சபரிமலையில் கைதான இலங்கை ஐயப்ப பக்தர்களை விடுவிக்க துரித நடவடிக்கை

handcuff.jpgஇந்தியாவின் சபரிமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 20 ஐயப்பபக்தர் களையும் விடுவிப்பதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா நேற்றுத் தெரிவித்தார்.

சபரிமலைக்கு திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கேரள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு வேண்டியிருந்தார். இதற்கமைய தூதரகத்தின் அதிகாரியொருவர் நேற்றுக் காலை விமானம் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி சென்றிருப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சபரிமலை செல்வதற்காக இந்தியா சென்றிருந்த 28 இலங்கைத் தமிழர்களை கொண்ட குழு திருச்சியிலுள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து கடந்த வியாழக்கிழமை சபரிமலையில் ஏறினர். இக்குழுவினர் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மலையிருந்து இறங்கிக் கொண்டிருக்கும்போதே கேரள பொலிஸாரால் சோதனைக்குள்ளாகியுள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த 08 பேரிடமே கடவுச்சீட்டு உள்ளிட்ட தகுந்த ஆவணங்கள் இருந்துள்ளன. ஆவணங்கள் எதுவுமில்லாத ஏனைய 20 பேரும் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுள் 18 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.

இவர்கள் தமது கடவுச்சீட்டுக்களை திருச்சியில் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளனர். கேரள பொலிஸார் தமிழக பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியதையடுத்து அவர்களது கடவுச் சீட்டுக்களை அனுப்பி வைப்பதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹுசைன் ஏ. பைலா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *