2009

2009

12 வயது சிறுமியை பயன்படுத்தி புலிகள் தற்கொலைத் தாக்குதல்

udaya_nanayakkara_.jpgஉடம்பு முழுவதிலும் குண்டைக் கட்டி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாதுகாப்புப் படையினரை நோக்கி அனுப்பிய புலிகள் அந்தக் குண்டை வெடிக்கச் செய்த தில் அந்தச் சிறுமியின் உடல் வெடித்துச் சிதறி சின்னா பின்னமாகிய கோரத்தை கள முனையில் நேரில் கண்ட பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடையும் சிவிலியன்கள் போன்று கைகளை உயர்த்தியவாறு அந்தச் சிறுமி சாலையின் வடக்கே படையினரை நோக்கி வந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு இராணுவத்தினர் அந்தச் சிறுமியை அண்மித்தபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

புலிகளின் இறுதி கடற்புலி தளமாக விளங்கிய சாலையை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்த அகோர காட்சியை கண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியை நோக்கிச் சென்ற இரண்டு இராணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிறார்களை யுத்தத்தில் பலாத்காரமாக ஈடுபடுத்திய புலிகள் தற்பொழுது அவர்களை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலி ஆதரவாளர்களே இலங்கைக்கு எதிரான பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் – அமைச்சர் கெஹெலிய

kkhaliya.jpgசர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே இலங்கைக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது..

வடக்கில் இடம்பெறும் மோதல்கள் பற்றி கடந்த சில தினங்களாக  சர்வதேச சமூகத்தினர் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது நடைமுறையில் சாத்தியப்படாத சில சம்பவங்கள் உருவாக்கப்பட்டு அவை தொடர்பிலான பொய்யான அறிக்கைகளே வெளியிடப்பட்டு வருகின்றன. இது எமக்கு வேதனையை அளிக்கிறது. புதுக்குடியிருப்புப் பகுதியில் நிலவும் நிலைமைகள் தொடர்பில் பல பிழையான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களைப் படையினர் வைத்தியசாலைகள் மீது நடத்தியதாகவும்  நோயாளிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்திலுள்ள புலி ஆதரவாளர்களே இவ்வாறான தகவல்களை வெளியிட்டு மக்களைத் தூண்டி விடுகின்றனர் கடந்த சில தினங்களாகக் கூறப்பட்ட விடயம்  சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதே. தற்தோதைய நிலைமையின் படி வன்னியில் நூற்றுக்கு 40 சதவீத பிரதேசத்திலேயே மோதல்கள் நடைபெறுகின்றன. இதில் தான் 3 லட்சம் பேர் பொது மக்கள் உள்ளார்கள் எனக் கூறப்பட்டது. சிவிலியன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறிவிட்டு அந்த வாகனங்களில் வெடிபொருட்களை நிறைத்துச் செல்கிறார்கள். அவை சில வேளைகளில் வெடித்து சிதறும் போதுதான் பலர் கொல்லப்படுகின்றனர். இதைப் பற்றிக் கூற எவருமே இல்லை.

புலிகள் சிவிலியன்களை விடுவிக்காது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பற்றி யாருமே கதைப்பதாக இல்லை. இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளைப் பாவிக்கின்றனர் என சர்வதேச சமூகம் பொய்க்குற்றம் சாட்டியது. நாம் அதைப் பாவிப்பது என்றால் நாமே அதை உற்பத்தி செய்ய வேண்டும். அதை உற்பத்தி செய்வது யார்? கொத்தணிக் குண்டுகளைப் பாவித்தனர் எனக் குற்றம் சாட்டிய சர்வதேச சமூகமே பின்னர் அது தவறு எனக்கூறி மன்னிப்புக் கோரியது என்றும் அமைச்சர் கூறினார்.

இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இங்கு கருத்துத் தெரிவிக்கையில் படையினர் முல்லைத்தீவுப்பகுதியை 177 சதுர கிலோ மீற்றருக்கு மட்டுப்படுத்தியுள்ளனர். விஸ்வமடுவின் கிழக்கு பகுதியில் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தின் கிழக்காக படை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை கைப்பற்றப்பட்டதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்றார்.

