நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மட்டுமே சில பிரச்சினைகளுக்கு தீர்வு- ரவி கருணாநாயக்க எம்.பி.

srilanka-parliament.jpgநிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தால் மட்டுமே சில முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இலங்கை அரசு உலக நாடுகளுடனும் யுத்தம் புரிவதால் இங்கு முதலிடுவதற்கு எந்தவொரு நாடும் முன்வருகின்றதில்லையெனவும் கூறினார். அண்மையில்  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை அங்கீகரிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கின்றேன். இந்த நாட்டில் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதிகாரங்களை ஓரிடத்தில் மையப்படுத்தியே ஆட்சி புரிந்தனர், புரிகின்றனர். இந்த அதிகார முறை மாற்றப்படவேண்டும். பாராளுமன்றத்தினூடாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால்தான் முக்கிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

இலங்கையரசு உலக நாடுகளுடனும் தற்போது யுத்தம் புரியத் தொடங்கிவிட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், அந்த நாட்டின் விசேட பிரதிநிதி டெஸ்மன் பிரௌன் உட்பட பலருடன் முரண்படுகிறார்கள். அரசின் இந்த நிலைப்பாட்டால் இலங்கையில் முதலிட வெளிநாடுகள் மறுக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விடுதலைப்புலிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இந்திய ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது முன்னர் இல்லாத நிலைமை. இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதையே இது காட்டுகின்றது.  பிரிமா தொடர்பாக என்னைக் குற்றவாளியாக்கி, தேசத்துரோகியாக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக இந்த அரசு காட்டியது. நான் நீதிமன்றம் சென்றே இந்த அரசின் வாயை அடக்கினேன். இன்று பிரிமா தொடர்பாக இந்த அரசு என்ன செய்கின்றது?  மிஹின் லங்காவை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் தினமொன்றுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. இந்த விமான சேவையில் பயணிக்க எவருமே இல்லையெனக் கூறப்படுகின்றது.

ஹெட்ஜிங் மூலம் இந்த நாட்டு அப்பாவி மக்களின் பணமே நாசமாக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்திலேயே பாலம் கட்டப்படுகிறது. இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் இந்த அரசினால் சீரழிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *