அரசாங் கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகமான ஜோன் ஹோம்ஸ் நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்தே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
பாதுகாப்புச்சபை கட்டிடத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தம் அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது கூட்டம் முடிவுற்ற நிலையில் அதுதொடர்பில் சனிக்கிழமை மாலை இன்டர்கொண்டினால் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்கு வருகைதந்துள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஜோன் ஹோம்ஸ் நேரடியாகச் சென்று அவதானித்து திருப்தியுற்ற நிலையிலேயே விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு கோரியுள்ளார்.
பொதுமக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதவாறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது.
32 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரசு உரியமுறையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரசின் மனிதாபிமான நடவடிக்கைகளையடுத்து ஜப்பான் உட்பட ஏனைய உலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறும் அவர்களால் தடுத்து வைக்கப்படும் மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது.
மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை தடைசெய்வது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும்.