2009

2009

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மட்டுமே சில பிரச்சினைகளுக்கு தீர்வு- ரவி கருணாநாயக்க எம்.பி.

srilanka-parliament.jpgநிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தால் மட்டுமே சில முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இலங்கை அரசு உலக நாடுகளுடனும் யுத்தம் புரிவதால் இங்கு முதலிடுவதற்கு எந்தவொரு நாடும் முன்வருகின்றதில்லையெனவும் கூறினார். அண்மையில்  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை அங்கீகரிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கின்றேன். இந்த நாட்டில் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதிகாரங்களை ஓரிடத்தில் மையப்படுத்தியே ஆட்சி புரிந்தனர், புரிகின்றனர். இந்த அதிகார முறை மாற்றப்படவேண்டும். பாராளுமன்றத்தினூடாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால்தான் முக்கிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

இலங்கையரசு உலக நாடுகளுடனும் தற்போது யுத்தம் புரியத் தொடங்கிவிட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், அந்த நாட்டின் விசேட பிரதிநிதி டெஸ்மன் பிரௌன் உட்பட பலருடன் முரண்படுகிறார்கள். அரசின் இந்த நிலைப்பாட்டால் இலங்கையில் முதலிட வெளிநாடுகள் மறுக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விடுதலைப்புலிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இந்திய ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது முன்னர் இல்லாத நிலைமை. இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதையே இது காட்டுகின்றது.  பிரிமா தொடர்பாக என்னைக் குற்றவாளியாக்கி, தேசத்துரோகியாக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக இந்த அரசு காட்டியது. நான் நீதிமன்றம் சென்றே இந்த அரசின் வாயை அடக்கினேன். இன்று பிரிமா தொடர்பாக இந்த அரசு என்ன செய்கின்றது?  மிஹின் லங்காவை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் தினமொன்றுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. இந்த விமான சேவையில் பயணிக்க எவருமே இல்லையெனக் கூறப்படுகின்றது.

ஹெட்ஜிங் மூலம் இந்த நாட்டு அப்பாவி மக்களின் பணமே நாசமாக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்திலேயே பாலம் கட்டப்படுகிறது. இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் இந்த அரசினால் சீரழிக்கப்படுகின்றது.

வேட்பாளர்களின் தராதரங்களை அறிந்தே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர் – இரா.தங்கவேல்

election_ballot_.jpgமலையக வாக்காளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதைவிடுத்து ஒவ்வொரு வேட்பாளர்களையும் நன்றாக அறிந்தே வாக்களித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. எவரது முகவரிக்காகவோ அல்லது எவரது முன்னணி கட்சிக்காகவோ அன்றி களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுய உருவத்தை அவரவர் ஆற்றியிருக்கின்ற சேவைகளை கணக்கிட்டுப் பார்த்தே தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னை நாள் பிரதித் தலைவருமான இரா.தங்கவேல் இம்புல்பிட்டி தோட்ட கீழ்ப்பிரிவில் நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட பொதுச்செயலாளர் தமதுரையில்;

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவையும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் வழங்கியிருக்கின்ற தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலையக மக்கள் எத்தகையோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள் என்பதையும் எந்தவித கவர்ச்சிக்கும் வெளிப்பிரசாரங்களுக்கும் எளிதில் ஏமாறுபவர்கள் மலையக மக்கள் அல்ல என்பதையும் உணர்த்தி உள்ளார்கள், வெறுமனே வெற்று வேட்டுகளுக்கும் தலைமைத்துவத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு அல்லது அவர்கள் மூட்டிய நெருப்பில் குளிர்காய நினைக்கும் கையாலாகாத பேர்வழிகளுக்கு துணைபோக மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாது கட்சிவிட்டு கட்சி தாவி சீட்டு வாங்கியவர்களை மலையக மக்கள் நன்கு இனங்கண்டு தங்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். தகுதி வாய்ந்த வேட்பாளர் இல்லையென்ற முடிவுக்கு வந்த பெருவாரியான வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்துவிட்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைத் தவிர்த்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருவாரியான மலையக மக்கள் வாக்களிப்பதையே தவிர்த்திருப்பதை பார்க்கின்றபோது அவர்களது ஆர்வமின்மையையும் வாக்குகளைப் பெற தகுதியற்றவர்களை மேடையேற்றிய கட்சிகளுக்கு ஒரு படிப்பினை புகட்டும் விதத்திலும் மக்கள் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது. குறிப்பாக கண்டிமாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் இருந்த போதிலும் அதில் 40 வீதத்தினரே வாக்களித்துள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயம் மாத்திரமின்றி, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்த்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர்களது தலைமைத்துவத்திற்கும் விடுத்த எச்சரிக்கையாகவுமே கருத வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி படுகொலை! ஆறு தமிழர்கள் கைது!!! : த ஜெயபாலன்

French_Policeபெப்ரவரி 21ல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுனவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சென்சன்ரனிஸ் பகுதி பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். அயூலின் டான்லேம் (33) என்ற பொலிஸ் அதிகாரியே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான மரண விசாரணைகளின்படி துப்பாக்கியில் இருந்து 14 தோட்டாக்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் படுகொலை செய்யப்பட்ட அதிகாரியின் தலைப் பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அவற்றில் ஒன்றே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் மரண விசாரணையில் தெரியவந்து உள்ளது.

