மும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது. மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான
சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.
அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.
மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.