2009

2009

“லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

parliament-of-sri-lanka.jpgஇலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி, இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே பீலிக்ஸ் பெரேரா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே அம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அப்பாவித் தமிழ் மக்களுக்காக செயற்படாமல், பயங்கரவாதிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே, இனியாவது தமிழ் மக்களுக்கு ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டுமெனில் இப்போதாவது ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.  தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவராக ஜனாதிபதியே இருக்கிறார். அதற்கு அப்பாலான உண்மை எதுவும் கிடையாது.

இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி பின்னர் இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதியினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  இது வரலாற்றில் எழுதப்படும். இதேநேரம், கனரக ஆயுத பாவனை நிறுத்தம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி.யான பாலித ரங்க பண்டார வெளியிட்ட கருத்து சர்வதேச சமூகத்தை குழப்புவதற்கு கூறியதாகும். எனினும் எமது படையினர் அப்படி செயற்படமாட்டார்கள் என்றார்.

பட்டினிச் சாவிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – உலக நாடுகளுக்கு புலிகள் கோரிக்கை

lttelogo.jpgவன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை இலங்கை அரசு தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களுக்கான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்ட முறையில் இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பதால், பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள தமிழர்களுக்காக நேரடியாகவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இந்த முயற்சியைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தார்மீக, அரசியல் ஆதரவை அனைத்துலக சமூகம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். கடந்த சில நாட்களில் மட்டும் பட்டினியால் ஒன்பது பேர் மரணமடைந்திருப்பதுடன், இவ்வாறு மரணமடைபவர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் பெருமளவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதையும் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

இங்குள்ள 1,65,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையில் புலம்பெயர்ந்த மக்களுடைய இந்த முயற்சி மிகவும் அவசரமானதாக இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா.வும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதுடன், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் அனைத்தையும் மீறும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்கின்றது.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 2,474 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் தேவை என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டிருந்த போதிலும், 2008 ஏப்ரல் 2 ஆம் நாள் 60 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்குத் உலக உணவுத் திட்டம் தயாராகவிருந்த போதிலும், உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் அரசினால் தடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கத்திடமும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களிடமும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலியுறுத்திய போதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

உலக நாடுகளின் அக்கறைகளைக் கவனத்திற்கொள்ளாமல் புறந்தள்ளி, தன்னுடைய இனப்படுகொலை நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டிருப்பதற்கு எதிராக உலக நாடுளால் இதுவரையில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு தடுப்புக்காவல் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களும் வெளிநாட்டு அரசுகளும், விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் உள்ள 1,65,000 மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் உடனடி ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை காரணமாகத்தான் நேரடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தூண்டப்பட்டனர். எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களினாலும் அவதிப்படும் எமது மக்களின் நிலை திட்டமிட்ட முறையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் தடுத்துவைத்திருப்பதால் மேலும் மோசமாகியிருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடங்கியுள்ள இந்தப் பணிக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. முரண்பாடுகளின் மொத்த உருவம்-ப.சிதம்பரம்

chitambaram.jpgஅதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா முரண்பாடுகளிம் மொத்த உருவம். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்த அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பல விஷயங்களில் காங்கிரசோடு முரண்படுகிற கட்சியாக இருந்து வருகிறது. அது ஒத்த கருத்துடைய கட்சியாக மாறும் சூழ்நிலை உருவாகும் என்று நான் நம்பவில்லை. அதிமுக மதசார்பற்ற கட்சி என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கரசேவைக்கு ஆதரவு அளித்தவர்தான் ஜெயலலிதா. நரேந்திர மோடியுடன் நட்பு கொண்டு அவரது பதவி ஏற்பு விழாவுக்கும் சென்று வந்தார்.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து வருவதோடு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் பொடா சட்டம், கட்டாய மதமாற்ற சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியவர். இவரை எப்படி மதசார்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி கடந்த 4 வாரமாக அவர் தனது நிலைகளையும், முடிவுகளையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழும் ஜெயலலிதாவின் நோக்கம் இந்திய அரசை அமைப்பது அல்ல.

தமிழகத்தில் உள்ள திமுக அரசை கவிழ்ப்பது அல்லது கலைப்பதுவுமே ஆகும். இந்த நோக்கத்தோடு செயல்படும் அவரோடு காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உறவு ஏற்பட முடியும். இதுபோன்ற ஐயங்களை கிளப்பும் ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்க இதுவரை 1 87 840 பேர் வந்துள்ளனா – அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் தகவல்

20090424063601srilanka4.jpgபுலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1 இலட்சத்து 87 ஆயிரத்து 840 பேர் இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரத்ன  தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவல் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவர்களில் 141492 பேர் 20 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன் ஏனையோர் நான்கு நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 11150 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் புல்மோடையில் 5663 பேர் தங்கியுள்ளனர்.

