புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுண்டிக்குளம் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்தப் பிரதேசத்தை இன்று (14.01.2009) மாலை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதன்போது இராணுவம் யாழ் தீபகற்பத்தை முழுமையாக விடுவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது
January
January
தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு பலியாகி வரும் தருணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்வதாக அதை நியாயப்படுத்தி வருகிறது அரசு. அரசின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக தெற்கின் இனவாதிகள் உக்கிர பணி செய்துவருகிறார்கள். ராஜபக்ச சகோதரர்கள் தமது கூலிக்குழுக்களை வைத்து கட்டற்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி பக்கச்சார்பற்ற குரலை ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகிற இத்தருணத்தில் துணிந்து எழும் ஒவ்வொருவரும் சாவை நோக்கியே எழுகிறார்கள். சமரசமற்ற ஊடகவியலை செய்ய விரும்பிய லசந்த தனக்கு சாவு நிச்சயம் என்று நம்பியிருந்ததில் யாருக்கும் ஆச்சரியம் வரப்போவதில்லை. ராஜபக்ச மன்னராட்சிக்கு எதிராக மூச்சு பேச்சு வரமுடியாத படிக்கு வன்முறை குழுக்கள் -கைக்கூலிகள் பயக்கெடுதி பரப்பி வைத்திருக்கிறார்கள்.
சன்டே லீடர் லசந்தவின் கொலை ராஜபக்ச அதிகாரத்தின் திரையை உலகுக்கு கிளித்து காட்டியுள்ளது. அரசின் யுத்த முன்னெடுப்புகளின் பின்னிருக்கும் அதிகார வெறியையும் மனித உரிமை மீறல்களையும் ஊழலையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது இக்கொலை.
ஊடகத்துக்கெதிரான வன்முறையில் இலங்கை உலகின் முன்ணனி நாடு. அதிலும் தற்போதய அரசு ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை புதிய உச்சத்துக்கு இட்டுசென்றுள்ளது. இந்த போக்குக்கு எதிராக நாம் கடும் எதிர்ப்பு கிளப்பியாக வேண்டும். மக்களை வேட்டையாடிக்கொண்டு அதை எழுத முற்பட்ட ஒரு தரமான ஊடகவியலாளனை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளிக்கொண்டு சர்வாதிகாரம் செய்யும் இந்த அரசுக்கெதிரான எல்லாவித எதிர்ப்பையும் நாம் செய்தாகவேண்டும்.
லசந்தவின் கொலையை கண்டித்து ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ (Committee for Worrkers International) பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.
இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 4.30 மணிக்கு, இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடக்க இருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இந்த எதிர் நடவடிக்கைக்கு முழு ஆதரவும் வழங்கி கலந்து கொள்ளுங்கள். நன்றி
தேசம்நெற்
எக்சைல் யேர்னலிஸ்ட் நெட்வேர்க் –
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள;
சேனன் 07908050217
ஜெயபாலன் 07800596786
இக்கொலை சம்பந்தமாக ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ வெளியுட்டுள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. (இது நேரடி மொழிபெயர்ப்பல்ல)
கடந்த 8ம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரதுங்க கொல்லப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
எம் ரி வி நிலையதின் மேலான காடைத்தனமான தாக்குதல் நடந்து மூன்று மணித்தியாளத்துக்குள் இன்னுமொரு முக்கிய ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கையில் தொடரும் ஊடகவியலாளர் மேலான அரச வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். துணிந்து உண்மையை கதைக்க நினைப்பவர்களை ராஜபக்ச அரசு எவ்வாறு அடக்க முயலுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களும் நல்ல உதாரணம்.
உண்மைகள் – இலங்கை மக்கள் படும்துன்பங்கள் வெளியில் வராமல் இருக்க இந்த அரசு எதைச்செய்யவும் தயாராக இருக்கிறது. புலிகளுக்கு எதிரான தமது புதிய வெற்றி பெருமித்துடன் அரசின் அட்டூளியங்கள் கேட்பாரற்று கூடிக்கொண்டிருக்கிறது. தமது ஊழல்களையும் சர்வாதிகார முறைகளையும் கபடமாக மறைக்கவும் இவர்கள் ஊடகங்களுக்கு எதிராக தமது பலத்தை காட்டி வருகிறார்கள்.
