உதவி வழங்குவதும் உரிமைப் போராட்டமும் : த ஜெயபாலன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இராணுவ பாடப்புத்தகம் போல் கால அட்டவணையிடப்பட்டு மே 18 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆயினும் யுத்தம் ஏற்படுத்திய அழிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் குறையவில்லை. வன்னி முகாம்களின் முட்கம்பிகள் இலங்கை அரசின் முகத்திரையை இன்னமும் கிழித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசோ அது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. தமிழ் மக்களின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தனிநாடு கேட்ட நிலை போய், தற்போது வன்னி முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை என்ற நிலைக்கு மறைந்த தலைவர் வே பிரபாகரனும், அவரது விடுதலைப் புலிகள் இயக்கமும், இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது.

வன்னி மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி அரசியல் சார்ந்ததே. முகாம்களில் உள்ள இம்மக்கள் இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயரவில்லை. தற்போது அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட்டு உள்ளது. இவர்களை 180 நாட்களுக்குள் மீளக் குடியமர்த்தப் போவதாக அரசு அறிவித்த போதும் அவர்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தடுத்த வைக்கும் திட்டமே இருக்கின்றது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நிரந்தரக் கட்டுமானங்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக உள்ளனர். இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வரைமுறைகளையும் மீறி எதேச்சதிகார அரசாக தன்னை கட்டமைத்துள்ளது. இந்நிலையில் வன்னி முகாம்களில் உள்ள தமிழ் மக்களுடைய நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் இன்னமும் தனக்குள் உடன்பட முடியாதவர்களாக முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவது உட்பட அம்மக்களின் நலன் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இணைந்து செயலாற்ற முடியவில்லை. இவர்கள் பல கோணங்களில் பிரிந்துள்ளனர். இதில் இரு பிரதான பிரிவுகள் உண்டு.
1. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது.
2. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது.

முதலாவது பிரிவினர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி, தனிநாட்டுக்கான தமது அரசியலைப் பலப்படுத்த நினைக்கின்றனர். தனிநாடு அமைப்பதே இப்பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வாக அமையும் என நினைக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காத சிறு பகுதியினரும் இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது அர்த்தமற்றது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு அரசுக்கு நிர்ப்பங்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் அரசுக்கு ஆதரவானவர்கள். முற்று முழுதாக அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கை அரசு நோகாமல் செயற்படுவதன் மூலமே வன்னி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என நம்புகின்றனர். அல்லது ரிஎன்ஏ தவிர்ந்த தமிழ் கட்சிகள் போன்று இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரரலின் கீழ் செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளுக்கு முன் சலுகைகளையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இருக்கின்றனர்.

மற்றுமொரு சிறு பிரிவினர் தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் அதே சமயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு அரச கட்டமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குவது தவிர்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனால் முகாம்களுக்கு உதவிகளை வழங்க முற்படுபவர்களும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகளைப் பேச முற்படுபவர்களும் தங்களுடைய பாத்திரங்களை ஒன்றையொன்று குறுக்கீடு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

‘வன்னி முகாம்களில் உள்ள மக்களுடைய பிரச்சினை அரசியல்ப் பிரச்சினை, அதனால் அதனை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக முடியும்’ என்பது தத்துவக் கோட்பாட்டுக்கு சரியாக அமைந்தாலும் யதார்த்தத்தில் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குறைந்தபட்ச உதவிகளைச் செய்வது தவிர்க்க முடியாது. ‘சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ அவலத்தில் இருந்து தப்பிய மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்துக் கொண்டு அவர்களது உரிமைகளுக்காக போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்வரை அவர்களால் காத்திருக்க முடியுமா? புலம்பெயர்ந்த நாடுகளில் போராடி மீட்கிறோம் காக்கிறோம் என்று முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் காத்திருந்த மக்களை இந்தப் போராட்டங்கள் எதுவும் காக்கவில்லை. மாறாக அம்மக்களை ஆயிரம் ஆயிரமாக மரணத்துள் தள்ளியது.

இந்த அவலத்திற்கு தாக்குதலை நடத்திய இலங்கை அரசு மட்டும் குற்றவாளிகள் அல்ல. அப்பகுதிக்குள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே. அதனைக் கண்டிக்கத் தவறிய வன்னி மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்காத அதன் ஆதரவாளர்களும் அதற்குப் பொறுப்புடையவர்கள். ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்துவார்த்த ரீதியில் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தில் அரசை மட்டுமே கண்டிக்க முடியும் என்று முரண்டு பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

அதேசமயம் வன்னி மக்களின் நல்வாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றது. அவர்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வாழ வைப்பதன் மூலமே தங்கள் அரசியலைப் பலப்படுத்த முடியும் என்று எண்ணுவது மூன்றாம்தர அரசியல். வன்னி மக்கள் அனுபவித்த அவலம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குகின்ற அதேவேளை அதற்குச் சமாந்தரமாக அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதும் முடிந்த உதவிகளை மேற்கொள்வதும் அவசியம். ஒன்றிற்காக மற்றையதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.

சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் (ஐஎன்ஜிஓ) மங்களின் போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கின்றது, ஏகாதிபத்தியங்களின் முகவர்களாக செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உண்டு. அதற்காக வன்னி முகாம்களில் இருந்து ஐஎன்ஜிஓ க்களை அகற்ற வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தமானது என்பதும் அது இலங்கை அரசின் நோக்கிற்கே துணைபுரியும் என்பதும் வெளிப்படையானது. அதேபோல் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவது அரசுக்கு துணை செய்யும் என்கின்ற வாதம் அபத்தமானது. அரசின் விதிமுறைகளை மீறி முல்லைத் தீவுக் கடற்பரப்பில் வணங்காமண் கப்பலை தரையிறக்குவதாக தம்பட்டம் அடித்து பணம், பொருள், நேரத்தை வீணாக்கியது போன்று செய்ய வேண்டியம் அவசியம் யாருக்கும் இல்லை. உதவிகள் மக்களைச் சென்றடைவதற்காக அரசு விதிக்கின்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாதது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

 • Ruthira
  Ruthira

  யதார்த்த நிலையையும் வன்னி மக்களின் இன்றைய தேவைகளையும் புரிய வைத்ததுடன் வெளி நாட்டு தமிழர்களின் முரண்பாடுகளால் வன்னி மக்களே பாதிக்கப் படுவார்கள் என்பதையும் புரிய வைத்துள்ளிர்கள்.

  இன்றைய சுழலுக்கு மிகவும் பொருத்தமான கட்டுரை.

  Reply
 • vanthiyadevan
  vanthiyadevan

  வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

  the truth!

  Reply
 • பல்லி
  பல்லி

  மக்கள் என்றுமே புரட்ச்சி செய்யவும் இல்லை தாங்களாக எந்த விடுதலையையும் கேக்கவும் இல்லை; ஒரு சிலர் தங்களை பாதுகாக்க கடை போட்டு அது பல கடைகளாக பிரிந்து தமது கடையில்தான் மக்கள் வர வேண்டும் என இரும்பை காட்டி மிரட்டி அடக்கி அடிமையாக்கி பல அமைப்புகள் வைத்திருந்தனர் என்பதுதான் உன்மை; மக்களுக்காக விடுதலையெனில் இந்த சகோதர சதிராட்ட தாண்டவம் ஏன் வந்தது; இன்று விடுதலைக்காய் புறப்பட்டு தாம் சார்ந்த அமைப்பாலும் புலிகளாலும் அவமதிக்கபட்டும் துரத்தபட்டும் எத்தனையோ ஆயிரம் பேர் இன்று புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றனர்; இதில் எத்தனை பேர் தம்மால் அவதி ஆக்க பட்ட மக்களை பற்றி சிந்திக்கின்றனர் (பல்லி உட்படதான்)புலி என பலரும் அதுக்கு எதிராக சிலருமே செயல் படுகிறார்களே தவிர மக்கள் நலன் கருதி யாரும் செயல்பட தயாரில்லை; இன்று அரசோடு ஆதரவாக இருக்கும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் (இத்தனை கொடுமைக்கு பின்னாவது) மக்கள்நலன் கருதி ன்று படுவார்களா?? இவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு?

  தம்மை வளர்ப்பதில் காட்டும் அக்கறை ஏன் மக்கள் நலனில் இல்லை; இவர்கள் யார் மக்கள் மீது சவாரிசெய்ய; புலி இடுப்பில் இரும்ப்பை வைத்து மிரட்டிய மக்களை இவர்கள் இன்று தமக்கு கிடைத்த சலுகைகளை(பதவி) வைத்து மிரட்டுகின்றனர் என்பதுதானே உன்மை; ஒரு பேப்பர்; பரபரப்பு; புதினம் போன்ற பத்திரிகைகளை கேலி செய்தோம்; காரனம் புலி புகழே அவர்களது நோக்கமாகவும் செயல் பாடாகவும் இருந்ததால் தானே; ஆனால் அதை தம்மை தாமே அறிவு வேர்கள் என ஏலம் போடும் சில தளங்கள் அரசின் இலவச இனைப்பாகதானே செயல்படுகின்றனர், சரி இவர்களை விட்டால் வியாபார புலிகளோ எப்படியாவது கடை போட்டு வணங்கா மண் நட்டத்தை சரி செய்ய வேண்டும் என்பது போல் ஓடி திரிகிறார்கள்;

  தம்மால் இருப்பிடத்தையே சிறையாகிய மக்கள் பற்றி எந்த சிந்தனையும் கிடையாது, அன்றய மேயர் விசுவனாதனின் மகனோ வன்னி மக்கள் எமக்கு எதுக்கு அதனால் வசதி படைத்த மக்கள் வாழும் நாடுகளுக்குள் மட்டும் ………. புலியாக செயல்பட்டு கட்டி தழுவிய ஈழம் வென்று எடுக்க பாதையாத்திரை புறப்பட்டு விட்டார்; அதுக்கும் சிலர் தண்ணீர் பந்தல் போட்டு வரவேற்ப்பாம், அரசு விடுவதா அல்லது அடைப்பதா என இரு குழுக்களை வைத்து பட்டி மன்றம் நடத்துகிறது;அதில் அடைப்பது தான் சிறந்தது என பேசுபவர்கள் பலம் மிக அதிகமாக இருப்பாதாலும் விடுவிப்பது என்னும் ஆணியில் பேச வேண்டியவர்கள் எதிரணியின் பேச்சை ரசிப்பதால் ஜெயபாலன் சொல்வது போல் அடைப்பதுதான் மிக சிறந்தது என அரசு எண்ண வாய்ப்புகள் அதிகம் தான், ஆகவேதான் மக்கள் மீது அக்கறை உள்ள அனைவரும் அமைப்புகள் கரகாட்டகாரர்கள் என்று வேறுபாடு காட்டாது அந்த மக்களை அந்த சிறையில் இருந்து விடுதலை பெற போராட வேண்டாம்; பொறுப்புடன் பேச வேண்டும் செயல்பட வேண்டும் என்பதே இந்த பல்லியின் கருத்து;

  Reply