காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் செனட்டர் ஹெரியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான கடிதம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் கையளித்துள்ளனர். இக்கடிதமானது காஸாவிலுள்ள ஐ.நா.வின் உதவி அமைப்பின் மூலமே செனட்டர் ஜோன் ஹெரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அதிகாரி கரேன் அபு தெரிவித்தார்.
ஆனால், இக்கடிதத்தை ஜோன் ஹெரி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ அக்கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகவோ ஐ.நா.வின் அதிகாரி அபு எதுவும் தெரிவிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் காஸாவை ஹமாஸ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து ஹமாஸ் போராளிகளை தீவிரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதிவருவதுடன், எதுவித பேச்சுகளையோ உடன்படிக்கைகளையோ ஏற்படுத்தவில்லை.
ஹமாஸ் அமைப்பினர் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதற் தடவையாக விஜயம் செய்யும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரியாக ஹெரி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான பிரையன் பைர்ட் மற்றும் கெய்த் எலிசன் ஆகியோரும் ஹெரியுடன் இணைந்து காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவினரை சந்திக்க விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்பு உள்ளிட்ட உதவி நிறுவனங்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்த விஜயம் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடனான உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்தார்.