2009

2009

அடுத்த இலக்கு இந்தியாதான்: தலிபான்கள் மிரட்டல்

taliban_gther.jpgபாகிஸ் தானில் தாக்குதல் நடத்திய தலி பான்கள் தங்களின் அடுத்த இலக்கு இந் தியா தான் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தலிபான் களின் தலைவர் மசூத் தெரிவித்துள்ளான்.

தலிபான் இயக்கத்தின் புதிய தளபதி ஹக்கீமுல்லா மசூத் பேசும் காட்சியை இங்கிலாந்தில் உள்ள ஒரு செய்தி சேனல் ஒளிபரப்பியது. அதில் அவன் கூறியதாவது,

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிசாருடன் நாங்கள் (தலிபான் தீவிர வாதிகள்) போரிட்டு வருகிறோம். ஏனெ னில், அமெரிக்க உத்தரவுக்கு ஏற்ப அவர் கள் செயல்படுகின்றனர். அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

அப்படி நிறுத்தினால், நாங்களும் எங்களுடைய தாக்குதல்களை நிறுத்துவோம். பாகிஸ்தானுக்குள் ஒரு இஸ்லாமிய நாடு உருவாக்குவதே எங்களுடைய லட்சியம். அப்படி ஒரு நாட்டை பெற்றதும், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நாங்கள் செல்வோம் அங்கு, இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு (தீவிரவாத செயல்களுக்கு) நாங்கள் உதவி செய்வோம் என்று ஹக்கிமுல்லா மசூத் கூறினான்.

ஜப்பான் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கத் திட்டம்!

busஇலங்கை வரும் ஜப்பான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய சுற்றுலாத்துறை அமைச்சு விசேட திட்டம் ஒன்றை வகுத்தள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணத்திலக்க இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி சொகுசு ரயில் சேவை மற்றும் உள்ளுர் விமான சேவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் ஜப்பான் மக்கள் வரவேற்பதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வருடாந்தம் நடைபெறும் ஜப்பான் சர்வதேச சுற்றுலா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தம் வகையில் பங்குபற்றிய அமைச்சர் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக ஜப்பானில் மேற்கொள்ளப்படுவது போன்று பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொழிப் பிரச்சினையினால் சட்டத்துறையில் சில நெருக்கடிகள்; தீர்வு காண நடவடிக்கை – அமைச்சர் மிலிந்த யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

மொழிப் பிரச்சினையினால் சட்டத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை எடுக் கப்படுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரி வித்தார்.யாழ்ப்பாணத்துக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண் டிருந்த அமைச்சர் மிலிந்த மொரகொட அங்கு புத்திஜீவிகள் மத்தியில் உரையா ற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நீதித்துறையை விரிவு படுத்துவதற்காக அமைச்சு மேற்கொண் டுள்ள செயற்றிட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் புதிதாக ஐந்து நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த அமைச்சர் வதிரியில் இயங்கும் நீதிமன்றத்தில் வைத்தே இவ்வாறு கூறினார்.

அமைச்சர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கும், நீதவான் நீதிமன் றத்திற்குமான சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் உபகர ணங்கள், தளபாடங்களை கையளித்தார்.இவ்வைபவத்திலே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ. விக்னராஜா, சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஏ. பிரேம் சங்கர், ஊர்காவற்றுறை நீதிபதியும் பருத் தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி யுமான ஜோய் மகாதேவா உட்பட சட்டத் தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இரு கனடா எம்பிக்களுக்கு இலங்கை வர விசா மறுப்பு

2222patrick_paul.jpgகனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார். 

நிவாரணக் கிராமங்களிலிருந்த 96 பல்கலை மாணவருக்கு இந்து மாமன்றம் நிதி உதவி

நிவாரணக் கிராமங்களிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மேலும் 96 பட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் தலா 10000/= ரூபா வீதம் நிதியுதவி செய்துள்ளது.