நாட்டின் மிக முக்கியமான ஒரு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இக்கதி, சாதாரண மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் போராளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பக்கசார்பற்ற ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைவாதிகள் தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்ட தனியார் விசாரனைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட யுத்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகளும் சரியாக விசாரிக்கப்படவேண்டும்.
யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரச எதிர்தரப்பினரையும் ஊடகவியலாளர்களையும் கொல்வதும் தாக்கப்படுவதும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
ஊடகங்களுக்கான உண்மையான சுதந்திரம் வழங்கப்படுவதுடன் ஜனநாயக மனித உரிமைகள் மீளமைக்கப்படவேண்டும்.
மும்பையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து தெற்காசிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் நாளை இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு நாளை மாலை வரும் மேனன் அடுத்தநாளே நாடு திரும்பவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க எதிர்பார்த்திருக்கும் மேனன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை பெப்ரவரி இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் அமைச்சர்களுக்கான மாநாடு தொடர்பாகவும் இவர் கலந்துரையாடவுள்ளார்.
![]()
தமிழர்களுடைய தனிப்பெரும் பண்டிகை பிறக்கிறது. இச்சமயத்தில் மலையக சமுதாயம் பல துறைகளிலும் சுபீட்சமடைய வேண்டுமென வாழ்த்துகின்றோம். உழவர்கள் அறுவடை கண்டு மகிழ்ச்சி அடையும் ஒரு நன்நாள் இதுவாகும். இவ்வாறு அமைச்சரும், இ. தொ. கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- மலையக சமுதாயத்தில் அன்று தொட்டு இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் போராடியும் சாணக்கியமான அணுகு முறைகளாலும் பரஸ்பர பேச்சுவார்த்தைகளாலும் ஈட்டித் தந்துள்ளது. இது நாங்கள் பெற்ற அறுவடைகளாகும்.
இந்த நாட்டின் அரசியலில் பங்கெடுத்துள்ளோம், எனவே ஏனைய சமூகங்களுக்குரிய உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் ஆகியவை முழுமையாக எங்கள் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும். அதுவே எங்களுடைய இலட்சிய நோக்கமாகும்.
இவற்றையெல்லாம் அடைவதற்காக முழு வீச்சில் எம்பணிகளை நாம் முன்னெடுத்து செல்வோம். இதற்கு முழு சமுதாயமும் ஒருங்கிணைந்து அமோக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி மென்மேலும் எமது இ. தொ. காவை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது இலட்சியப் பணிகளை ஒருக்கிணைத்து மேற்கொள்ள இந்த பொங்கல் பெருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக.
![]()
அடிப்படை உரிமைகள் மனு மீதான உயர்நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்மானத்திற்கும் அரசியலமைப்பின் 188 ஆவது சரத்தின் பிரகாரம் நிறைவேற்றதிகாரம் (ஜனாதிபதி) இணங்க வேண்டும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பெற்றோலின் விலையை லீற்றர் 100 ரூபாவாக ஏன் குறைக்க முடியாதென்பதற்கான காரணத்தை தெரிவிப்பதற்கு ஜனவரி 27 வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நேற்று எரிபொருள் விலை மற்றும் ஹெட்ஜிங் தொடர்பான அண்மைய விடயங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலனைக்கெடுத்து பரந்துபட்ட அளவில் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை குறைத்திருப்பதுடன் பெற்றோல் விலையையும் குறைத்திருப்பதாகவும் திறைசேரியின் செயலாளருக்காக ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் எஸ். இராஜரெட்ணம் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். அதேவேளை, நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் தமது வாடிக்கையாளருக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஏனெனில் சுங்கத்தீர்வை விலக்கை அளிக்க அரசாங்கம் தவறிவிட்டதால் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2008 டிசம்பர் 17 இல் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஏன் அமுல்படுத்த முடியாது என்பதற்கான காரணத்தை திறைசேரி செயலாளர் தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்பினால் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.
