வன்னியி லிருந்து கடல் மார்க்கமாக திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் நோயாளர்களை கந்தளாய், பொலன்நறுவை, வவுனியா மற்றும் மன்னார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள். மருந்துப் பொருட்கள், ஆளணிகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்றனர். அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகல நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் விசேட பணிப்பிற்கிணங்க நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் சுகாதார தேவைகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் போஷாக்கின்மையால் உள்ளவர்களுக்கு எவ்வித வயது வித்தியாசமுமின்றி திரிபோஷா வழங்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.