்டுக்கொடுத்தமைக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எமக்கு ஆதரவு இல்லையே என்ற பழிச் சொல்லுக்கு வழிவகுத்து விடாதீர்கள்.

இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து உலக மக்களும் உன்னிப்பாக எம்மை அவதானி த்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிவு செய்யப்பட்டுள்ள 6200 வாக்குகளில் எத்தனை வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தமிழ்ச் சமூகம் சிங்கள சமூகம் என்பன ஜனாதிபதிக்கு பின்னே அணி திரண்டு நிற்கின்றன. ஜம்இய்யத்துல் உலமாக சபையினர் கூட அண்மையில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடாத்தியுள்ளனர். இப்படியிருக்கும்போது ஏன் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டும் ஜனாதிபதிக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியாது.

இன்று கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்தவர்களாக நிம்மதியுடன் வாழும் நிலை ஏற்பட ஜனாதிபதி வழி வகுத்துள்ளார். அதேபோன்று எமது சுதந்திரமான மீள் குடி யேற்றமும் இடம்பெற்று எமது இளம் சமுதாயத்தினர் மகிழ்வுடன் வாழவேண்டுமானால் அனைத்து மக்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது தாயக மண்ணை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு எமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்றார்.

சிங்களவர் அனுபவிக்கும் உரிமைகளை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் – அமைச்சர் நிமல்

பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமியப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான ஐக்கியத்தினை மேம்படுத்தவும், அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள், பிரதான கேந்திர நிலையங்களாக அமையும் அதேவேளை சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் பெருந்தோட்டத் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும். இம்மக்கள் எவ்வகையிலும், எமது அரசினால் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.ள

என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசினால் பொறுப்பேற்கப்பட்டு, நவீனமயப்படுத்தப்பட்ட வெலிமடை டவுன்சைட் பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது இலவச சுகாதார சேவையின் போது தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்கள் சமமான சேவையினைப் பெறல் வேண்டும். அந்நோக்கினடிப் படையிலேயே, பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன.

அரசின் இலவச சுகாதார சேவைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடையாமலிருந்து அம்மக்கள் புறக்கணிக்கப்பட்டமையே தோட்ட வைத்தியசாலைகள், அரசால் பொறுப்பேற்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினாலேயே பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை எவரும் மறுக்வோ, மறைக்கவோ முடியாது. பெருந் தோட்டப் பாடசாலைகளுக்கென 3179 ஆசிரிய நியமனங்கள், அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றவென மருந்துக் கலவையாளர்கள், தாதிகள், ஊழியர்கள் என்ற நியமனங்கள், சமூக தொடர்பாடல் நியமனங்கள் ஆகியன வழங்கப்பட்டதுடன், பாதைகள் அமைத்தல், குடிநீர் விநியோகத் திட்டங்களை ஏற்படுத்துதல், மலசலகூடங்களை அமை த்தல் போன்ற அடிப்படை வேலைத் திட்டங்களும் பெருந் தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன.

இவ்வேலைத் திட்டங்கள் தொடரவும், மேலும் புதிய வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவும், நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் ‘வெற்றிலை’ சின்னத்திற்கு வாக்களித்து, ஆளும் கட்சியை வெற்றியடைய வைக்க வேண்டும். அதனை, இம்முறை பெருந்தோட்ட மக்கள் நிறைவேற்றுவார்களென்று எதிர்பார்க்கின்றேன் எனக் கூறினார்.

‘லண்டன் மாப்பிளை’ ஓகஸ்டில் லண்டனில் படப்பிடிப்பு.

London Mappillaiகௌதம் விஷன்ஸ் நிறுவனம் பொலிவூட் சினி புறடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ‘லண்டன் மாப்பிளை’ திரைப்படம் பாரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. 90 வீதம் படப்பிடிப்புக்கள் லண்டனிலும் மிகுதி இராமேஸ்வரம் பகுதியிலும் படமாக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதி லண்டனில் படப்பிப்புக்கள் ஆரம்பமாகும் இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாகும். லண்டன் பிரஜையான ஆர் புதியவன்  இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சித் தளங்கள் இதுவரை எந்த இந்தியத் திரைப்படங்களிலும் வராத அனுமதி பெறமுடியாத இடங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகர் சத்தியராஜின் புதல்வி திவ்யா. இது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய எஸ். ஏல். பாலாஜி முக்கிய பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவுடன் வித்தியாசமான  பாத்திரத்தில் முதல் முதல் தோன்ற இருக்கிறார் காதல் சுகுமார். இவர்களுடன் சேர்ந்து கலக்கும் இன்னொரு நட்சத்திரம் மண் படத்தில் தன் நடிப்பால் பாராட்டைப் பெற்ற விஜித்.

ஓளிப்பதிவு சி.ஜே. ராஜ்குமார். நடனம் எஸ்.எல். பாலாஜி. படத்தொகுப்பு சுரேஸ் அர்ஸ். தமிழகம் தலையசைத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் அற்புதமான ஜந்து பாடல்களுடன் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் பாலாஜி. கே. மித்திரன். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்துடன் தனது வசனங்களால் பிரமிப்பூட்ட வருகிறார் வசனகர்த்தா வசந்த் செந்தில். பாடல்களை இயக்குனர் புதியவனும் ஏக்நாத் அவர்களும் எழுதியுள்ளனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர் புதியவன்.

படப்பிடிப்புக் காலத்தில் சினிமாப் பயிற்சிப் பட்டறை ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புதியவன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அப்போது இந்தக் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட இருக்கிறது.

பக்ரீறியா நுண்ணங்கியை பயன்படுத்தி நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட திட்டம்

dengu_1.gif

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கியூபாவில் பயன்படுத்தப்படும் பக்ரீறியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கென இன்று (21ம் திகதி) கொழும்புக்கு வந்து சேரும் அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள், நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராயவிருக்கின்றனர்.

இந்நாட்டில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி. ரி. ஐ. என்ற நுண்ணங்கி பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கென குறித்த பக்ரீறியா தொடர்பான நிபுணத்துவ சேவை வழங்கவென இரு மருத்துவ நிபுணர்களை கியூபா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் கடந்த சனியன்று கொழும்புக்கு வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் விமானப் பயணத் தாமதம் காரணமாக இவ்விரு மருத்துவ நிபுணர்களும் இன்று கொழும்புக்கு வந்து சேர்வர் என்று சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் ஒரு வாரகாலம் இந்நாட்டில் தங்கி இருப்பர். இக்காலப் பகுதியில் இவர்கள் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் இம்மருத்துவ நிபுணர்களுடன் பி. ரி. ஐ. பக்ரீறியா நுண்ணங்கி தொடர்பாக இலங்கை மருத்துவ நிபுணர்களும், பக்ரீறியா நுண்ணங்கி ஆய்வாளர்களும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இக்கலந்துரையாடலின்போது பி. ரி. ஐ. பாவனையின் மூலம் கிடைக்கப் பெறும் நன்மை தீமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து குறித்த பக்ரீறியாவை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.