19

19

ஜனநாயக முகமூடியுடன் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதாக ரணில் விசனம்

ranil-2912.jpg“நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜனநாயக சக்திகள் பலம் கொண்டதாக அமையவேண்டும்’ என வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எமது நாட்டில் அண்மைக்காலமாக ஜனநாயக முகமூடி அணிந்து கொண்ட சர்வாதிகாரமே தலைவிரித்தாடுவதாக விசனம் தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தையும் அடிப்படை மனித உரிமை மறுப்பு, ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளிலிருந்தும் நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து ஜனநாயக சக்திகளும் தம்மைப்பலப்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும்’ ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; “எம்மோடுள்ள மக்கள் நாம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம்” என்றே கேள்வியை எழுப்பி வருகின்றனர். எம்மோடு இணைந்துள்ளவர்களும் அடுத்த கட்டம் எவ்வாறுள்ளதாக இருக்கவேண்டுமென கேட்கின்றனர். எமது அடுத்த பணி ஜனநாயகத்தை பாதுகாத்து அரச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாகவே இருக்கவேண்டும். இந்தப்பணி அவ்வளவு  இலகுவானதாக இருக்கமுடியாது. ஏனெனில் வன்முறை அரசியல் கலாசாரத்தை எவராலும் தனித்து நின்று போராடி வெல்லமுடியாது. எனவே நாம் முதலில் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். ஜனநாயகசக்திகள் பலமடைந்தால் மட்டுமே அடக்குமுறைகளை தோற்கடிக்கும் வலிமையையும் பெறமுடியும்.

முதலில் எமது கட்சியைப் பலப்படுத்தவேண்டும். அடுத்து எம்மோடு இணையக்கூடிய ஜனநாயக சக்திகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் 2009 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் நாடளாவியரீதியில் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை மேலும் பலமடையச் செய்யும் பொறுப்பு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமே தங்கியுள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். மூன்று மாதங்களுக்கிடையில் இந்தப் பலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த மக்கள் சக்தியை கட்டியெழுப்பியதும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அரவணைத்துக் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் திட்டத்தை மேற்கொள்ள விருக்கிறோம்.

அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரபோக்கு அடக்கு முறைகளுக்குப் பதிலடி கொடுக்கக்கூடிய மக்கள் சக்தியை அணி திரட்டுவதே எமது தற்போதைய பிரதான பணியாகும்.  வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம். அங்கு தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, உபதலைவர் ருக்மன் சேனாநாயக்கா ஆகியோரடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலான பொது வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா , விஜித அபேவர்தன ஆகியோருடன் சேர்ந்து ஏனைய ஜனநாயக சக்திகளை இணைத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் வெற்றிகளோடு நாட்டின் இறைமை, ஜனநாயகம் என்பவற்றை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுயகௌரவத்துடன் செயற்பட விரும்புவதாலேயே அரசுடன் இணைந்து செயலாற்ற முடியவில்லை – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgமுஸ்லிம் சமூகத்தின் சுயகௌரவத்திற்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கெலிஓயா கலுகமுனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றால் தாராளமாக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், சமூகத்தின் கௌரவம் பாதிக்கப்படும் போது எப்படி அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க முடியும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சுயகௌரவத்துடன் செயற்பட வேண்டியுள்ளதாலேயே அரசுடன் இணைந்து செயற்படமுடியவில்லை. அரசிலிருந்து வெளியேறியமையாலேயே தற்போது என்னால் முஸ்லிம் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து செல்ல முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எமது சுயகௌரவத்தை மதித்து நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதனுடன் கூட்டுச்சேர தீர்மானித்தோம். இதனால் நன்மை கிடைக்கும் என்பதும் எமது நம்பிக்கை. மேலும், மாகாண சபைகளில் ஏற்கனவே இருந்த ஆசனங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு. மக்கள் வேட்பாளர்களை நன்கு எடை போட்டு சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முல்லையில் புலிகளின் மோட்டார் தளம், முன்னரங்குகள் மீது விமான தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புலிகளின் மோட்டார் தளம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 24 ரக விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் 59வது படைப் பிரிவுகளுக்கு உதவியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்கு வைத்து நேற்றுக் காலை 10.55 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரணைமடு குளத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த மோட்டார் தளத்திலிருந்தே படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இந்தத் தாக்குதலில் அந்த தளம் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொலை அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக மங்கள சமரவீர எம்.பி. தெரிவிப்பு

mangala_2.jpgகொலை அச்சுறுத்தல் தனக்கு அதிகரித்திருப்பதாகவும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  இது தொடர்பில் கொழும்பில் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையானது உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகங்களை மௌனிக்கச் செய்யுமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு தாக்குதலையும் நான் கண்டிக்கின்றேன். தற்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு கொலை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் என்னை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்துக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் உள்ளது.எனவே என பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவுக்கு கடிதம் எழுதவுள்ளேன். நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை உருவாவதற்கு அமெரிக்காவில் பிரஜாவுரிமை மற்றும் கிரின்காட் உள்ளவர்களே காரணமாகவுள்ளனர். எனவே இதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மனுவொன்றை கையளித்துள்ளோம். இதனை அமெரிக்க அரசின் புதிய இராஜாங்க செயலாளரிடம் 20 ஆம் திகதி கையளிக்கவுள்ளோம். இதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தாம் அவரிடம் கேட்கவுள்ளதாகவும் தெரிவித்தார

பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

flag_uk.jpgபிரிட்டனிலுள்ள குடியேற்றவாசிகள் அந்நாட்டுப் பிரஜாவுரிமை பெற விண்ணப்பிக்க 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும். புதிய பரீட்சைகள் மற்றும் நீண்ட நன்னடத்தைக் காலம் என்பவை தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளால் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க குடியேற்றவாசியொருவருக்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசாங்கத்தின் இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் (2009) இறுதிப்பகுதியில் இவை அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யோசனைகளில் “குடிவரவு வரி’ யும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வித்துறை சேவைகளுடன் இந்த வரி மேலதிகமான அழுத்தத்தை குடியேற்றவாசிகளுக்கு ஏற்படுத்தும். தற்போது பிரிட்டனின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதாயின் 6 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும். ஆனால், புதிய யோசனைகளின் பிரகாரம் 10 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.

ஆங்கிலமொழி ஆற்றல், வரிசெலுத்திய பதிவுகள், சமூகத் தொடர்பாடல் பதிவுகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை நிரூபிப்பதை உறுதிப்படுத்துவதாக இந்த நன்னடத்தைக் காலம் உள்ளது. சிறிய குற்றங்கள் மற்றும் பரீட்சைகளில் சித்தியடையாவிடின் நன்னடத்தைக்காலம் மேலும் நீடிக்கப்படும். பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சோதனைகளில் சித்தியடையும் வரை பிரிட்டிஷ் பிரஜையாக வரும் வரை வெளிநாட்டவர்கள் சில அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

சபரிமலையில் கைதான இலங்கை ஐயப்ப பக்தர்களை விடுவிக்க துரித நடவடிக்கை

handcuff.jpgஇந்தியாவின் சபரிமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 20 ஐயப்பபக்தர் களையும் விடுவிப்பதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா நேற்றுத் தெரிவித்தார்.

சபரிமலைக்கு திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கேரள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தார். இதற்கமைய தூதரகத்தின் அதிகாரியொருவர் நேற்றுக் காலை விமானம் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி சென்றிருப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சபரிமலை செல்வதற்காக இந்தியா சென்றிருந்த 28 இலங்கைத் தமிழர்களை கொண்ட குழு திருச்சியிலுள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து கடந்த வியாழக்கிழமை சபரிமலையில் ஏறினர். இக்குழுவினர் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மலையிருந்து இறங்கிக் கொண்டிருக்கும்போதே கேரள பொலிஸாரால் சோதனைக்குள்ளாகியுள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த 08 பேரிடமே கடவுச்சீட்டு உள்ளிட்ட தகுந்த ஆவணங்கள் இருந்துள்ளன. ஆவணங்கள் எதுவுமில்லாத ஏனைய 20 பேரும் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுள் 18 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.

இவர்கள் தமது கடவுச்சீட்டுக்களை திருச்சியில் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளனர். கேரள பொலிஸார் தமிழக பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியதையடுத்து அவர்களது கடவுச் சீட்டுக்களை அனுப்பி வைப்பதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா தெரிவித்தார்.

வன்னி மக்களின் பாதுகாப்புக்கு அமைதி வலயங்கள் உடன் தேவை – ஜனாதிபதியிடம் ஆயர்கள் கூட்டாக வலியுறுத்து

truck.jpgவன்னியில் போருக்குள் சிக்குண்ட அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு, அங்கு அமைதி வலயங்களையும் அமைதி இடைவெளிகளையும் உடன் அமைப்பது அவசியம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர் ஐந்து ஆயர்கள். யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம். வன்னி நிலப்பரப்பானது தற்போது குடிசன அடர்த்தி மிகுந்த, அளவிலான குறுகிய பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்ட சில சம்பவங்களைப் பற்றி எம்மில் ஒருவர் (யாழ்.ஆயர்) அண்மையில் தங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.

எனவே பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதானால் அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும். குறைந்தபட்சம் சிறுவயதினருக்கும் அவர்களுக்குத் துணையாக வரும் முதியோருக்கு இவை பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வேண்டுகோள் முன்னரே நாம் விடுக்கப் பட்டதாகும். இதை நாம் மீண்டும் எடுக் கூறுகிறோம். செஞ்சிலுவை  சர்வதேச குழுவும் சுதந்திரமான ஒரு தமிழ் தலைமைத்துவமும் இந்தச் செயற்பாட்டில் பங்குகொண்டால் நம்பிக்கையைபெற துணைபுரியும். சமத்துவமான குடிமக்களாக வாழ தடைஇருக்கக்கூடாது

போரின்பின் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தேடல் நடவடிக்கையைகள் தவிர்க்க முடியாதவை என்பது விளக்கத்தக்கதே. புலிப்போராளிகள் கண்டுபிடிக்கப்படின் சட்டபடி அவர்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படல் வேண்டும். ஆயினும் எல்லாப் பொதுமக்களையும் ஒட்டுமொத்தமாக பயங்கரவாத சந்தேக நபர்களாக நடத்தாமல் இருப்பதில் மிகுந்த கவனம் எடுக்கப்படல் வேண்டும். வன்னியில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருக்கவே செய்யும் இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு காரணமாயிருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் நாம் அறிவோம். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இந்த நாட்டின் சமத்துவமான குடிமக்களாக வாழுவதற்கு இது தடையாக இருந்தலாகாது.

உண்மையில் நாட்டின் சம உரிமையுள்ள இக் குடிமக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வாய்புக்கள் ஜனாதிபதி என்ற முறையில் தங்களது முதன்மையிலும் வளிகாட்டலிலும் பெரும்பாலும் தங்கியிருக்கும். இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டபின் குடாநாட்டிலும் கிழக்கிலும் நிகழ்ந்த துன்பகரமான சம்பவங்கள் மீண்டும் நிகழலாம்.”இனந்தெரியாத” ஆள்கொலை, கடத்தல் செயல்களில் ஈடுபட்டு அச்சத்தையும், கலவரத்தையும் ஈடுபடுத்துவார்கள். ராணுவத் தீர்வின் வெற்றி அரசியல் தீர்வை மறைத்துவிடக்கூடாது

இந்த மக்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு முக்கிய தேவை ஒன்று உண்டு. மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தாமதமின்றி கொண்டுவருவது அத்தேவை. “இராணுவத்தீர்வின் வெற்றி அரசியல் தீர்வின் அவசித்தை மறைத்துவிடும்.” என்ற பேரச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. இந்த அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். இதன் பயனாக இராணுவ நடவடிக்கையில் இருந்து சிவில் நிர்வாகத்திற்கும் அதன்பின் பங்கேற்கும் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், சட்ட ஒழுங்கிற்கும் இட்டுச்செல்லும் இடை மாற்றம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குடாநாட்டிலும் கிழக்கிலும் காணப்படுகின்ற ராணுவ, சிவில் இரட்டை நிர்வாகம் போன்ற நிலைமைகள் தொடர்ந்து இருக்கும்.

இப்போது இருக்கும் நிலைமைகள் இப் பிரதேசத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதையும் தமது அபிப்பிராயங்களை வெளியிடுவதையும் தடைசெய்து ஜனநாயக சுதந்திரத்தை பறித்து விடுகின்றன என்பது நன்கு அறியப்பட்டது ஒன்றாகும். தாங்கள் பன்முறை கூறியது போல அப்போரின் நோக்கம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழ் மக்களை விடுவிப்பதே அகும் என்பதால் குடாநாட்டிலும், கிழக்கிலும், வன்னியிலும் உள்ள தமிழர்கள் இந்த தடைக் கட்டுகள், சந்தேகங்கள், வன்முறைகள் ஆகிய பயங்கர இன்னல்களில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் – என்று உள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான இறுதி யுத்தத்திற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

president.jpg
பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்திற்கான ஆணையினை எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை வரவேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தினை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் தீர்மானித்து ஆணைவழங்க வேண்டும். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்தினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். இந்நிலையில் இறுதி யுத்தத்தை முறியடிப்பதற்காக முயற்சித்து வருவதனால் அவர்களுக்கு பாடம் புகட்டி அரசுக்கு ஆணைவழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட வைத்தியர்கள் 67 வயதின் பின்னரும் சேவையாற்றலாம் – வடமாகாண சுகாதார செயலர் தகவல்

surgery.jpgவட மாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் தாம் விரும்பினால் 67வயதுக்குப் பின்னரும் சேவை புரிய விண்ணப்பிக்கலாம் என வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நிறுவனத் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார். வடமாகாண சுகாதார சுதேச  வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகை தந்த செயலாளர் அன்று பி.ப. 2மணிக்கு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மகாநாட்டு மண்ட பத்தில் நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது நிறுவனத் தலைவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் பின்வருமாறு தெரிவித்தார்.

சேவையில் இருந்து இளைப்பாறிய வைத்தியர்களை மீளவும் 67 வயது வரை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தலாம் என்பது அரசு சுற்றறிக்கை. ஆனால் யாழ். மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் களின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு 67 வயதுக்குப் பின்னரும் இவர்களை ஒரு வருடகாலத்திற்கு சேவையாற்ற அனுமதிக்க முடியும். ஆனால் இக் காலப்பகுதியில் இவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படும்.

யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

cm.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலையில் கிழக்கு மாகாணப் பிரதம செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர்.கே. விக்னேஸ்வரன், ஊடகப்பேச்சாளர் ஆஸாத் மௌலானா ஆகியோர் பங்குபற்றினர். யு.எஸ்.எயிட் அமைப்பின் தலைமைப் பணிப்பாளர் ரிபெக்கா கொய்ன், யு.எஸ். பசுபிக் கமாண்ட் தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் என். கொனன்ட் (தந்திரோபாயக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்), தெற்காசியப்பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கல் சி பெற்றிகு? அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பாதுகாப்பு அதிகாரி லோறன்ஸ் ஏ. சிமித் ஆகியோரும் பங்குபற்றிய இச்சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.