வன்னியில் போருக்குள் சிக்குண்ட அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு, அங்கு அமைதி வலயங்களையும் அமைதி இடைவெளிகளையும் உடன் அமைப்பது அவசியம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர் ஐந்து ஆயர்கள். யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வன்னிப் போர்க்களத்தில் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கவனமாக திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தங்களிடம் மனதார வேண்டுகின்றோம். வன்னி நிலப்பரப்பானது தற்போது குடிசன அடர்த்தி மிகுந்த, அளவிலான குறுகிய பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்ட சில சம்பவங்களைப் பற்றி எம்மில் ஒருவர் (யாழ்.ஆயர்) அண்மையில் தங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.
எனவே பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதானால் அமைதி வலயங்களையும் அமைதி இடைவளிகளையும் அமைப்பது அவசர தேவையாகும். குறைந்தபட்சம் சிறுவயதினருக்கும் அவர்களுக்குத் துணையாக வரும் முதியோருக்கு இவை பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வேண்டுகோள் முன்னரே நாம் விடுக்கப் பட்டதாகும். இதை நாம் மீண்டும் எடுக் கூறுகிறோம். செஞ்சிலுவை சர்வதேச குழுவும் சுதந்திரமான ஒரு தமிழ் தலைமைத்துவமும் இந்தச் செயற்பாட்டில் பங்குகொண்டால் நம்பிக்கையைபெற துணைபுரியும். சமத்துவமான குடிமக்களாக வாழ தடைஇருக்கக்கூடாது
போரின்பின் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தேடல் நடவடிக்கையைகள் தவிர்க்க முடியாதவை என்பது விளக்கத்தக்கதே. புலிப்போராளிகள் கண்டுபிடிக்கப்படின் சட்டபடி அவர்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படல் வேண்டும். ஆயினும் எல்லாப் பொதுமக்களையும் ஒட்டுமொத்தமாக பயங்கரவாத சந்தேக நபர்களாக நடத்தாமல் இருப்பதில் மிகுந்த கவனம் எடுக்கப்படல் வேண்டும். வன்னியில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருக்கவே செய்யும் இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு காரணமாயிருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் நாம் அறிவோம். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இந்த நாட்டின் சமத்துவமான குடிமக்களாக வாழுவதற்கு இது தடையாக இருந்தலாகாது.
உண்மையில் நாட்டின் சம உரிமையுள்ள இக் குடிமக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வாய்புக்கள் ஜனாதிபதி என்ற முறையில் தங்களது முதன்மையிலும் வளிகாட்டலிலும் பெரும்பாலும் தங்கியிருக்கும். இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டபின் குடாநாட்டிலும் கிழக்கிலும் நிகழ்ந்த துன்பகரமான சம்பவங்கள் மீண்டும் நிகழலாம்.”இனந்தெரியாத” ஆள்கொலை, கடத்தல் செயல்களில் ஈடுபட்டு அச்சத்தையும், கலவரத்தையும் ஈடுபடுத்துவார்கள். ராணுவத் தீர்வின் வெற்றி அரசியல் தீர்வை மறைத்துவிடக்கூடாது
இந்த மக்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு முக்கிய தேவை ஒன்று உண்டு. மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தாமதமின்றி கொண்டுவருவது அத்தேவை. “இராணுவத்தீர்வின் வெற்றி அரசியல் தீர்வின் அவசித்தை மறைத்துவிடும்.” என்ற பேரச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. இந்த அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். இதன் பயனாக இராணுவ நடவடிக்கையில் இருந்து சிவில் நிர்வாகத்திற்கும் அதன்பின் பங்கேற்கும் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், சட்ட ஒழுங்கிற்கும் இட்டுச்செல்லும் இடை மாற்றம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குடாநாட்டிலும் கிழக்கிலும் காணப்படுகின்ற ராணுவ, சிவில் இரட்டை நிர்வாகம் போன்ற நிலைமைகள் தொடர்ந்து இருக்கும்.
இப்போது இருக்கும் நிலைமைகள் இப் பிரதேசத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதையும் தமது அபிப்பிராயங்களை வெளியிடுவதையும் தடைசெய்து ஜனநாயக சுதந்திரத்தை பறித்து விடுகின்றன என்பது நன்கு அறியப்பட்டது ஒன்றாகும். தாங்கள் பன்முறை கூறியது போல அப்போரின் நோக்கம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழ் மக்களை விடுவிப்பதே அகும் என்பதால் குடாநாட்டிலும், கிழக்கிலும், வன்னியிலும் உள்ள தமிழர்கள் இந்த தடைக் கட்டுகள், சந்தேகங்கள், வன்முறைகள் ஆகிய பயங்கர இன்னல்களில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் – என்று உள்ளது.
accu
//இந்த மக்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு முக்கிய தேவை ஒன்று உண்டு. மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தாமதமின்றி கொண்டுவருவது அத்தேவை. “இராணுவத்தீர்வின் வெற்றி அரசியல் தீர்வின் அவசித்தை மறைத்துவிடும்.” என்ற பேரச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. இந்த அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். // நிச்சயமான உண்மை. இந்த அச்சம் புலம்பெயர் நாட்டில் வாழும் பலரிடம்[சாதாரணமானவர்கள்] காணப்படுகிறது. இது சொல்லால் அல்ல செயலால் நிரூபிக்கப்பட வேண்டும். பாவப்பட்ட எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் மதிப்புக்குரிய ஆயர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றிகள்.