லூ பரிசியன் உட்பட பிரானிஸின் தேசியப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுன பாரிஸின் லா சப்பலுக்கு ஒப்பானது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதி. அங்குள்ள கத்ருட் பகுதிக்கு அருகாமையில் மயூரிஸ் பிரோ வீதியில் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் பொலிஸ் அதகாரி அயூலீன் டான்லேம் வந்தள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகியது என்றும் முடிவில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மறுநாள் காலையே ஒரு பெண் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டவர் ஒருவரின் தாயார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ள பிபிசி சந்தேசயா (பிபிசி சிங்கள மொழிச் சேவை) இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றது. சில புலி எதிர்ப்பு இணையங்களும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி உள்ளன.

தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகளின்படி இச்சம்பவம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கும் அப்பகுதியில் இருக்கும் சில தமிழர்களுக்கும் இடையேயான விவகாரம் எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது அல்ல என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றுமொரு செய்தி இவர்களுக்கிடையே பணம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே சென்சென்ரனிஸ் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்று இவ்வாரம் விடுதலையாகி உள்ளதாக அப்பகுதி உள்ளுர்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அயூலின் டான்லேம் மீதும் அவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது. ஆயினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ட்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரியாகவே பணியாற்றி வந்தார்.

சம்பவத்தின் போது விடுப்பில் இருந்த அயூலின் டான்லேம் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் அயூலின் டான்லேம் இன் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் வேட்டுக்களைத் தீர்த்ததாகத் தெரிவித்து உள்ளார். அயூலின் டான்லேம் மீது பாய்ந்த இரு குண்டுகளையும் யார் சுட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கிறது.

மேற்கு நாடொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை தொடர்பில் தமிழர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும்.

._._._._._.

பொலிஸ் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக லு பரிசியன் பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது. – தமிழில் சபா நாவலன் (நன்றி : இனியொரு)

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் வேண்டுகோள் இராணுவப் பேச்சாளரால் நிராகரிப்பு

uthaya_nanayakara_.jpgசர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரரென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் விடுத்த வேண்டுகோளை இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார்.

நிபந்தனையுடன் கூடிய யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பான வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார, தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆயுதங்களை முதலில் கீழே வைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் விமானியின் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன – பிரேத பரிசோதனையில் தெரிவிப்பு

colombo-04.jpgகடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்கா குரன வெலப்பனப் பகுதியில் வீழ்ந்த விடுதலைப்புலிகளின் உடல் விமானத்தின் விமானியின் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரி டாக்டர் சன்ன பெரேரா பிரேத பரிசோதனை அறிக்கையை நீர்கொழும்பு நீதிவானிடம் சமர்ப்பித்திருந்தார். விமானியின் நெஞ்சில் சன்னம் துளைத்துக்கொண்டு சென்றதும் இருதயத்தில் காற்று நிரம்பியிருந்தும் மரணத்துக்குக் காரணம்.

இரு சன்னங்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்டன. அத்துடன் பல துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டன. உடலின் மூட்டுக்கள் எக்ஸ் கதிர் படம் பிடிக்கப்பட்டன. பற்களும் உடலின் சில பகுதிகளும் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சடலம் பலத்த பாதுகாப்புடன் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் தொடர்பாக சர்வதேச பொலிஸாரின் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் சட்டவைத்திய அதிகாரி நீதிவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இதுவரை 35,819 பேர் வருகை