இது தொடர்பான வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மாமன்ற யாழ். பிராந்திய அலுவலகத்தில் மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பாக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய்குமார் கலந்துகொண்டார். ஆறு திருமுருகன், மாமன்ற யாழ். இணைப்பாளர் . ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்குரிய கொடுப்பனவை வழங்கினார்கள்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்

171009gaza.jpgஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியோர் மீது போர்க்குற்றம் சுமத்தும், ”காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை” ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வாக்களித்துள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தயாரித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் குறித்து இரு தரப்பும் நம்பத்தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறுகின்ற அந்த அறிக்கை, அவ்வாறு செய்யா விட்டால் இரு தரப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது மாத்திரமல்லாமல், இந்த விடயத்தில் ஹமாஸை அல்லாமல் இஸ்ரேலை மாத்திரம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கோருகின்ற பாலத்தீன ஆதரவு தீர்மானத்தின் மீது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் பிரத்தியேகமாக இஸ்ரேலை மாத்திரம் இலக்கு வைத்தமை தன்னை துக்கமடையச் செய்துள்ளதாக கோல்ட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாவேயில் சுவாங்கிராய் கட்சியின் மூத்த உறுப்பினர் ராய் பென்னெட் விடுதலை

181009aptsvangiriai_.jpgஜிம்பா ப்வேயில் பிரதமர் மோர்கன் சுவாங்கிராய்யின் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியுடைய மூத்த உறுப்பினரான ராய் பென்னெட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராய் பென்னெட் கைதானதை அடுத்து அரசாங்கத்தில் தங்களோடு கூட்டணி சேர்ந்துள்ள ஸானு பி.எஃப். கட்யுடன் ஒத்துழைப்பதை சாங்கிராய் நிறுத்திக்கொண்டுள்ளார்.

ராய் பென்னெட் சிறையில் இருக்கும் வரை தனது கட்சி அமைச்ச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்க நடவடிக்கைகளிலோ பங்குகொள்ளாது என சாங்கிராய் தெரிவித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயத்துறை துஅனி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த பென்னெட், சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையரான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வர்த்தகர் கைது

3333raj-rajaratnam.jpgவர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, புகழ் பெற்ற அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.  உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) – புன்னியாமீன்

171009.jpgஉலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் 1.25 டொலர் ஆகும்.

சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,  வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,  பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ‘வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்”,  2009 ஆம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.

இந்நாள் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி,  வறுமை,  வன்முறை,  பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் ‘டொர்கேட்ரோ’வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினர். இவர்கள் உலகளாவிய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தினை முன்வைத்தனர்.

வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25  டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு,  சுத்தமான நீர்,  உடை, உறையுள்,  கல்வி,  சுகாதாரம்,  சமூக வாய்ப்புக்கள்,  மனித அரசியல் உரிமைகள்,  பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,  வறிய நாடுகளுக்கான உதவிகளை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இற்குள் வறுமையை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. வின் இலக்குகளை இந்நிதி நெருக்கடி தடம்புரளச் செய்து விடுமெனவும் இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் (2009) ரொபேர்ட் ஷோலிக் ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளான வறுமை,  பட்டினி,  கல்வி,  சமத்துவம்,  தொற்றுநோய் மற்றும் சிசுமரணம் போன்றவற்றில் பெரும்பாலானவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியால் வறிய நாடுகளிலுள்ள சமூகங்களுக்கு செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஷோலிக் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடனை 100 பில்லியன் வரை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அத்துடன்,  பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு அது வறுமையை எவ்வாறு பாதிக்குமென்பதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஷோலிக் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது சுகாதாரம்,  கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்யக் கூடாதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வறுமை ஒழிப்பு,  உணவு பாதுகாப்பு உள்ளிட்ட புத்தாயிரம் ஆண்டின் மேம்பாட்டு இலக்கை (Millennium Development Goals – MDG) திட்டமிட்டபடி திட்டமிட்டபடி எட்டுவதற்கான முயற்சிகளை பலப்படுத்துவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,  ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பின்னர்,  2009 மார்ச்சில் முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை ஐ.நா. அவை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பட்டது. 2000ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் உணவுப் பஞ்சம்,  பிணி,  வறுமை,  வேலையின்மை ஆகியவற்றை ஒழிக்க அபிவிருத்தியடைந்த நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள நிதி உதவிகளை நிறுத்தக் கூடாது என்றும்,  உறுதியளிக்கப்பட்ட உதவிகளை தொடர்வதன் மூலமாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது,  புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சூழல் புத்தாயிரம் முன்னேற்ற இலக்குகளை எட்டவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதார பின்னடைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டத்தை சந்திக்கப்போகும் 2009ஆம் ஆண்டில் ஒன்று ‘செய் அல்லது விடு’ என்ற உறுதிப்பாட்டுடன் சிக்கலை எதிர்நோக்கிச் செயல்படப் போவதாக ஒபாமா அரைகூவல் விடுத்தமையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும். 

