2009

2009

கிழக்கில் கடும் உஷ்ணம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் உஷ்ணமான காலநிலை நிலவுகின்றது. பகல் வேளைகளில் கடும் வெயிலுடன் கூடிய வெப்ப மான காலநிலை நிலவுவ துடன் இரவு வேளைகளிலும் கடும் உஷ்ணம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

இந்த வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். போதிய காற்றோட்ட வசதிகளற்ற வீடுகளில் வசித்து வரும் வறிய மக்களும், அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களும் உஷ்ணமான காலநிலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தத்திற்கு அவசியமில்லை – வெளிவிவகார அமைச்சர்

bogolagama-1612.jpgஅரசாங் கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகமான ஜோன் ஹோம்ஸ் நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்தே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

பாதுகாப்புச்சபை கட்டிடத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தம் அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது கூட்டம் முடிவுற்ற நிலையில் அதுதொடர்பில் சனிக்கிழமை மாலை இன்டர்கொண்டினால் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்கு வருகைதந்துள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஜோன் ஹோம்ஸ் நேரடியாகச் சென்று அவதானித்து திருப்தியுற்ற நிலையிலேயே விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு கோரியுள்ளார்.

பொதுமக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதவாறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது.

32 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரசு உரியமுறையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசின் மனிதாபிமான நடவடிக்கைகளையடுத்து ஜப்பான் உட்பட ஏனைய உலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறும் அவர்களால் தடுத்து வைக்கப்படும் மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை தடைசெய்வது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும்.

இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க நான்கு ஆஸ்பத்திரிகள் தயார்

trico.gifவன்னியி லிருந்து கடல் மார்க்கமாக திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் நோயாளர்களை கந்தளாய், பொலன்நறுவை, வவுனியா மற்றும் மன்னார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள். மருந்துப் பொருட்கள், ஆளணிகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்றனர்.  அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகல நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் விசேட பணிப்பிற்கிணங்க நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் சுகாதார தேவைகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் போஷாக்கின்மையால் உள்ளவர்களுக்கு எவ்வித வயது வித்தியாசமுமின்றி திரிபோஷா வழங்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறவேண்டும்- சிவசேனா

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா’ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம்.

இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது?

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள்.

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது. இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.

கனகரட்ணம் எம்.பி.யின் செயலாளர் வவுனியாவில் கடத்தப்பட்டார்

white-van.jpgவன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி கே.கனகரட்ணத்தின் செயலாளர் நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கனகரட்ணம் எம்.பி.தற்போது வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிறார். இவரது செயலாளர் செல்லத்துரை சபாநாதன் தனது குடும்பத்தவர்களுடன் வவுனியா வைரவபுளியங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் வசிக்கிறார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இவரது வீட்டிற்கு வெள்ளை வானொன்றில் ஆயுதங்களுடன் சென்ற சுமார் பத்துப் பேர் இவரை கடத்திச் சென்றுள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிலிருந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே இவர் கடத்தப்பட்டார்.

இது தொடர்பாக அவரது மனைவி, வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியான சிவநாதன் கிஷோரிடம் தெரித்துள்ளார். கடத்த வந்தவர்கள் தொடர்பாகவும் வெள்ளை வானின் இலக்கத்தகடு எண் தொடர்பாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, சிவநாதன் கிஷோரும் வன்னிமாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும்- நாஞ்சில் சம்பத்

naagil.jpgஇலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்து மாறு மத்திய அரசை நிர்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். நாங்களோ (ம.தி.மு.க.), அல்லது பா.ம.க., கம்யூனிஸ்டுகள் நினைத்தாலோ தி.மு.க. அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் நினைத்தால் மட்டும்தான் முடியும். அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதே போல் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா? அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுவிடுவார்கள். விரைவில் இலங்கையில் தனி நாடு பிறக்கும். அதன் பெயர் தமிழ் ஈழமாக இருக்கும். தமிழின தலைவனாக பிரபாகரன் இருப்பார். தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று பேசினார்.

‘வித்தியாதரனை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்’

vithyatharan.jpgகைது செய்யப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட உதயன், சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் நடேசன் வித்தியாதரனை விடுவிக்கக் கோரி, சென்னையில் நேற்று செய்தி ஊடகக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் போரை எதிர்த்து எழுதியதாகக் கொலைசெய்யப்பட்ட 16 பத்திரிகையாளர்களின் மரணம் குறித்து ஐ.நா. மன்றம் விசாரிக்கவேண்டும், இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும், ராஜபக்சவை விமர்சித்து நக்கீரன் பத்திரிகையில் வெளியான முகப்பு அட்டை குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக, சென்னையில் இயங்கும் இலங்கைத் துணைத்தூதர் அம்சா மிரட்டல் அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது; இத்துடன் அதைத் திரும்பப் பெறவேண்டும், உதயன் நாளிதழ், சுடரொளி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் வித்தியாதரனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டைம்ஸ் ஆப் இன்டியா சென்னைப் பதிப்பின் அரசியல் பிரிவு துணை ஆசிரியர் கே.வி.ரமணி, அரசியல் செய்தியாளர் குணசேகரன், டெக்கான் ஹெரால்ட் சென்னை செய்தியாளர் முராரி, சன் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுசி. திருஞானம், மாலைச்சுடர் நாளிதழின் முதுநிலை செய்தியாளர் துரை. கருணா, சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதி தமிழன், முதுநிலை செய்தியாளர் சஞ்சய் ரகுநாதன் உட்பட பலர் இங்கு உரையாற்றினார். 

விமானப் படை விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என விமானப்படைப் பேச்சாளர் அறிவிப்பு

mi-24.jpgவிமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி  பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

houses-of-parliament-london-uk.jpgபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லண்டன் நகர மத்தியில் பாராளுமன்ற சதுக்கத்தில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களில் ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெற்றோலை ஊற்றி விட்டு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார்.

எனினும் , அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து செயற்பட்டு அவரைக் கீழே தள்ளி விழுத்தி நிலத்தில் உருட்டி அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் பொலிஸாரும் நின்றிருந்தனர்.

அவர்களும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற அந்தத் தமிழ் இளைஞனை உடனடியாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டதால், அவர் பாரதூரமான காயங்களுக்குள்ளாக வில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அந்தப் பகுதி மக்களும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி லண்டன் டவுணிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் வீட்டின் முன்பாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒருவர் தீக்குளிக்க முனைந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.

அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களது துயர் குறித்து அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே தற்போது மேற்கு நாடுகளில் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரம் பிரதமர் இல்லத்தில் இல்லை சோனியாவின் இல்லத்தில்: அத்வானி

advani.jpgஇந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இந்தியாவின் கருத்தை இலங்கை அரசு செவிமடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்ய முடியாவில்லை என ஊடகவியலாளரிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதுமே பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.