காயம டைந்த படைவீரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன வியாழக்கிழமை சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மறுத்துவிட்டார்.
அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ரணவீர பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.
“அநுராதபுரம் வைத்தியசாலையில், காயமடைந்த படையினருக்கும் நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சை செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே’ என்று ரணவீர பத்திரன இதன்போது தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,”” அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அங்கு ஒரேயொரு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில், அது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்கு அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதை அடுத்து, தற்போது தருவிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று கூறினார்.
அத்துடன், அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பேசியதன் மூலம் அங்கு மருந்துப் பொருட்களில் எந்த தட்டுப்பாடுகளும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
எனினும், தான் இப்போது தொடர்பு கொண்டு பேசிய போது அநுராதபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான இரு அத்தியாவசிய மருந்துகள் இல்லையென கூறப்பட்டதாக ரணவீர பத்திரன எம்.பி. மீண்டும் தெரிவிக்கவே;
“ஜே.வி.பி. யிடம் 23 வைத்தியர்களைக் கொண்ட சங்கமொன்று உள்ளது. இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதே இவர்களது வேலை. 8,594 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 8,593 ஐப் பற்றி பேசாமல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் என்பது கடையில் சென்று சீனி வாங்குவதைப் போல தருவிக்க முடியாது’ என்று சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.