17

17

‘இலங்கையில் தினமும் 40 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு.’ ஐநா : த ஜெயபாலன்

வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர்.

UN_Logoபுலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் இதனால் சிலர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நேற்று (பெப் 16) ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச அமைப்பொன்று குற்றம்சாட்டியது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே புலிகள் மக்களைத் தடுத்த வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியேறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள உத்தியோகபூர்வமான அறிவிப்பாக இது அமைந்து உள்ளது.

ஐநா வின் இக்குற்றச்சாட்டு புலிகளுக்கு மீகுந்த அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன் புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெப் 16 ஐநா வின் நாளாந்த செய்திக் குறிப்பில் இலங்கையில் தினமும் 40 பேர் கொல்லப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பாதுகாப்பு கவுன்சிலிடம் தனது அவதானத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஆசிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஐநா செயலாளர் நாயகம் இலங்கை ஜனாதிபதியுடனும் உரையாடி இருந்தார். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இவ்வுரையாடல் பற்றியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐநா உள்ளுர் பணியாளர்கள் 15 பேர் மற்றும் அவர்களில் தங்கியிருப்போர் 75 பேர் யுத்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா பணியாளர்களில் ஒருவரையும் புலிகள் பலாத்காரமாக தங்கள் படையணியில் சேர்த்து உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஐநா அவ்விளைஞரை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளதுடன் பொது மக்களை பலாத்காரமாக தங்கள் படைகளில் சேர்பதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.

வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.

மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்.

மேலும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்கள் புலிகளுடன் ஏதோவிதத்தில் தொடர்புடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் பொறுப்பெற்க வேண்டும். மேலும் சரணடைபவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்கள் ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.

தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளமை மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர். வன்னி மக்களின் வாழ்வு இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

புலம்பெயர் நாடுகளில் வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களிலும் பார்க்க புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்கும் நடவடிக்கைகளே தீவிரமாக உள்ளது. ‘போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் செய்வார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை’ என்றெல்லாம் விளக்கமளிக்கும் புலம்பெயர் உறவுகள் உயிருக்கு ஊசலாடும் அந்த மக்களின் காதிலும் பூ வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார்: தமிழக மருத்துவ மாணவர்கள்

medicine-01.jpgஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா,  இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.

புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக தாலிபான்கள் செயல்படுகின்றனர்: அமெரிக்க சிறப்புத் தூதர்

holbrooke_.jpgபாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாவில் 25 கிராமங்களில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்

world-bank-01.jpgகிராம மட்டங்களிலான அடிப்படை மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பயனை அம்மக்களுக்கு வழங்குவதன் அவசியம் உணரப்பட்டு வரும் நிலையில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பணிகளை நல்ல முறையில் முன்னெடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி பரவலாக்குவது தொடர்பில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வட மாகாணத்தின் அனைத்து துறைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது இதற்கு கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலின் போது மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உட்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்திற்கு உட்பட்டுள்ள 25 கிராமங்களின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் புதிய முகங்கள்; முன்னாள் உறுப்பினர்கள் பலர் தோல்வி

election_ballot_.jpgமத்திய மாகாண சபைக்கு இம்முறை பல புது முகங்கள் தெரிவாகியுள்ள அதேவேளையில் முன்னாள் உறுப்பினர்களுள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் பேசும் உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட துரை மதியுகராஜா (இ. தொ. கா), எஸ். செல்லமுத்து (இ. தொ. கா.), கந்தசாமி யோகராஜா ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்களாவர். இக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான றிஸ்வி பாரூக், ஏ. எல். எம். உவைஸ், எம். நிஸார் ஆகியோரும் குறைந்த விருப்பு வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். சிவஞானம் இ. தொ. கா., மாத்தளை மேயர் ஹில்மி கரீம் ஆகியோரும் தோல்வி கண்டுள்ளனர்.

ஐ. தே. கட்சி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட எம். எச். எம். இப்ராஹிம், எம். சுதாகரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் வெற்றியீட்டிய அதேவேளை முன்னாள் அமைச்சரான எஸ். அருள்சாமி, திருமதி அனுஷா சிவராஜா, புதிய வேட்பாளர்களான பழனி சத்யவேல், எல். பாரதிதாஸன், மயில்வாகனம் வேலு, கனகரத்தினம், கருப்பையா பிள்ளை, ஏ. கே. கல்யாண குமார் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

இதே மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி சார்பில் போட்டியிட்ட மருதபாண்டிய ரமேஷ், இராமசாமி முத்தையா ஆகிய இருவர் முதன் முறையாக மாகாண சபைக்குத் தெரிவாகி உள்ளனர்.

ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். சதாசிவம், கணபதி கனகராஜ், பீ. ஈ. திகாம்பரம் ஆகியோரும் புதிய முகம்களான பிரகாஷ் கணேஷ், உதயகுமார் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக மாகாண சபைக்கு வருகிறார்கள்.

எஸ். முருகையா, முரளி ரகுநாதன், எல். ஆர். நேருஜி, எம். ஆர். எம். ஹில்மி, எஸ். கிருஷ்ணகுமார், ஏ. ஏ. ஹரிச்சந்திரன் ஆகிய புதிய வேட்பாளர்களும் ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர். இதேவேளை ஐ. ம. சு. சார்பில் ஒரு பெண் உறுப்பினர் தெரிவாகி உள்ளார். இவர் திருமதி கேஷலா ஜயவர்த்னா என்பவர் ஆவார்.

ஐ. தே. கட்சி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான சித்ரா மன்திலக்க, ஷாந்தினி கோங்கஹகே ஆகியோரும் மீண்டும் தெரிவாகி உள்ளனர். ஐ. தே. கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் உறுப்பினர்களான எஸ். இராஜரட்ணம் எம். ஆர். எம். அம்ஜாத், எஸ். எம். எம். மர்ஜான், எம். எஸ். எம். ஷாபி ஆகியோர் தெரிவாகி இருப்பதுடன் புதிய உறுப்பினராக ஜெயினுலாப்தீன் லாபீர் தெரிவாகி இருக்கிறார். முன்னாள் உறுப்பினர் எம். நைமுல்லா இம்முறை தோல்விகண்டுள்ளார்.

சிவிலியன்களை பாதுகாப்பாக குடியமர்த்த செட்டிக்குளத்தில் மேலும் 100 ஏக்கர் காணி

vanni.jpgவன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் சிவிலியன்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு நேற்று அமைச்சர் ரிஷாட் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள், படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அதிகரிப்பு

justice.jpgஅடிப் படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 156 மனுக்கள் கூடுதலாக தாக்கல்செய்யப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2007 இல் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக 456 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ள அதேசமயம் 2008 இல் 621 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 398 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 2008 இல் உயர்நீதிமன்றத்துக்கு தாக்கல்செய்யப்பட்ட சில மனுக்கள் மீது சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதையும் சட்டத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தில் இந்தமாதம் ஆறாம் திகதிவரை அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக 84 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்.குடாநாட்டில் அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர் பாதிப்பு

medicine.jpgயாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அரசினர் வைத்திய சாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சிட்டைகளை ஆஸ்பத்திரி மருந்தகத்தில் கொடுத்தால், அந்த மருந்துகள் முடிவடைந்துவிட்டதாகவும், தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருந்து வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். விமான மூலம் மருந்துகளை எடுத்துவருவதால் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் உள்ள மருந்து வியாபாரிகள் கப்பல் மூலமே மருந்துகளை எடுத்து வருகின்றனர். விமான மூலம் டாக்டர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மருந்துகளை கொண்டுவரலாம். இதனால் முக்கியமான நோய்களுக்குரிய மருந்துகளை நோயாளிகள் அதிக விலைக்கே வாங்கிப் பாவிக்கின்றனர்.

குடாநாட்டில் தற்போது கடும் பனியும் கடும் வெயிலும் காணப்படுவதால் சளி, இருமல் போன்ற சுவாச நோய்களால் சிறுவர்கள் முதல் முதியோர் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவசர நோயாளர்களுக்குரிய மருந்து வகைகளை எதுவித கட்டணமும் இன்றி விமான மூலம் எடுத்து வந்து யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் மருந்துத் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ajmal.jpgமும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை  ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான

சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.

அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.

மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.