தரையில் ஓடும் இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில்; தண்டவாளத்தில் ஓடுகின்றன. இந்தியாவில் கூட நாம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை. இலங்கையில்தான் முதற் தடவையாக எமது நாட்டுத் தயாரிப்பான அசோக்லேலண்ட் பஸ்கள் இப்படி மாற்றப்பட்டு ரயில்பஸ் ஆக சேவையில் ஈடுபட்டுள்ளது. எனவே இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இப்படி ரயில்பஸ்களைத் தயாரிக்க வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கூறினார்.
கிழக்கு மாகாண சபைக்கு இந்தியா உதவியாக வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ரயில்பஸ்’ சேவையின் ஆரம்ப வைபவம் நேற்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையில் சேவையில் ஈடுபடுவதற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடுவதற்கும் 5 ரயில் பஸ்களை தயாரிப்பதற்காக இந்தியா 44 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்களை வழங்கியது.
அத்தோடு தயாரிப்புச் செலவாக இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இதற்காக மொத்தம் 66 மில்லியன் ரூபாவை இந்தியா செலவிட்டுள்ளது.
இந்தச் சேவையானது இந்திய – இலங்கை நட்புறவுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பஸ்கள் இலங்கையில், தண்டவாளத்தில் ஓடும் ரயில் பஸ்களாக தற்போது மாற்றப்பட்டு சேவையில் ஈடுபடுவதுதான் என்றார்.