uthaya_nanayakara_.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு 35,819 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, புலிகள் புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றருக்குள் முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; “வன்னி, முல்லைத்தீவு பகுதிகளை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் படையினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தற்போது புதுக்குடியிருப்பில் 73 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், படையணிகள் தொடர்ந்து மும்முனைகளால் முன்னேறி வருகின்றன. 53 ஆவது படையணி தெற்குப்பக்கமாகவும் 4 ஆவது விசேட படையணியும் 45 ஆவது படையணியும் ஏ 35 வீதியூடாகவும் 58 ஆவது படையணி கிழக்குப் பக்கமாகவும் புதுக்குடியிருப்பு மையப்பகுதியை நோக்கி படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து 35,819 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 3,848 பேரே வந்தனர். ஆனால் பெப்ரவரி மாதத்தில் இதுவரையில் 31,971 பேர் வந்துள்ளனர். இவர்களனைவரும் மெனிக் பார்ம் மற்றும் விஷேட இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டு அவசியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது’ எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து மக்களை வெளியேற்ற இந்தியா உதவுமாயின் அவர்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இந்தியா உதவியளிக்குமாயின் அம்மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதற்கும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவியளிக்கத் தயாரென இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பி.பி.சி. செய்திச் சேவைக்கு வெளியிடும் போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இதன் போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) மற்றும் ஐ.நா. முகவரமைப்புகளின் உதவியுடன் இந்தியா அவ்வாறு செயற்பட முன்வருமாயின் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எமது ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவே இருப்போம். ஆனால், இலங்கை அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, மக்கள் தங்களது கிராமங்களிலிருந்து வெளியேறி வந்து வேறு இடங்களில் நீண்ட காலத்துக்கு வாழ முடியாது. மிகவும் குறைந்த காலப்பகுதிக்குள் மக்கள் மீண்டும் அவர்களது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பை காரணம் காட்டி தமிழ் மக்கள் சரித்தர ரீதியாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து அம் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை வேறு இடங்களில் வாழவைக்க இந்த அரசாங்கத்துக்கு இருக்கும் நோக்கத்தை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு போனால் அரசாங்கம் தங்களை மீண்டும் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு இடமளிக்காது என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சந்தேகமே அவர்கள் வெளியேறி வருவதில் முக்கியமான தடையாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே, இந்தியா இவ்விதமான முயற்சியில் ஈடுபட்டால் இம் மக்களை முழுமையாக அவர்களது சொந்த வதிவிடங்களில், கிராமங்களில் மீள குடியேற்றுவதற்கும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் புத்தளம் மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்கள்

sri-lanka-election-01.jpgவடமேல் மாகாண சபைத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கிங்ஸ்லி பெர்னாண்டோ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிடைத்துள்ள வாக்குகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஐந்து ஆசனங்களையும் பெற்றுள்ளன.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ;

1. அருன்திக பெர்னாண்டோ 45,837
2. அன்டனி விக்டர் பெரேரா 42,944
3. இந்திராணி தசநாயக்க 33,487
4. அசோக வடிகமங்காவ 32,277
5. பியசிறி ராமநாயக்க 30,637
6. சனத் நிசாந்த பெரேரா 29,416
7. சுமல் திசேரா 26,739
8. ஜனக சொய்சா 24,153
9. குமார ராஜபக்ச 18,812
10.மல்ராஜ் பீரிஸ் 17,756
11.மொஹமட் தாஹிர் 14,733

ஐக்கிய தேசியக் கட்சி:

1. சாந்த சிசிர குமார 17,876
2. சுகத் சந்திர சேகர 14,117
3. கிங்ஸ்லி லால் பெர்னாண்டோ 14085
4. டொன் ஹெக்டர் 13,435
5. ஆப்தீன் யஹ்யா 12,724

புதிய விசா தடைகள்; விரைவில் அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgபிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.  வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தற்போது நடைமுறையிலிருக்கும் தகைமை மற்றும் குறைந்தப்பட்ச சம்பள மட்டங்களாக இருந்த பட்டதாரி கல்வி கற்பவர் மற்றும் 17 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் புதிய விதிமுறைகளின் பிரகாரம் முழுநிலை பட்டதாரி மற்றும் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாக உயர்த்தப்படவிருக்கிறது.

பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜெக்கியூ ஸ்மித் வெகு விரைவில் இந்த புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் அனைத்து மட்டங்களிலுமான குடியேற்றங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கத்திலான திட்டத்தின் கீழேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டனுக்கு வேலைக்கு வருபவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டியது முக்கியமென நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து தகைமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பிரிட்டன் வருவதை நாம் ஏற்கனவே நிறுத்தியிருந்தோம். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார வீழ்ச்சி பிரிட்டன் தொழிலாளர்களை பாதிப்பதால், நாம் எமது தெரிவு நடவடிக்கையை எப்படி மேலும் இறுக்கப்படுத்துவது என்பது பற்றி செயற்பட்டு வருகிறோம்’ என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஸ்மித் சண்டே ரெலிகிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதுக்குடியிருப்புப் பகுதியில் 2 நாள்களாக கடும் சண்டை

SL_Army_in_Killinochieமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புக்கு மேற்குப் பகுதியிலும் அம்பலவன்பொக் கணைக்குக் கிழக்குப் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடக்கம் இராணுவத்தினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சண்டை இடம்பெற்று வருகிறது எனப் படைத்தரப்பு நேற்றுச் செய்தி வெளியிட்டது. இச்சமர்களில் நேற்று முன்தினம் வரை 36 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் 11 சடலங்களைத் தாங்கள் மீட்டனர் என்று இராணுவத்தினர் நேற்றுக் கூறினர்.

புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சண்டையில் விடுதலைப் புலிகள் 20 பேர் உயிரிழந்தனர். 18 பேர்வரை காயமடைந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளில் இருவரின் சடலங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்மைப்புத் தளம் ஒன்றையும், ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றையும் இதேவேளை 57 படையணியால் விசுவமடுவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கிளைமோர்க்குண்டுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆவது டிவிசனின் படையணி கைப்பற்றியது என்றும்  அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதேசமயம், அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சண்டையில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.