புலிகளிடம் தற்போது சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கைகையை திட்டவட்டமாக கூற முடியாவிடினும் மேலும் 20 ஆயிரம் பேர் புலிகளிடம் சிக்கியிருப்பதாக அரசாங்கம் உத்தேசிக்கின்றது. அவர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை தங்கவைக்க வலயம் நான்கின் ஆயிரம் ஏக்கர் காணியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு இலட்சம் பேர் வந்தாலும் அதத்னை பேரையும் தங்க வைக்க அரசு தயாராகவுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சு மிகப்பாரிய அளவிலான ஒரு சேவையை மேற்கொண்டு வருவதாகவும் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு நகரில் 4ஆவது நாளாகவும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்பு

sri-lankan-schools.jpg மட்டக்களப்பு நகரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு இன்று 4 ஆவது நாளாக மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே சமூகமளித்திருந்ததாக வலயக் கல்விப் பணிமனை தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா(வயது 08) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அச்சநிலை பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் வெசாக் வைபவம்

vesak.jpgகொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நாளை 08 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது.

ஆசிரம மண்டபத்தில் மாலை 7.15 மணிக்கு நுகே கொடை பாகொடை தியான நிலையத்தில் வண. ஓலந்த ஆனந்த தேரோ, புத்த பெருமானின் செய்திகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

வவுணதீவில் ஆசிரியர் சுட்டுக்கொலை

gun00.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் நேற்றுக்காலை (06.05.2009) பாடசாலை ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வவுணதீவு பாவற்கொடிச் சேனையிலுள்ள பாவற் கொடிச்சேனை பாடசாலை யில் கடமையாற்றும் பால சிங்கம் ரவீந்திரராசா (33) எனப்படும் ஆசிரியரே இதில் கொல்லப்பட்டவரென வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வரும் இவ் ஆசிரியர் நேற்றுக்காலை பாடசாலை சென்று கொண்டிருந்த போது 7.20 மணியளவில் கண்ணங்குடா பிள்ளையாரடியில் வைத்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுச் சென்றுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான இவ் ஆசிரியர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.பட்டதாரி ஆசிரியரான இவர் மங்கிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், தற்காலிகமாக மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

64 பீப்பாய்கள் – 13,440 லீட்டர் மண்ணெண்ணெய் புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போது 64 பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த 13 ஆயிரத்து 440 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 15 வெற்றுப் பீப்பாய்களை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதலில் அதிசக்தி வாய்ந்த கிளேமோர்கள், படகு வெளி இணைப்பு இயந்திரம் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது, அங்கிருந்து ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 64 பீப்பாய்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பின் மற்றுமொரு பிரதேசத்தில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் போது 9 குதிரை வலுவைக் கொண்ட படகு இயந்திரம் – 01, 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 08, 12.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு – 01, 7 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, 4 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03 மற்றும் 1.5 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, கைக்குண்டுகள் – 53, 750 ரி – 56 ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 01, 1500 எப். என். சி. ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 02 மற்றும் ரி – 56 ரக துப்பாக்கிகள் – 08 என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: சபையில் ஸ்ரீ காந்தா

parliament-of-sri-lanka.jpgபிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது:-

வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் எவ்வேளையிலும் கொல்லப்படலாமென குறிப்பிட்டார். இந்த அரசுக்கு போரை நடத்துவதற்கு வெளிநாட்டுப் பணம் தேவை. இந்திய அரசின் ஆயுத உதவிகள் தேவை. ஆனால் அவர்களின் அறிவுரைகள் தேவையில்லை. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டு உள்நாட்டில் ஆட்டம’் போட நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சர்வதேச சமூகம்  இலங்கை அரசுக்கு விரைவில் உணர்த்தும்.

வன்னியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் எவ்வேளையிலும் விமான,எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்படலாம். ஆனால் அரசோ தனது இராணுவ நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கையெனக் கூறுகின்றது. தயவுசெய்து அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அந்தச் சொல்லுக்குள்ள புனிதத்தை கெடுத்துவிட வேண்டாம். வன்னியில் அரசு சிங்கள இளைஞர்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மக்களை படுகொலை செய்கிறது. புலிகளும் கொல்லப்படுகிறார்கள். எதிர்கால சந்ததி அழிந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அரசியல் தீர்வு காண இன்னும் நேரம் கடந்து விடவில்லை. இப்போதும் நாமும் புலிகளும் தயாராகவே உள்ளோம். இந்த அரசு தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கிவிட்டோம் என்ற உணர்வை சிங்கள மத்தியில் ஊட்டுகிறது. இது அதிககாலம் நீடிக்காது. பொருளாதார நெருக்கடியை சிங்களமக்கள் உணரும்போது தெளிவடைவார்கள். பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்மக்கள் இப்போது கூட சிங்கள மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றனர். அவர்கள் ஒரு நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். இந்த எண்ணத்தை தக்கவைப்பது சிங்கள மக்களினதும் அரசினதும் கைகளில்தான் உள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்தீன் ராஜினாமா

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார்.

இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார்.  தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப்பதாக யு.எல்.எம். முபீன் தெரிவித்தார்.