இவ்வாறாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் கூட, அரைகூவல்கள் விடுக்கப்பட்டாலும் கூட வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல் என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் இராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் கூட உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது உலகளாவிய ரீதியில் இன்று வரை கனவாகவே உள்ளது.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வரிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும்,  ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும்,  ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில்,  வன்முறையையும்,  குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை,  உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி,  உலக வறுமை ஒழிப்புப் பணிக்குப் பெரிய பங்காற்றியது. என  சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலைவர் Fan Xiaojian  அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில்,  வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடாகவே சீனா உள்ளது.

அதே நேரம் இந்தியாவும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. வறுமையில் வாடும் குடும்பங்களை ஒரே தேவையுள்ள குழுக்களாக (Common Interest Groups – CIG)  ஒன்றிணைத்து அவர்களின் முழுமையான  மேம்பாட்டிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும் மாவட்ட வறுமை ஒழிப்புப் திட்டத்தை உலக வங்கியின் ஆலோசனையின் பேரி்ல் 2000வது ஆண்டு முதல் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 2, 900 கிராமங்களில் வாழும் 3, 25, 000 மக்களை 52, 000 குழுக்களாக ஒன்றிணைத்து உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் வருவாய் 65 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாய  உற்பத்தி 149 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும்,   விவசாயத்திற்கான பாசனப் பரப்பு 27 விகிதமாக அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதே அடிப்படையில் மாவட்ட வறுமை ஒழிப்புத் திட்டம் – 2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே உலக வங்கியின் தனி நபர் மேம்பாட்டு கணக்குத் திட்டத்தின் கீழ் (Individual Development Account – IDA) 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்தியக் கிளையின் இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா மும்பையில் அண்மையில்  தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு சுய உதவிக் குழுக்களைப் போல கூட்டுத் தொழில் செய்யவும் இக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பல குழுக்கள் செய்து பலன் பெற்றும் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

 மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அக்ஸன் எய்ட் நிறுவனம் 2009 இறுதிப்பகுதியில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை பிரேசிலையும் சீனாவையும் பாராட்டியிருந்தது.

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும்,  தொண்ணூறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச் சீர்திருத்த திட்டங்களுக்காகவும்,  ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது. சீனா தனது விவசாயிகளுக்கு உதவித் திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னைய நிலைகளுடன் ஒப்பு நோக்கும் போது ஆசியாவின் வறுமை ஒழிப்பு ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும் கூட ஆபிரிக்க நாடுகளில் நிலமை மிகமிக மோசமாகவே இன்று வரை காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் “உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம்” என்று அச்சம் தெரிவித்திருந்தது.

தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா.,  உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

“வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். 2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்த கருத்தை இவ்விடத்தில் மீட்டுப்பார்ப்பது பொறுத்தமாக இருக்கும்.

அரசுக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரம்: வதந்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதம பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் சரத் பொன் சேகா இன்னமும் இலங்கை இராணுவத்தின் உயர்பதவியை வகித்து வருகிறார். அவருக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுவருவதாக ஆதாரமற்ற பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்யான பிரசாரங்களே.

சிலரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை செய்வதுடன், மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றனர். இவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும். சில ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், போஸ்டர்கள் மூலமாகவும் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் இவ்வாறான பிரசாரங்களை செய்து வருவதை முன்னிட்டே பிரிகேடியர் உதய நாணயக்கார மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

அரசியலில் ஈடுபடுமாறு யாரும் இதுவரை அழைக்கவில்லை: சரத் பொன்சேகா

அரசியலில் ஈடுபடுமாறு இதுவரையில் எவரும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாகவும் அது பற்றி தம்மால் கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும் இவ்வாறு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானதாகவும், தாம் இது குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் குறித்து இதுவரையில் எவரும் தம்முடன் பேசவில்லை எனவும், இதனால் அரசியல் விவகாரங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.