லாவ் காஸ் தலைவர் டபிள்யூ.கே. எச் வேகல் பிட்டிய, ரவி கருணாநாயக்கா எம்.பி. மற்றும் இருவர் உட்பட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்படாவிடின் தமது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்களென நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டால் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்காக ஜனவரி 27 இல் விசாரணை இடம் பெறவுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்யமாட்டார். சிலவேளை இந்தோனேஷியாவுக்கு அல்லது கம்போடியாவுக்கு தப்பியோடலாமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் முரளிதரன் எம். பி. (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் வெளிவரும் மாலை மலர் பத்திரிகைகக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
“பிரபாகரன் தப்பி ஓடப்பார்க்கிறார். நான் அவருடன் இருந்தவன். அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். பிரபாகரன் இந்தோனேஷியாவுக்கோ கம்போடியாவுக்கோ தப்பி ஓட திட்டமிட்டு இருக்கிறார். தப்பி ஓடாவிட்டால் இராணுவத் தாக்குதலில் அவர் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முசோலினி, சதாம் உசேன் போல இராணுவத்தினரிடம் பிடிபடுவார்” இவ்வாறு கருணா கூறியுள்ளார்.
கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளும் வயோதிபர் ஒருவரும் கொல்லப்பட்டதுடன், 7 சிறுவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீது நேற்றுக்காலை பத்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் படுகாயமடைந்தனர். இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை முதல் விசுவமடு பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.
இதனால், பல வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன. இதில் ஒரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் அங்கிருந்த மூன்று சகோதரிகளும் மற்றொரு வீட்டில் வீழ்ந்த ஷெல்லினால் வயோதிபர் ஒருவரும் அந்த இடங்களிலேயே கொல்லப்பட்டனர். வேறு வேறு வீடுகளில் வீழ்ந்து வெடித்த ஷெல்களினால் ஏழு சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட மூன்று சகோதரிகளதும் தாயாரும் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் சகோதரிகளான மயூரி (வயது 19), சுஜிதா (வயது 14), சுஜீவனா (வயது 16) ஆகியோரும் வயோதிபர் ஒருவரும் (பெயர் கிடைக்கவில்லை) கொல்லப்பட்டனர்.
கிழக்கை விட துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இது தொடர்பான இரண்டாவது முக்கிய பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வடக்கை மீட்டு முழுமையாக அபிவிருத்தி செய்வதுடன், அம்மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை துரிதமாக பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துமென தெரிவித்த அமைச்சர், வடக்கின் துரித அபிவிருத்தி தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இந்தியத் தூதுவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகுமெனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின் சகல நடவடிகைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கா படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோமென மதவாச்சியையே கைப்பற்றப் போகின்றனர். அலிமங்கடவைக் கைப்பற்றுவோமென்று கூறி பாமன்கடையையே கைப்பற்றுவர் எனத் தெரிவித்தார். இன்று நடந்துள்ளது என்ன என்பதை சகலரும் அறிவர்.
வடக்கின் அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. சிறந்த திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனைத் துரிதமாக நடை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது படையினரின் மனிதாபிமான நட வடிக்கைகள் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளார். 1983ம் ஆண்டு கால கட்டத்திலுள்ள சில காட்சிப் படங்களை வைத்துக் கொண்டு சில சக்திகள் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுவதாகப் பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.
வாகரையிலிருந்து 14,000 பொது மக்களைப் படையினர் எவ்வித பாதிப்புமில்லாதவாறு வெளிக்கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவை தளமாக கொண்டியங்கும் பார்தி எயார்ரெல் தொலைத்தொடர்பு சேவை திங்கட்கிழமை முதல் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தனது சேவைகளை விஸ்தரிப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்திருந்த எயார்ரெல் அடுத்து வரும் 3 வருடத்துக்குள் மேலும், நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை முதலீடு செய்யவுள்ளது.
நாட்டின் 60 சதவீதமான பகுதிகளில் தற்பொழுது எயார்ரெல்லின் சமிக்ஞை கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் பார்தி எயார்ரெல் லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயருடன் இயங்குகின்றது. இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த எயார்ரெல் குழுமத்தின் தலைமை முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் பார்தி மிட்டல் நாட்டின் வளர்ச்சியில் தாமும் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைச் சந்தையில் ஓர் முக்கிய இடத்தினை பெறுவதற்கு எயார்ரெல் கடுமையாக உழைக்குமெனவும் தொலைத்தொடர்பு மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடான இணைய சேவை போன்றவற்றை மக்கள் மேலும், அதிக வசதிகளுடன் அனுபவிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 88 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதன் அனுபவத்தின் மூலம் இலங்கையின் தொலைபேசி வலையமைப்பிலும் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாகவும் சுனில் பார்தி மிட்டல் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது 2.9 மில்லியன் நிலையான தொலைபேசி பாவனையாளர்களும் 7.9 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களும் 2 இலட்சம் இணையத்தள பாவனையாளர்களும் உள்ளனர். எயார்ரெல்லின் வருகையை தொடர்ந்து நாட்டிலுள்ள ஏனைய கையடக்கத்தொலைபேசிச் சேவை வழங்குநர்கள் அழைப்புக்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளதுடன் கழிவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு வந்திருந்த என்ஜீனியர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்தார். இதையடுத்து அவரது இதயம், பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மேலும் என்ஜீனியரின் இதய ரத்தக் குழாய்கள் தான்சானியாவைச் சேர்ந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 28 வயது என்ஜீனியர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மூளைச் சாவை சந்தித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த என்ஜீனியரின் குடும்பத்தினரை மணிபால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பு கொண்டு உறுப்பு தானத்தை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த 36 வயது நோயாளிக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. பின்னர் 37 வயதுப் பெண்மணிக்கு ஒரு சிறுநீரகமும், பெங்களூர் கமாண்ட் மருத்துவமனைக்கு இன்னொரு சிறுநீரகமும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதயத்தைப் பொருத்துவதற்கு சரியான நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிபால் மருத்துவமனை சென்னையைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் டாக்டர் செரியனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த சஜாஸ் ஏர் சார்ட்டர் நிறுவனத்தின் விமான ஆம்புலன்ஸ் புக் செய்யப்பட்டு அது பெங்களூர் விரைந்தது. அந்த விமானம் மூலம் பெங்களூர் விரைந்த பிரான்டியர் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச் சாவை சந்தித்த என்ஜீனியரின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து பத்திரமாக எடுத்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து அதே விமானத்தில் சென்னை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தடையின்றி விரைய வழி ஏற்படுத்தி சென்னை போலீஸாரும், பேருதவி புரிந்தனர்.
அங்கு இரு டாக்டர்கள் குழு தயார் நிலையில் இருந்தன. அவர்கள் விரைவாக செயல்பட்டு இதய மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஒரு குழு நோயாளியின் உடலிலிருந்து இதயத்தை எடுத்தது. இன்னொரு குழு உடனடியாக இதயத்தை பொருத்தியது. இரு அறுவைச் சிகிச்சைகளும் வெற்றிகரமாக இருந்ததாகவும், நோயாளி நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கேரள என்ஜீனியரின் இதயத்தைப் பெற்று புது வாழ்வு பெற்ற நோயாளிக்கு 32 வயதாகிறது. அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களில் நான்கு முறை பிரான்டியர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர் செரியனின் உதவியால் அவருக்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது.
வால்வுகளும் உதவின …
இதற்கிடையே லைப்லைன் மருத்துவமனையில் இதய ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் மிகச் சரியான நேரத்தில் அங்கிருந்தார். உடனடியாக செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு, அந்த தான்சானியா நாட்டுக்காருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். பழுதடைந்திருந்த அவரது ரத்தக்குழாய்கள் அகற்றப்பட்டு, பெங்களூர் என்ஜினீயரின் ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.
பெங்களுரில் அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை தனி விமானத்தில் எடுத்து வந்து, சென்னை போலீஸ் காரருக்கும், தான்சானியா நாட்டுக்காரருக்கும் பொருத்த டாக்டர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 2 மணி 40 நிமிடமே. இந்த மின்னல் வேக சிகிச்சை இந்திய மருத்துவ உலகில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த மின்னல் வேக சிகிச்சை காரணமாக 2 உயிர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதுகுறித்து டாக்டர் செரியன் கூறுகையில், பெங்களூர் என்ஜினீயர் கொடுத்த இதயத்தால் சென்னையில் ஒரு போலீஸ்காரரும், தான்சானியா நாட்டுக்காரரும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
நிறைய மருத்துமனைகளில் சிறுநீரகத்தை மட்டும் எடுத்துவிட்டு இதயத்தை கைவிட்டு விடுகிறார்கள். இதயத்தையும் இப்படி எடுக்க அனுமதித்தால் ஏராளமான இதய நோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்றார்.
நன்றி; வன் இந்தியா