வேட்பாளர்களின் தராதரங்களை அறிந்தே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர் – இரா.தங்கவேல்

election_ballot_.jpgமலையக வாக்காளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதைவிடுத்து ஒவ்வொரு வேட்பாளர்களையும் நன்றாக அறிந்தே வாக்களித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. எவரது முகவரிக்காகவோ அல்லது எவரது முன்னணி கட்சிக்காகவோ அன்றி களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுய உருவத்தை அவரவர் ஆற்றியிருக்கின்ற சேவைகளை கணக்கிட்டுப் பார்த்தே தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னை நாள் பிரதித் தலைவருமான இரா.தங்கவேல் இம்புல்பிட்டி தோட்ட கீழ்ப்பிரிவில் நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட பொதுச்செயலாளர் தமதுரையில்;

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவையும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் வழங்கியிருக்கின்ற தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலையக மக்கள் எத்தகையோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள் என்பதையும் எந்தவித கவர்ச்சிக்கும் வெளிப்பிரசாரங்களுக்கும் எளிதில் ஏமாறுபவர்கள் மலையக மக்கள் அல்ல என்பதையும் உணர்த்தி உள்ளார்கள், வெறுமனே வெற்று வேட்டுகளுக்கும் தலைமைத்துவத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு அல்லது அவர்கள் மூட்டிய நெருப்பில் குளிர்காய நினைக்கும் கையாலாகாத பேர்வழிகளுக்கு துணைபோக மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாது கட்சிவிட்டு கட்சி தாவி சீட்டு வாங்கியவர்களை மலையக மக்கள் நன்கு இனங்கண்டு தங்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். தகுதி வாய்ந்த வேட்பாளர் இல்லையென்ற முடிவுக்கு வந்த பெருவாரியான வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்துவிட்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைத் தவிர்த்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருவாரியான மலையக மக்கள் வாக்களிப்பதையே தவிர்த்திருப்பதை பார்க்கின்றபோது அவர்களது ஆர்வமின்மையையும் வாக்குகளைப் பெற தகுதியற்றவர்களை மேடையேற்றிய கட்சிகளுக்கு ஒரு படிப்பினை புகட்டும் விதத்திலும் மக்கள் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது. குறிப்பாக கண்டிமாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் இருந்த போதிலும் அதில் 40 வீதத்தினரே வாக்களித்துள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயம் மாத்திரமின்றி, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்த்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர்களது தலைமைத்துவத்திற்கும் விடுத்த எச்சரிக்கையாகவுமே கருத வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *