அவசர மனிதாபிமான தேவைகளுக்கென 10 மில். டொலர்களை வழங்க ஐ.நா முடிவு – அரசுடன் இணைந்து செயற்படவும் ஹோம்ஸ் விருப்பம்

John_Holmes_UNமோதல் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் சிவிலியன்களுக்கான அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார். இதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை இருதரப்பும் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறிய அவர், இதனை உறுதிப்படுத்துவதற்காக, மோதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாமென அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் கோருவதாகக் கூறினார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்காக அவர்களைப் பதிவு செய்யும் பணிகளையும், விசேட அடையாள அட்டை வழங்கும் நடைமுறையையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் ஹோம்ஸ், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இன்று (21) பிற்பகல் செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இது நடந்தது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மானிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்றபோது அதனை நன்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும், குறைபாடான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவிலியன்கள் தொடர்பாகத்தான் கவலையாக இருக்கிறது. புலிகளின் பிரதேசத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக செயற்பட அவர்கள் அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். எனது விஜயத்தின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர்களைச் சந்திக்க அரசு இடமளித்தது என்று தெரிவித்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தம்மைச் சந்தித்த ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸிடம் ஜனாதிபதி மஹிந்த சமரசிங்க மீள வலியுறுத்தியதாகக் கூறினார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்தவாறே இராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்த அவர், சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தால் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் தெரிவித்தார். அதேநேரம் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமூக, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ¤க்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் ஜோன் ஹோம்ஸ் விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் பிரதிநிதிகள் என்போரை விடுத்து, உண்மையான கலந்துரையாடல் நடத்தப்படுவதை ஹோம்ஸ் விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் பொதுமக்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டென்றும் கூறினார்.

சிவிலியன்களுடன் கலந்து புலிகள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வருவதாகக் கூறிய அமைச்சர் இவ்வாறு வந்தவர்களுள் 250 பேர் தம்மை புலி உறுப்பினர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்களுள் 32 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள், பதிவுகள் நிறைவடைந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்க அதிபரிடம் சிவிலியன்களை ஒப்படைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘புலிகள் இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது, அவர்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். இது இறைமையுள்ள ஒரு நாடு. எந்த முடிவையும் நாம் சுதந்திரமாக மேற்கொள்ள உரிமை உண்டு’, என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பட்ட, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *