“பொது மக்களுக்குத் தகவல்களை வழங்கவேண்டியது ஊடகவியலாளரின் பொறுப்பாகும். அத்தகைய தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் பொறுப்பினை நிறைவேற்றி வருகின்றவர்களுக்கு சட்டவிரோதமான முறைகளில் தடைகளை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ருவிர வெலிவத்த தெரிவித்துள்ளார்.
“லங்கா தீப’ பத்திரிகையின் செய்தியாளரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியமை மற்றும் அவரது பணிகளுக்குத் தடை ஏற்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்த வேளையிலேயே நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.
லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் அத்துல பண்டார சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சந்தன வீரக்கோன் “விஸ்வமடு பிரதேசத்தில் பயங்கரவாதிகள் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களையடுத்து மிகவும் மோசமாகக் காயமுற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவரின் அழைப்பின் பேரில் அத்துல வைத்தியசாலைக்குச் சென்றவேளையில், சந்தேகநபரின் பலத்த தாக்குதலுக்காளானதாகவும் அக்காட்சிகள் ஏனைய ஊடகவியலாளரின் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் விளக்கினார்.
ஊடக நிறுவனங்களின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய முக்கிய தகவல்களுக்குத் தடை ஏற்பட்டது எனவும், ஊடகவியலாளரின் கடமைக்கு எவரும் குந்தகம் செய்வதை அனுமதிக்க முடியாதெனவும் மற்றுமொரு சிரேஷ்ட சட்டத்தரணியான ராஜ்கருணா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் அத்துல பண்டாரமீது இவ்வாறு தாக்குதல் நடாத்திய சந்தேக நபரான ஜீ.ஏ.சாந்த ஹரிஸ்சந்குர என்பவரை 7500 ரூபா ரொக்கப் பிணையிலும், 30 ஆயிரம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு உத்தரவு வழங்கிய நீதிவான் ருவிர வெலிவத்த, மாதாந்தம், இறுதி ஞாயிறு தினங்களில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் பணித்தார்.
palli
புலம்பெயர் ஜனனாயகவாதிகள் கூட இதை தெரிந்து கொள்வது நல்லது. பின்பு அந்த ஊடகம் அரைக்குது இந்த ஊடகம் அசையுது என கைஎழுத்து சேட்டையெல்லாம் விடப்பாடாது.