இந்திய கிரிக்கட் அணி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

indian_cricket.jpgஇந்திய கிரிக்கட் அணி வீரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடடியுள்ளனர்.  கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி வீரர்கள் (04) அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

இந்த கிரிக்கட் சுற்றுலாவின்போது இரு அணிகளுக்குமிடையில் 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் ஒரு ருவன்டி-20 போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயம்ப சேவை இன்று ஆரம்பம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘வயம்ப சேவை’ என்ற பெயரில் பிரா ந்திய ஒலிபரப்பொன்றை இன்று குருநாகலில் இருந்து ஆரம்பிக்கின்றது. 99.6 எப்.எம். அலை வரிசையினூடாக இவ் ஒலிபரப்பு இடம்பெறவுள்ளது.

தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவின் வேண்டுகோளின் பேரில் இச்சேவை ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் முதல் ஒலிபரப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று குருநாகலில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தும் உரை ஒலிபரப்பப்படவுள்ளது.

தினமும் அதிகாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை இடம்பெறும் இப்பிராந்திய சேவை குருநாகல்-நீர்கொழும்பு வீதியில் உள்ள பிராந்திய சேவை கட்டிடத்தில் இருந்து ஒலிபரப்பப்படவுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தீர்வுத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படுமா? – ஏகாந்தி

Wanni Child2009ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாக காணப்படுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய வடமாகாண யுத்தம் மனிதாபிமான நெருக்கடியை மிகப் பாரியளவு தோற்றுவித்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியைக் கொடுத்துவருவதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்ததாகுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமைப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் தீர்வு என்ற விடயம் இலங்கை அரசுக்கு மிகவும் கட்டாயப்பாடான நிலையென்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இதுகாலவரை இது விடயமாக காட்டிவந்த அசமந்தப் போக்கை இனியும் காட்ட முடியாது என்பதே இலங்கை அரசும் உணர்ந்திருப்பதை அரசு சார்பில் முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் –

இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வில்லையென்றும், சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு வரைவினையே தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீர்வு வரைவின் இறுதிப்பகுதி தொடர்பாக தற்போது கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர் திஸ்ஸவிதாரண “தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்பு 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை நிர்வாக முறைமையை நாம் முன்மொழியப் போவதில்லை. முற்றிலும் புதியதொரு அதிகாரப் பகிர்வினை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

குழுவின் கூட்டங்களை நிறைவு செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். இந்தக் கட்சிகளின் கருத்துகளையும் உள்ளடக்கி தீர்வு வரைவினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 100 இற்கும் மேற்பட்ட தடவை கூடி மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க உள்ளதாகவும் அதிகாரப் பகிர்வு எதுவும் கிடையாதென்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். இங்கு அமைச்சரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் பூரணமாக நடைமுறைப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்கூட,  எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு மேலாக வேறொன்றை வழங்கக் கூடாதென்று சில அரசியல் கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மறுபுறமாக பொலிஸ் அதிகாரம், காணிப் பகிர்வு அதிகாரம் போன்வற்றை வழங்கப்போவதில்லை என அரசாங்கத் தரப்பில் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திஸ்ஸவிதாரண குழுவினரால் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்வுத் திட்டம் எத்தகையதாக இருக்கும் என்ற வினா பொதுவாக எழுந்துள்ளது.

மறுபுறமாக தற்போதைய யுத்த வெற்றிகளின் பின்னணியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறக்கூடிய நிகழ்தகவு இருப்பதையும் காணமுடிகின்றது. இது தொடர்பாக ‘ராவய” பத்திரிகை எதிர்வுகூறுகையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் பாராளுமன்றம்  கலைக்கப்படலாமென கூறியுள்ளது. இன்னும் சில ஊடகங்களின் கருத்துப்படி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றுக்காக வேண்டி மக்கள் தீர்ப்பும் பெறப்படுமென கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  இந்த நிலையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கேள்வியாகும். இந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இன்னும் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தெளிவானதும்,  நிலையானதுமான கருத்தொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

