நுவரெலியா பிரதேசத்தில் பனிமழை பெய்யும் காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெய்த பனி மழையினால் நுவரெலியா, கந்தப்பளை,ஹைபொரஸ்ட் , நானுஓயா, ரதல்ல போன்ற இடங்களிலுள்ள தோட்டங்களில் தேயிலை கொழுந்துகள் கருகிப் போயுள்ளது. தற்போது நுவரெலியாவில் இரவில் வழமை நாட்களை விட குளிர் அதிகமாகவும் பகலில் சூரிய வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே இப்பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் வேலைநாட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.
தற்பொழுது பனியினால் தேயிலை கொழுந்து கருகியதால் மேலும் வேலைநாட்கள் குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேலும் இப்பிரதேச தோட்ட தொழிலாளர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றார்கள். இதேவேளை, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு , பீட் , கரட், உட்பட மரக்கறி செடிகளும் புற்தரைகளும் கருகிப்போயுள்ளன. உருளைக் கிழங்கு , மரக்கறி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரம் , மருந்து விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இயற்கை பனியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இப்பகுதியிலுள்ள புற்தரைகளும் கருகியதால் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பவர்களும் கால்நடைகளுக்கு உணவு தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நுவரெலியாவில் பனி காலம் ஆரம்பித்ததையடுத்து இப்பகுதி மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.