முல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்

mi24-1912.jpg
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மற்றும் பலமான நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. – 24 ரக விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டானுக்கு வடகிழக்கே உள்ள புலிகளின் பலமான நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை 6.15 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு தெற்காக முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினருக்கு உதவியாக நேற்றுக்காலை 6.15 மணியளவிலும் 10.30 மணியளவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது செயலணியினருக்கு உதவியாக பரந்தன் முல்லைத்தீவு வீதியை நோக்கி நேற்றுப் பிற்பகல் 1.15 மணியளவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு களப்பு பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளம் ஒன்றை இலக்கு வைத்து நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் விமானப் படையின் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்த கடற்புலிகள் முல்லைத்தீவிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆணையிறவு, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கடற்புலித் தளம், ஆயுத முகாம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து நேற்று முன்தினம் பத்துத் தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *