22

22

இறைச்சிக்காக விலங்கு உற்பத்தியென்ற திட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் -ஐ.தே.க.எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா

sri-lanka-parliment.jpgஇறைச் சிக்காக விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தை இல்லா தொழிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா, விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் அரசின் திட்டத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தசட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்டம் தொடர்பில் ஐ.தே.க.வுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இந்தச் சட்டமானது பால் உற்பத்தியை பாதிப்புக்குள்ளாக்கும் விதமாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ அல்லது இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் கொல்லப்படுவதை தடுப்பதாகவோ மட்டும் இருக்கக் கூடாது.

ஆடு,மாடு,பன்றி, எலிகள் கூட இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. விலங்குகள் மீது கருணைகாட்டுகின்ற சட்டமாக இருந்தால் இறைச்சிக்கான விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தையே இல்லாதொழிக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் இணங்குகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் . மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்போது கூட அரசியல் நிறம்பார்த்தே வழங்கப்படுகின்றன. கால்நடை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர். அவர்கள் யாரின் பட்டியல்களை முன்வைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

கறவை மாடுகள் அறுக்கப்படுவதை நாம் உண்மையாக எதிர்க்கின்றோம். எனவே அமைச்சரின் இந்த திட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.

காயமடைந்த படையினருக்கு சிகிச்சையளிக்க மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

medicine.jpgகாயம டைந்த படைவீரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன வியாழக்கிழமை சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மறுத்துவிட்டார்.

அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ரணவீர பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

“அநுராதபுரம் வைத்தியசாலையில், காயமடைந்த படையினருக்கும் நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சை செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே’ என்று ரணவீர பத்திரன இதன்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,”” அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அங்கு ஒரேயொரு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில், அது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்கு அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதை அடுத்து, தற்போது தருவிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று கூறினார்.

அத்துடன், அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பேசியதன் மூலம் அங்கு மருந்துப் பொருட்களில் எந்த தட்டுப்பாடுகளும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், தான் இப்போது தொடர்பு கொண்டு பேசிய போது அநுராதபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான இரு அத்தியாவசிய மருந்துகள் இல்லையென கூறப்பட்டதாக ரணவீர பத்திரன எம்.பி. மீண்டும் தெரிவிக்கவே;

“ஜே.வி.பி. யிடம் 23 வைத்தியர்களைக் கொண்ட சங்கமொன்று உள்ளது. இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதே இவர்களது வேலை. 8,594 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 8,593 ஐப் பற்றி பேசாமல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் என்பது கடையில் சென்று சீனி வாங்குவதைப் போல தருவிக்க முடியாது’ என்று சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.

வீட்டை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்த இலங்கைப் பெண்

bahrain.jpgபஹ்ரெய் னின் வீடொன்றில் பணிபுரிந்த இலங்கைப் பணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவ்வீட்டைத் தீக்கிரையாக்கியதுடன் தானும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் பணிபுரிந்த மரியம்மா பெருநான் (வயது 32) எனும் பெண்ணே வீட்டின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்கிரையாக்கியுள்ளதாக நம்பப்படுவதாக கல்வ் டெய்லி நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இவ்விபத்தையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அவ்வீட்டினுள் சுயநினைவற்ற நிலையிலிருந்த பஹ்ரெய்னைச் சேர்ந்த இரு பிள்ளைகளைக் காப்பாற்றியதுடன், அவ்வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாகவிருந்த அப்பணிப் பெண்ணின் உடலையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஏ.ஏ.எம். அல் ஹமாடா தெரிவிக்கையில்;

ஆயிஷா (வயது 21), தலால் (வயது 15) ஆகிய இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இப் பணிப்பெண் வீட்டிற்கு தீயிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தலால் சுகயீனம் காரணமாக பாடசாலை செல்லாமையாலும் பஹ்ரெய்ன் பல்கலைக்கழகமொன்றின் மாணவியான ஆயிஷாவிற்கு அன்று மதியமே வகுப்புகள் இருந்ததாலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்றார்.

வீட்டிலிருந்து புகையேறுவதைக் கண்ட அயலவர்கள் அச்சமயத்தில் வெளியே சென்றிருந்த அல் ஹமாடாவின் மனைவிக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

புகையை சுவாசித்தமையால் சுயநினைவற்ற நிலையிலிருந்த இருபிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேர சிகிச்சையைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இப் பணிப்பெண் கடந்த 8 மாதங்களாக இவ்வீட்டிலேயே பணிபுரிந்தார் எனவும் இவர் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையிலேயே பணியாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் அல் ஹமாடா தெரிவித்தார்.

மேலும், இப்பணிப் பெண் தூக்கிட்டுக் கொள்வதற்கு சற்று முன்னர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் எனவும் அதுவே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இப் பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட தொலைபேசி பொலிஸாரால் மீட்கப்பட்ட போதிலும் அது மிக மோசமாக சேதமடைந்த நிலையிலிருந்தது.

இத்தீவிபத்து தொடர்பாக அவசர அழைப்பையடுத்து காலை 11.09 மணியளவில் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டதுடன், இறந்த பணிப் பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது என அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விபத்து மண்ணெண்ணெயை வீடு முழுவதிலும் ஊற்றி எரிக்கப்பட்டதாலேயே ஏற்ப்பட்டுள்ளதென்பதை அவ்வமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

ஆயினும் எவ்விதமான எரிகாயங்களும் காணப்படவில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியை ஏற்க இலங்கை தயார்

puthumaattalan-hospital.gifமோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்திருக்கின்றது.

பொதுமக்களின் துன்பம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகளவு அக்கறைகொண்டுள்ளது என்றும் இது தொடர்பான இந்தியாவின் உணர்வுகளை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான தனது ஆர்வத்தை இந்தியா முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று ஜயசிங்க கூறியுள்ளார். ஆனாலும் களநிலை யதார்த்தத்திலேயே இது தொடர்பான தீர்மானம் தங்கியிருப்பதாக கொழும்பு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் திட்டம் தொடர்பான விபரங்கள் பின்னர் தயாரிக்கப்படும். இது களநிலைவரத்தைப் பொறுத்ததாகும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு புலிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்.

சகல பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வன்னியில் மோதலுக்கிடையே அகப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்ததை தூதுவர் ஜயசிங்க வரவேற்றுள்ளார்.

“இதுவொரு ஆக்கபூர்வமான அறிக்கை. களநிலை யதார்த்தத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் அறிக்கையாக அது உள்ளது. சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதை வெளிப்படுத்தும் அறிக்கை அதுவெனவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

ஒபாமாவுக்கு ஹமாஸ் கடிதம் செனட்டர் ஹெரியிடம் கையளிப்பு

hamas.jpgகாஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் செனட்டர் ஹெரியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான கடிதம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் கையளித்துள்ளனர். இக்கடிதமானது காஸாவிலுள்ள ஐ.நா.வின் உதவி அமைப்பின் மூலமே செனட்டர் ஜோன் ஹெரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அதிகாரி கரேன் அபு தெரிவித்தார்.

ஆனால், இக்கடிதத்தை ஜோன் ஹெரி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ அக்கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகவோ ஐ.நா.வின் அதிகாரி அபு எதுவும் தெரிவிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் காஸாவை ஹமாஸ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து ஹமாஸ் போராளிகளை தீவிரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதிவருவதுடன், எதுவித பேச்சுகளையோ உடன்படிக்கைகளையோ ஏற்படுத்தவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதற் தடவையாக விஜயம் செய்யும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரியாக ஹெரி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான பிரையன் பைர்ட் மற்றும் கெய்த் எலிசன் ஆகியோரும் ஹெரியுடன் இணைந்து காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவினரை சந்திக்க விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்பு உள்ளிட்ட உதவி நிறுவனங்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்த விஜயம் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடனான உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்தார்.