வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி கே.கனகரட்ணத்தின் செயலாளர் நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கனகரட்ணம் எம்.பி.தற்போது வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிறார். இவரது செயலாளர் செல்லத்துரை சபாநாதன் தனது குடும்பத்தவர்களுடன் வவுனியா வைரவபுளியங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் வசிக்கிறார்.
நேற்று மாலை 3.30 மணியளவில் இவரது வீட்டிற்கு வெள்ளை வானொன்றில் ஆயுதங்களுடன் சென்ற சுமார் பத்துப் பேர் இவரை கடத்திச் சென்றுள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டிலிருந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே இவர் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக அவரது மனைவி, வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியான சிவநாதன் கிஷோரிடம் தெரித்துள்ளார். கடத்த வந்தவர்கள் தொடர்பாகவும் வெள்ளை வானின் இலக்கத்தகடு எண் தொடர்பாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, சிவநாதன் கிஷோரும் வன்னிமாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.