January

January

விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை

kili-04.jpg
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இவ்வாறு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகிட் கூறுகையில், இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார் டூகிட்.

முல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்

mi24-1912.jpg
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மற்றும் பலமான நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. – 24 ரக விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டானுக்கு வடகிழக்கே உள்ள புலிகளின் பலமான நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை 6.15 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு தெற்காக முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினருக்கு உதவியாக நேற்றுக்காலை 6.15 மணியளவிலும் 10.30 மணியளவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது செயலணியினருக்கு உதவியாக பரந்தன் முல்லைத்தீவு வீதியை நோக்கி நேற்றுப் பிற்பகல் 1.15 மணியளவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு களப்பு பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளம் ஒன்றை இலக்கு வைத்து நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் விமானப் படையின் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்த கடற்புலிகள் முல்லைத்தீவிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆணையிறவு, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கடற்புலித் தளம், ஆயுத முகாம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து நேற்று முன்தினம் பத்துத் தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு

rambukwella.jpg
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.  எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.

மத்திய வங்கி குண்டுவெடிப்பு பிரதான சந்தேக நபர் கைது

centralbank.jpgமத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பான பிரதான சந்தேக நபரை வவுனியா இரட்டைபெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர், வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிகாரவின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய வங்கி குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது. மாவட்ட நீதிவான் சந்தேக நபரை, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பொலிஸார் பொதுமக்களிடையே நல்லுறவுகளை பலப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும்’

blast.jpg பொலிஸாருக்கும் ,பொதுமக்களுக்குமுள்ள நல்லுறவுகள் பலப்படுத்தப்படும் போதே குற்றச் செயல்களை பெருமளவில் குறைக்க முடியும். ஆகையால் பொலிஸாருக்கு பொதுமக்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் மத்துரட்ட தெரிவித்தார். பசறை மியன்கந்துர கிராமத்தின் சமூகதிட்ட மொன்றினை ஆரம்பித்து வைத்ததன் பின் அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் தலைமை வகித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது, மியன்கந்துர ஏத்பிட்டிய கிராமியப்பாதை சீரமைப்பு, வைத்திய சிகிச்சை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை போன்ற வேலைத்திட்டங்களை பதுளை பொலிஸ் அதிகாரி சுனில் மத்துரட்ட வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;” தற்போதைய நிலையில் பொலிஸாரை பலவாறாக விமர்சிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பொலிஸார் மிகவும் மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் தொடர்பாக எமக்கு கிடைக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் கவனத்திற்கு எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்ற புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற விடயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொலிஸாருடனான நல்லுறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படவேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களினால் எப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மியன்கந்துர போன்ற பின்தள்ளப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதற்கமைவான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவேண்டும்.

அதுவே மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான நல்லுறவுகள் பேணப்படவேண்டும்’ என்றார்

மூன்று முறைப்பாடுகள் – பவ்ரல் அறிவிப்பு

vote.jpg
தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பிற்கு இது வரை மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாவட்டங்களிலும் நிலையங்களை அமைத்து வன்முறை தொடர்பில் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவிக்கையில் கூறியதாவது;

வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டது முதல் இன்று(03) வரை நாம் மூன்று தேர்தல் வன்முறைகளை பதிவு செய்துள்ளோம். நேற்று முன்தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி ஹோங்ககே தனதுதேர்தல் அலுவலகத்தை அமைத்த போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது சகோதரி காயமடைந்துள்ளார். இதற்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர்தல் வன்முறை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ததினமான டிசம்பர் 31 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. மற்றைய மூன்றாவது சம்பவமும் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் நாம் 5 மாவட்டங்களிலும் எமது நிலையங்களை அமைத்து அவதானித்து வருவதுடன் இதனை அவதானிப்பதற்கு இரு மாகாணங்களிலும் 3 ஆயிரம் பேரை நாம் பயிற்சியளித்து நியமித்துள்ளோம் . 2,400 பேர் நிலையாகவும் 600 பேர் நடமாடியும் இதனை அவதானிக்கவுள்ளனர்.தற்போது இரு மாகாணங்களிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆள் அடையாள அட்டை இல்லாமையால் வாக்களிக்க முடியாது வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளனர். இதனால் இவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம் என்றார

நுவரெலியாவில் கடும் பனி; இயல்பு நிலை ஸ்தம்பிதம் -தோட்டத் தொழிலாளர்கள் மோசமாக பாதிப்பு

நுவரெலியா பிரதேசத்தில் பனிமழை பெய்யும் காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெய்த பனி மழையினால் நுவரெலியா, கந்தப்பளை,ஹைபொரஸ்ட் , நானுஓயா, ரதல்ல போன்ற இடங்களிலுள்ள தோட்டங்களில் தேயிலை கொழுந்துகள் கருகிப் போயுள்ளது. தற்போது நுவரெலியாவில் இரவில் வழமை நாட்களை விட குளிர் அதிகமாகவும் பகலில் சூரிய வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே இப்பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் வேலைநாட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.

தற்பொழுது பனியினால் தேயிலை கொழுந்து கருகியதால் மேலும் வேலைநாட்கள் குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேலும் இப்பிரதேச தோட்ட தொழிலாளர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றார்கள். இதேவேளை, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு , பீட் , கரட், உட்பட மரக்கறி செடிகளும் புற்தரைகளும் கருகிப்போயுள்ளன. உருளைக் கிழங்கு , மரக்கறி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரம் , மருந்து விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இயற்கை பனியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இப்பகுதியிலுள்ள புற்தரைகளும் கருகியதால் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பவர்களும் கால்நடைகளுக்கு உணவு தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நுவரெலியாவில் பனி காலம் ஆரம்பித்ததையடுத்து இப்பகுதி மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் – தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

kili-01.jpgகிளி நொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம்  கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்

0301-bush.jpgஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.

அரசகட்டுப்பாடற்ற பிரதேசம் நியமனம்பெற்ற பட்டதாரிகளுக்கு டக்ளஸ் தற்காலிக ஏற்பாடு

daglas.jpgஅரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான ஆசிரியர் நியமனம் பெற்ற யாழ். குடாநாட்டு பட்டதாரிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் தங்களால் பணி செய்வதற்குச் செல்ல இயலாதுள்ள நிலைமை மற்றும் ஏனைய இடையூறுகள் குறித்து இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேற்படி, ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாகாண பிரதான செயலாளர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதற்கு இணங்க இப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு யாழ். குடாநாட்டில் தற்காலிக ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கும் இவர்களுக்கான ஊதியங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.