2009

2009

இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில் தண்டவாளத்தில் ஓடுகின்றன. – இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வியப்பு

rail_bus000.jpgதரையில் ஓடும் இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில்; தண்டவாளத்தில் ஓடுகின்றன. இந்தியாவில் கூட நாம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை.  இலங்கையில்தான் முதற் தடவையாக எமது நாட்டுத் தயாரிப்பான அசோக்லேலண்ட் பஸ்கள் இப்படி மாற்றப்பட்டு ரயில்பஸ் ஆக சேவையில் ஈடுபட்டுள்ளது. எனவே இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இப்படி ரயில்பஸ்களைத் தயாரிக்க வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கூறினார்.

கிழக்கு மாகாண சபைக்கு இந்தியா உதவியாக வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ரயில்பஸ்’ சேவையின் ஆரம்ப வைபவம் நேற்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையில் சேவையில் ஈடுபடுவதற்கும்,  கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடுவதற்கும் 5 ரயில் பஸ்களை தயாரிப்பதற்காக இந்தியா 44 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்களை வழங்கியது.

அத்தோடு தயாரிப்புச் செலவாக இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.  இதற்காக மொத்தம் 66 மில்லியன் ரூபாவை இந்தியா செலவிட்டுள்ளது.

இந்தச் சேவையானது இந்திய – இலங்கை நட்புறவுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.  இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பஸ்கள் இலங்கையில், தண்டவாளத்தில் ஓடும் ரயில் பஸ்களாக தற்போது மாற்றப்பட்டு சேவையில் ஈடுபடுவதுதான் என்றார்.

பாக். உயர் நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை

musharap.jpgபாகிஸ் தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கு நேற்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முஷாரபோ அல்லது அவர் சார்பாகவோ எவரும் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம்; உத்தரவிடடிருந்தும் முஷாரப் சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.

பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும்,  நீதிபதிகளை பதவி நீக்கம்  செய்ததைக் கண்டித்தும்,  வக்கீல் சங்கங்கள்; உயர் நீதிமன்றத்தில்; கடந்த வாரம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது.
 

படைப்பிரிவு தளபதிகளுக்கு பதவி உயர்வு

brigadier_prasanna_silva.jpgவடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய மூன்று தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார்.

அதன்படி  கட்டளைத் தளபதிகளான பிரிகேடியர் பிரஸன்ன சில்வா, பிரிகேடியர் சவேந்ர சில்வா மற்றும் பிரிகேடியர் சாகி கால்லகே ஆகிய மூவரும் மேஜர் ஜெனரல்களாக  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

வன்னி நடவடிக்கைகளின் போது 55 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்ன சில்வா கடமையாற்றினார். 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக  பிரிகேடியர் சவேந்ர சில்வா கடமையற்றியதுடன் குடும்பி மலையை மீட்ட பிரிகேடியர் சாகி கால்லகே 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக வன்னி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

இதேவேளை 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமல் குணரத்ன மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் பல கேர்ணல்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

உதவி வழங்குவதும் உரிமைப் போராட்டமும் : த ஜெயபாலன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இராணுவ பாடப்புத்தகம் போல் கால அட்டவணையிடப்பட்டு மே 18 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆயினும் யுத்தம் ஏற்படுத்திய அழிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் குறையவில்லை. வன்னி முகாம்களின் முட்கம்பிகள் இலங்கை அரசின் முகத்திரையை இன்னமும் கிழித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசோ அது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. தமிழ் மக்களின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தனிநாடு கேட்ட நிலை போய், தற்போது வன்னி முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை என்ற நிலைக்கு மறைந்த தலைவர் வே பிரபாகரனும், அவரது விடுதலைப் புலிகள் இயக்கமும், இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது.

வன்னி மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி அரசியல் சார்ந்ததே. முகாம்களில் உள்ள இம்மக்கள் இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயரவில்லை. தற்போது அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட்டு உள்ளது. இவர்களை 180 நாட்களுக்குள் மீளக் குடியமர்த்தப் போவதாக அரசு அறிவித்த போதும் அவர்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தடுத்த வைக்கும் திட்டமே இருக்கின்றது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நிரந்தரக் கட்டுமானங்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக உள்ளனர். இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வரைமுறைகளையும் மீறி எதேச்சதிகார அரசாக தன்னை கட்டமைத்துள்ளது. இந்நிலையில் வன்னி முகாம்களில் உள்ள தமிழ் மக்களுடைய நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் இன்னமும் தனக்குள் உடன்பட முடியாதவர்களாக முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவது உட்பட அம்மக்களின் நலன் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இணைந்து செயலாற்ற முடியவில்லை. இவர்கள் பல கோணங்களில் பிரிந்துள்ளனர். இதில் இரு பிரதான பிரிவுகள் உண்டு.
1. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது.
2. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது.

முதலாவது பிரிவினர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி, தனிநாட்டுக்கான தமது அரசியலைப் பலப்படுத்த நினைக்கின்றனர். தனிநாடு அமைப்பதே இப்பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வாக அமையும் என நினைக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காத சிறு பகுதியினரும் இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது அர்த்தமற்றது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு அரசுக்கு நிர்ப்பங்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் அரசுக்கு ஆதரவானவர்கள். முற்று முழுதாக அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கை அரசு நோகாமல் செயற்படுவதன் மூலமே வன்னி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என நம்புகின்றனர். அல்லது ரிஎன்ஏ தவிர்ந்த தமிழ் கட்சிகள் போன்று இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரரலின் கீழ் செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளுக்கு முன் சலுகைகளையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இருக்கின்றனர்.

மற்றுமொரு சிறு பிரிவினர் தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் அதே சமயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு அரச கட்டமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குவது தவிர்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனால் முகாம்களுக்கு உதவிகளை வழங்க முற்படுபவர்களும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகளைப் பேச முற்படுபவர்களும் தங்களுடைய பாத்திரங்களை ஒன்றையொன்று குறுக்கீடு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

‘வன்னி முகாம்களில் உள்ள மக்களுடைய பிரச்சினை அரசியல்ப் பிரச்சினை, அதனால் அதனை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக முடியும்’ என்பது தத்துவக் கோட்பாட்டுக்கு சரியாக அமைந்தாலும் யதார்த்தத்தில் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குறைந்தபட்ச உதவிகளைச் செய்வது தவிர்க்க முடியாது. ‘சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ அவலத்தில் இருந்து தப்பிய மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்துக் கொண்டு அவர்களது உரிமைகளுக்காக போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்வரை அவர்களால் காத்திருக்க முடியுமா? புலம்பெயர்ந்த நாடுகளில் போராடி மீட்கிறோம் காக்கிறோம் என்று முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் காத்திருந்த மக்களை இந்தப் போராட்டங்கள் எதுவும் காக்கவில்லை. மாறாக அம்மக்களை ஆயிரம் ஆயிரமாக மரணத்துள் தள்ளியது.

இந்த அவலத்திற்கு தாக்குதலை நடத்திய இலங்கை அரசு மட்டும் குற்றவாளிகள் அல்ல. அப்பகுதிக்குள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே. அதனைக் கண்டிக்கத் தவறிய வன்னி மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்காத அதன் ஆதரவாளர்களும் அதற்குப் பொறுப்புடையவர்கள். ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்துவார்த்த ரீதியில் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தில் அரசை மட்டுமே கண்டிக்க முடியும் என்று முரண்டு பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

அதேசமயம் வன்னி மக்களின் நல்வாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றது. அவர்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வாழ வைப்பதன் மூலமே தங்கள் அரசியலைப் பலப்படுத்த முடியும் என்று எண்ணுவது மூன்றாம்தர அரசியல். வன்னி மக்கள் அனுபவித்த அவலம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குகின்ற அதேவேளை அதற்குச் சமாந்தரமாக அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதும் முடிந்த உதவிகளை மேற்கொள்வதும் அவசியம். ஒன்றிற்காக மற்றையதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.

சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் (ஐஎன்ஜிஓ) மங்களின் போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கின்றது, ஏகாதிபத்தியங்களின் முகவர்களாக செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உண்டு. அதற்காக வன்னி முகாம்களில் இருந்து ஐஎன்ஜிஓ க்களை அகற்ற வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தமானது என்பதும் அது இலங்கை அரசின் நோக்கிற்கே துணைபுரியும் என்பதும் வெளிப்படையானது. அதேபோல் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவது அரசுக்கு துணை செய்யும் என்கின்ற வாதம் அபத்தமானது. அரசின் விதிமுறைகளை மீறி முல்லைத் தீவுக் கடற்பரப்பில் வணங்காமண் கப்பலை தரையிறக்குவதாக தம்பட்டம் அடித்து பணம், பொருள், நேரத்தை வீணாக்கியது போன்று செய்ய வேண்டியம் அவசியம் யாருக்கும் இல்லை. உதவிகள் மக்களைச் சென்றடைவதற்காக அரசு விதிக்கின்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் முரளிதரன் அதிரடி ஆட்டம்

murali.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரன் மிகவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியுள்ளார்.
பின்வரிசை ஆட்டக்காரரான முரளிதரன் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுன்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு தம்புள்ள, சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். எனினும் அஞ்சலோ மெத்திவ்ஸ், அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் முறையே 43,  36, 33 ஓட்டங்ளைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். இறுதியாக முரளிதரனின் அதிரடி ஆட்டத்துடன் இலங்கைய அணி 232 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மொஹமட் ஆமிர் 3 விக்கட்டுக்களையும் அப்துல் ரஸாக் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இன்னும் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணி 233 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது. 

பிரபல நடிகர் ராஜன் பி. தேவ் காலமானார்

rajan_actor.jpgபிரபல இந்திய  திரைப்பட நடிகர் ராஜன் பி. தேவ் (58) புதன்கிழமை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ; மலையாளம்,  தெலுங்கு, கன்னடம், என பல துறைகளில் நடித்துவந்த அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். ஈரல் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ராஜன் பி.தேவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாகவே புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

ஆலப்புழை மாவட்டம், சேர்தலாவில் பிறந்த ராஜன், ஒரு நாடக நடிகராக வாழ்க்கையைத் தொடங்கினார். காட்டுக்குதிரை என்னும் நாடகத்தில் “கொச்சுவாவ’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நாடகம் ஆயிரம் முறை அரங்கேற்றப்பட்டது.

சினிமாவில் “இந்திரஜாலம்’ இவருக்கு முதல் படம். சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்துவந்த ராஜன்,  விரைவிலேயே பிரபலமானார். 30 ஆண்டுகளில் மலையாளம், தெலுங்கு,  கன்னடம், தமிழ் என மொத்தம் 180 படங்களில் அவர் நடித்துள்ளார்

பேருவளை மோதல் சம்பவம்; 131 சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்; ஓகஸ்ட் 6ம் திகதி வரை விளக்கமறியல்

beruwela.jpgபேருவளை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதான 131 சந்தேக நபர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக கைதான மற்றும் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபர்கள் நேற்று (29) களுத்துறை நீதவான் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போதே 131 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் சம்பவத்துடன் தொடர்புடை யதாகக் கூறப்படும் ஏனைய பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

பேருவளை மஹகொட பகுதியில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோதலில் மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு இருவர் கொல் லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் கடந்த 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதோடு இவர்கள் நேற்று வரை (29) விளக்கமறிய லில் வைக்கப்பட்டி ருந்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிக ளான சிரில் பெரேரா, கனிஷ்க ஆகியோர் ஆஜரானதோடு மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணி பிரேமரத்ன ஆஜரானார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் புஹாரி தக்கியா பிரதான சேகிற்கும் தொடர்பிருப் பதாக ‘பி’ அறிக்கை மூலமும் சாட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாகவும், எனவே பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்யுமா றும் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், பொலி ஸார் விசாரணைகளை வேறு பக்கம் திருப்ப முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சந்தேக நபர்கள் சார்பாக ஆஜ ரான சட்டத்தரணி சிரில் பெரேரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு சம்பவ நேரம் இரவு 12.30 மணியளவில் பிரதான சேக் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் இருந்ததாகவும் சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறினார். பொலிஸாரும் இதே கருத்தையே நீதிமன் றத்தில் முன்வைத்தனர்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்குப் பணித்தார். வழக்கு விசாரணையை பார்வையிட பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத் திற்கு வருகை தந்திருந்ததோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, தாக்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று (29) இடம்பெற்றன. பள்ளி வாசலில் சிந்தியிருந்த இரத்தக் கறைகள் கழுவப்பட்டதோடு தீ வைக்கப்பட்ட இடங் களும் சுத்தப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு ஆகஸ்ட் முதல் புதிய உபவேந்தர்

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தராக பொறியியற் பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.பீ. அபயகோன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி பழைய மாணவரான எஸ்.பீ.அபயகோன் உபவேந்தர் பதவிக்கான தேர்தலில் 15 வாக்குகளை பெற்றிருந்தார் இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன 9 வாக்குகளே பெற்றிருந்தார்.

ஆகஸ்ட் 1ம் திகதி முதல் புதிய உபவேந்தர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார். இவர் சார்க் பல்கலைக்கழக குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது போட்டி இன்று

sri-lanka-cri-te.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டெஸ்ட் போட்டியில் இலங்கை – அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் தொடரை கைவிட்ட நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்த நிலையில் களத்தில் குதிப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விமானச்சீட்டு விலை குறைப்பு ஜயலத் எம்.பி. நன்றி தெரிவிப்பு

யாழ். கொழும்பு விமானப் பயணத்திற்கான விமானச்சீட்டு விலை 1,500 ரூபாவால் குறைக்கப்பட்டமை தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்.கொழும்பு விமானச்சீட்டு விலையைக் குறைக்குமாறு கடந்த முதலாம் திகதி சிவில் விமான சேவை அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம திஸாநாயக்கவிற்கு அனுப்பிய வேண்டுகோளுக்கமைய 1,500 ரூபாவாக குறைக்கப்பட்டமைக்காக மிகவும் மனமகிழ்கின்றேன். இது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

யாழ்கொழும்பு விமானச்சீட்டு விலையை இந்த அளவிலாவது குறைப்பதற்கு அரசாங்கம் முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும். இது தொடர்பாக பராக்கிரம திஸாநாயக்கவுடன் நான் பலமுறை கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.