2009

2009

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி

hajj.jpgபுனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர். ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.

அரச வங்கிகளில் கடன் வட்டிவீதம் இன்று முதல் குறைப்பு 8% – 12%

அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படும் கடன்களுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தை 8% – 12% வரை உடனடியாகக் குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீர்மானம் இன்று (28ம் திகதி) முதல் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்க வங்கிகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க வங்கிகளின் தலைவர்களுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அலரி மாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

கடனை பெற்றுக்கொண்ட ஒருவருக்கு தவணை அடிப்படையில் கடனை செலுத்துகையில் வட்டிவீதம் குறைவடையும் அனுகூலத்தையும் கடன் பெறுபவருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விவசாயம், சுற்றுலா, கைத்தொழில், மீன்பிடித் துறை உள்ளிட்ட சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகத்துறைகளையும் மற்றும் நிர்மாணத் துறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய வட்டி வீதங்களுக்கு ஏற்ப செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட தவணைக் கடன் தொகை விரைவில் வாடிக்கையா ளர்களுக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை இவ்வருடம் அரசாங்க வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்திருக்கும் சகல அரச ஊழியர்களுக்கும் டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார். கடனை தவணை அடிப்படையில் திருப்பி செலுத்தத் தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி வீதத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி அரசாங்க வங்கித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சாதாரண மக்கள் கடனைத் திரு ப்பி செலுத்தும் போது ஏற்படும் தவிர்க்க முடியாத காரணங்களைக் கருத்தில் கொண்டு நிலுவை வட்டி வீதத்திலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோ சனை வழங்கியுள்ளார்.

அதேபோல் கடனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்படும் பிணை தொடர்பில் மீளாய்வு செய்யவும் அதற்காகத் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பார்க்கிலும் மிகவும் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடனை வழங்குகையில் கடன் தொகையில் மீன்பிடித்துறை, விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளில் கூடிய கவனம் செலுத்து மாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் கூட்டமொன்றை நடாத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்கும் போது மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருப்திப்படுத்தும் வகையிலும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய, ஜனாதிபதி செயலாளர் லலித் வீர துங்க, நிதியமைச்சினதும் திறை சேரியினதும் செயலாளரான கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கிழக்கு முதல்வரின் ஜீப் மரத்தில் மோதி விபத்து மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட மூவர் பலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்று மொருவர் காயமடைந்துள்ளார்.

குருநாகல், கொக்கரல்ல தியநுரு பிரதேசத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்த விபத்தின் போது முதலமைச்சர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் குண்டு துளைக்காத “லேன்ட் ரோவர்” ரக கறுப்பு நிற வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை பழுதுபார்ப்பதற்காக முதலமைச்சரின் பாதுகாவலர்களும், சிவிலியன் ஒருவரும் திருகோண மலையிலிருந்து கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர்.

வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி பாரிய மரம் ஒன்றில் மிகவும் வேகமாக மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

இரண்டு தேர்தல்களும் ஒரே நாளில்? ஊடகத் துறை அமைச்சர் தெரிவிப்பு

000lakshman_yapa_abeywardena.jpgஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து; கவனம் செலுததுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார. தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின் போது இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

உரிய நேரத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் திட்டவட்டமாக நடத்தப்படும எனவும் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்தல்களை நடத்த தீர்மனிப்பது அரசாங்கம் என்றும் அவற்றை நடத்துவது திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அமைச்சா கூறினார்.
 

லத்வியாவில் விழுந்த விண்கல்

271009lathviya.jpgலத்வியா நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை விண்ணில்; இருந்து விழுந்த பெரிய பாறை போன்ற கல்லால் பூமியில் 15 மீட்டர் ஆழமும் 5 மீட்டர் அகலமும் உடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
அந்தக் கல் எஸ்தோனியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள நகர் ஒன்றில் விழுந்தது. கல் ஆகாயத்தில் இருந்து வரும் போது நெருப்புப் பிழம்பு போல் இருந்ததாகவும்,  பார்ப்பதற்கே பயமாக இருந்ததாகவும் அதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கல் விழுந்த பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லை பார்ப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கல்லின் ரசாயனத் தன்மையை சோதித்த அந்நாட்டு ராணுவத் துறை இரசாயணவியல் விஞ்ஞானிகள், அந்தக் கல்லில் கதிர்வீச்சு அளவு குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தனர்.

அந்தக் கல்லை எரிகல்லாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  கல்லை சோதிப்பதற்காக லத்வியா நாட்டு பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

உருப்படுமா உலகமயமாதல்: குலன்

Iran_SL_Leadersபனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.

ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.

இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.

புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.

உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?

இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.

இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.

பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.

கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.

இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.

போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.

புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.

இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.

• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.

இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்.

அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

261009serje.jpgசர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும் இதனை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றும் தெரிவித்தார். குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்ய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே ரஷ்யா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு, நல்லிணக்கம் போன்ற நடைமுறை சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்றது. பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கண்ணிவெடிகளை அகற்றும் விடயத்தில் ரஷ்யா ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.  இந்த ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 52 வருடங்களாக ராஜதந்திர உறவுகள் காணப்படுகின்ற போதிலும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

ம. உ. ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அரசு மறுப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதன் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லையென அதன் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அமைச்சர் கூறினார். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவர்கள் அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்வதை விடுத்து எப்போதும் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தவறு. ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்புடன் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோமெனவும் அமைச்சர் சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 2 இலட்சத்து 88 ஆயிரம் பேருள் தற்போது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 88 பேரே தங்கியிருப்பதாகவும் ஏனையோர் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். நிவாரணக் கிராமங்களில் 6, 896 பேரும் மன்னார் நிவாரணக் கிராமங்களில் 1,590 பேரும் திருகோணமலை நிவாரணக் கிராமங்களில் 6,405 பேரும், ஆறு வைத்தியசாலைகளில் 1,626 பேரும் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்ணிவெடியகற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக புதிதாக ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் 14 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தினுள் மேலும் 10 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இவற்றுள் 05 ஐ. நா நன்கொடையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யசீகரனும், அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை

271009jasikaran.jpgஇலங் கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.

இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.