இறைச் சிக்காக விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தை இல்லா தொழிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா, விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் அரசின் திட்டத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தசட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்டம் தொடர்பில் ஐ.தே.க.வுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இந்தச் சட்டமானது பால் உற்பத்தியை பாதிப்புக்குள்ளாக்கும் விதமாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ அல்லது இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் கொல்லப்படுவதை தடுப்பதாகவோ மட்டும் இருக்கக் கூடாது.
ஆடு,மாடு,பன்றி, எலிகள் கூட இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. விலங்குகள் மீது கருணைகாட்டுகின்ற சட்டமாக இருந்தால் இறைச்சிக்கான விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தையே இல்லாதொழிக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் இணங்குகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் . மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்போது கூட அரசியல் நிறம்பார்த்தே வழங்கப்படுகின்றன. கால்நடை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர். அவர்கள் யாரின் பட்டியல்களை முன்வைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
கறவை மாடுகள் அறுக்கப்படுவதை நாம் உண்மையாக எதிர்க்கின்றோம். எனவே அமைச்சரின் இந்த திட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.