யாழ். மத்திய கல்லூரி விளையாட்டரங்கு படையினரால் நவீனமயப்படுத்தப்படும்

jaffna-c-college-01gif.jpgயாழ்ப் பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்தி பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வளப்படுத்துவதற்காக சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்காக படைத்தரப்பினர் மாற்றியமைத்துக்கொடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண நகரகட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜே. எப். குலதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 61 ஆவது சுதந்திரதினத்தையொட்டி யாழ்ப்பாணம் நகரப் பாடசாலைகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வில் பிரதான உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வைபவம் யாழ்ப்பாணம் இராணுவ மக்கள் தொடர்பக வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாணவர்களுக்கான நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் 3 மாதத்தில் பூர்த்தியாகும். எனது நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேச பாடசாலைகள் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கோரிக்கைகளை சமர்ப்பித்தால், பாதுகாப்புப்பிரிவினர் விளையாட்டு உபகரணங்களையும் மற்றைய உதவிகளையும் வழங்குவர் எனவும் பிரிகேடியர் குலதுங்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மாகாணக்கல்விப்பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் உட்பட பல்வேறு கல்லூரி அதிபர்களும் பிரசன்னமாயிருந்தனர்

தேசிய பாதுகாப்புச் செய்திகளை பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்க நடவடிக்கை!

defence-2009-02-06.jpgதேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகளை நேற்று முதல் பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மொபிட்டல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது.

சுனாமி வீடுகள்: அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை – சபையில் அமைச்சர் தினேஷ்

parliament2301.jpgவடக்கு, கிழக்கு உட்பட சுனாமியினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் அரசாங்கம் நிரந்தர வீடுகளை வழங்குவது உறுதி. அதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கிய போதும், அது முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. தற்போது அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாய் மூல வினாக்கான வேளையில் ஜே. வி. பி. எம்.பி. லக்ஷ்மன் நிபுணஆராச்சி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் வீடுகளை அமைக்க விடுதலைப் புலிகள் இடமளிக்கவில்லை. தற்போது புலிகளை வெற்றிகொண்டு அரசாங்கம் அப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. எதிர்காலத்தில் சகலருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளிலும் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது. பெருமளவிலனோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4764 குடும்பங்களுக்கு மொத்தமாக வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை. அவர்கள் நிதிகளைப் பெற்றுக் கொண்டார்களே ஒழிய வீடுகளை அமைத்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பில் தெரிவுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 454 குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் வழங்க வேண்டியுள்ளனவென அமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. நுரைச்சோலை, அக்கரைப்பற்று பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அது புனிதப்பிரதேசம் என தெரிவிக்கப்பட்டு வீடுகள் கையளிக்கப்படாத நிலையிலேயேயுள்ளன. அரசாங்கம் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இது தொடர்பான விவகாரம் நீதிமன்ற விசாரணையிலுள்ளது என்பதால் இது பற்றி நாம் எதனையும் விபரிக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அதற்கேற்ப உரிய கவனமெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசததிலிருந்து 1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் கொத்தனிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை! வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மறுப்பு

palitha_koahana.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தனிக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்

பாதுகாப்புப் படையினா; புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடாபாக சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் அப்பேட்டியில் வெளிவிவகார அமைச்சின் செயலாளா மேலும் குறிப்பிடுகையில்

இலங்கை இதுவரை காலமும் கொத்தனிக் குண்டுகளைக் கொள்வனவு செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை. இந்நிலையில் அரசாங்கத்தினால் பராமிக்கப்படும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் தேவை அரசுக்கு கிடையாது.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மாத்திரம் இயங்கவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இன்னும் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அரசாங்க வைத்தியசாலைகள். அங்கு அரச உத்தியோகத்தர்களே பணி புரிகின்றனர் அப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் இந்நாட்டு மக்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது பாதுகாப்புப் படையினா கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கொடூரமான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மனித குலத்தின் அழிவுக்கு வித்திடும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.