2009

2009

மீள்குடியேற்ற மக்களின் சுகாதாரம்; தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

chandrasiri_governer.jpgவடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையிலும், மழை காலமாதலால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியாவிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கினார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீள்குடியேற்றம், அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், விவசாய நடவடிக்கைககளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பகுதியில் உடனடியாக 7000 வீடுகளை கட்டுவதற்கான துரித வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பிக்குமாறும் அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சாரம், போன்ற சகல துறைகளிலும் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் தத்தமது பிரதேசத்திற்கு திரும்பும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும், அனுமதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தமது பொருட்களை கொண்டு செல்வதற்காக கெண்டர் ரக 2 வாகனங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் தேவைகளுக்கென 700 துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

அடம்பன் மற்றும் திருக்கேதிஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு தாதியர் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்கென துவிச்சக்கர வண்டிகளும் பெற்றுக் கொடுக்கப் படவுள்ளன. அத்துடன் இப்பகுதியில் டெங்கு, மலேரியா தடுப்புக்கென நடமாடும் நோய்த்தடுப்பு பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது வடமாகாண பிரதம செயலாளர் வீ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நுரைச்சோலை மின் நிலைய 2ம் கட்ட பணிக்கு சீனா கடனுதவி

நுரைச்சோலை அனல் மின் நிலைய இரண்டாம் கட்டப் பணி சீன அரசின் 891 மில்லியன் டொலர் இலகு கடனுதவியுடன் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 600 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய முதலாம் கட்டப் பணிகள் 2010ல் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வுள்ளது. முதலாம் கட்டத்திற்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்திவைப்பு

janka.jpgஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 2010ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்கள் நடாத்தப் படவிருப்பதால்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலும் நடாத்தப்படவுள்ளது. அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இரண்டு பிரதான தேர்தல்கள் எப்ரல் மாதத்திற்குள் நடைபெறவிருப்பதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதற்கு முடிவு செய்துள்ளேன். இது விடயமாக கலந்துரையாடி வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இறுதியாக 2005ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப்பட்டது. அதன்படியே 2010ம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டப்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்க அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் ஜோன் ஹோம்ஸ் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, ஏ. செல்வம் அடைக்கலநாதன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், பி. அரியநேத்திரன், விலியம் தோமஸ் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

நேற்றுக் காலை 10.30 மணி முதல் 11.15 வரையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீளக் குடிய மர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி நிவாரணம், புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தினர்.

உருப்படுமா இந்த யாழ் இனவாதச் சிந்தனை? : யூட் ரட்ணசிங்கம்

Palmyra_Treeyarl_instrumentதமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.

வீரகேசரி, டான் ரிவி  என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

டான் ரிவி  வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
 
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி  வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.

மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?

முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)

Eelam_and_Panaiயாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.

கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும். 

அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக  மற்றய மாவட்டங்களையும்  மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.

தொடர் மழையால் 58,000 பேர் பாதிப்பு; 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

srilanka-today.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக நேற்றுவரை 58,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவ்வனர்த்தங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளதுடன் கண்டி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் மழை தொடரும் எனவும் இரவு நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால் மின்னலிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

பன்றிக் காய்ச்சல் – மத்திய மாகாண பாடசாலைகள் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி பூட்டு.

influenza-a.jpgஇதுவரை  பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த  இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ்  இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது.  இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக  கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர்  நவம்பர் 04, 2009ஆம் திகதி  உயிரிழந்தார்.

தற்போது 10 பேர் அளவில், ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  இதையடுத்து,  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணத்திலுள்ள 1470 பாடசாலைகளையும் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சுவிஸ்ஸில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு

011109dag.jpgதமிழ் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சுவிற்சர்லாந்திற்கு வந்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு நவம்பர் 20ல் சுவிஸில் நடைபெறவுள்ளது. ‘சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு’ இதுவென இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ள அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. இச்சந்திப்பில் ‘சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம்பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படும்’ எனவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாளை (நவம்பர் 20ல்) ஆரம்பமாக உள்ள மாநாட்டிற்கு நேற்று (நவம்பர் 18ல்) பெரும்பாலான தமிழ் முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்கள் சுவிஸ் வந்தடைந்தனர். இவர்களுக்கு மாநாட்டினை ஆரம்பித்து வைக்கு முன்னர் இன்று மாலை (நவம்பர் 19) விருந்துபசாரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. (தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்)

இம்மாநாட்டுக்கு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடனான சந்திப்பு ஒன்று நவம்பர் 18ல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணம் வந்து அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பிற்கு புலம்பெயர்ந்த மக்கள் சற்றுத் தள்ளி நிற்பதாக முதலமைச்சர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் தமிழ் கட்சிகளின் மாநாடு முற்றுப்பெறுமுன் இலங்கைக்குத் திரும்புவார் எனத் தெரியவருகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பில் தேசம்நெற் வாசகர்கள் கேட்கும் கேள்விகளும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். ஆகவே தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யவும்.

அமைச்சரைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் சுவிஸ் சென்றுள்ளனர்.

சந்திப்பு நடைபெறவுள்ள காலம்
மாலை 6:00 நவம்பர் 20 2009

சந்திப்பு நடைபெறவுள்ள இடம்
Katholische Universitätsgemeinde (AKI)
Alpeneggstrasse 5 
3012 Bern

ஜனாதிபதிக்கு தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோரின் பிறந்த நாள் வாழ்த்து

18kishor.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

18kishor.jpg

யாழ் பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டடம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் பட்டப் பின்படிப்பு கல்விப் பீடத்துக்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
 
அதன்படி 42.35 மில்லியன் ரூபா செலவில் 600 சதுர மீற்றர் பரப்பளவில் இதற்கான மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.தற்போது இந்தப் பீடத்தில் சுமார் 600 மாணவர்கள் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.