அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படும் கடன்களுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தை 8% – 12% வரை உடனடியாகக் குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீர்மானம் இன்று (28ம் திகதி) முதல் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்க வங்கிகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க வங்கிகளின் தலைவர்களுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அலரி மாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
கடனை பெற்றுக்கொண்ட ஒருவருக்கு தவணை அடிப்படையில் கடனை செலுத்துகையில் வட்டிவீதம் குறைவடையும் அனுகூலத்தையும் கடன் பெறுபவருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விவசாயம், சுற்றுலா, கைத்தொழில், மீன்பிடித் துறை உள்ளிட்ட சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகத்துறைகளையும் மற்றும் நிர்மாணத் துறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய வட்டி வீதங்களுக்கு ஏற்ப செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட தவணைக் கடன் தொகை விரைவில் வாடிக்கையா ளர்களுக்கு அறிவிக்கப்படும்.
இதேவேளை இவ்வருடம் அரசாங்க வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்திருக்கும் சகல அரச ஊழியர்களுக்கும் டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார். கடனை தவணை அடிப்படையில் திருப்பி செலுத்தத் தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி வீதத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி அரசாங்க வங்கித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சாதாரண மக்கள் கடனைத் திரு ப்பி செலுத்தும் போது ஏற்படும் தவிர்க்க முடியாத காரணங்களைக் கருத்தில் கொண்டு நிலுவை வட்டி வீதத்திலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோ சனை வழங்கியுள்ளார்.
அதேபோல் கடனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்படும் பிணை தொடர்பில் மீளாய்வு செய்யவும் அதற்காகத் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பார்க்கிலும் மிகவும் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடனை வழங்குகையில் கடன் தொகையில் மீன்பிடித்துறை, விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளில் கூடிய கவனம் செலுத்து மாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் கூட்டமொன்றை நடாத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்கும் போது மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருப்திப்படுத்தும் வகையிலும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய, ஜனாதிபதி செயலாளர் லலித் வீர துங்க, நிதியமைச்சினதும் திறை சேரியினதும் செயலாளரான கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.