2009

2009

வவுனியா நகரில் தற்கொலைத் தாக்குதலுக்கான உபகரணங்கள் கண்டுபிடிப்பு

suicide_jacket.jpgவவுனியா நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியது என்று சந்தேகிக்கப்படும் 3 டைமர்களும், 3 ரிமோட் கண்ரோல்களும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இவை கண்டுபிடிக்கப்பட்டு, படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற அங்கியொன்றில் பொருத்தப்பட்ட நிலையில் இந்த டைமர்களும், ரிமோட் கண்ரோலர்களும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் போடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து, இரண்டாம் குறுக்குத் தெருவின் அப்பகுதி போக்குவரத்தைத் தடை செய்தனர்.

குண்டுகளைச் செயலிழக்கும் படையினர் வந்து இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதன் பின்னர் இந்த வீதியின் ஊடான போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

கே.பி.விவகாரத்தில் சர்வதேச சட்டம் எதுவும் மீறப்படவில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

pathmanathan.jpg
விடுத லைப்புலிகளின் புதிய தலைவரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளை மீறிச் செயற்படவில்லை என உறுதிபடத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்ட விதத்திலேயே சகலதும் இடம்பெற்றிருப்பதாகவும் சில உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைந்துள்ள ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கே.பி.கைது தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் அவதானமாக நோக்கப்பட வேண்டியதாகவே காணப்படுகிறது. புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்டபோதிலும் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்டுதல், சர்வதேச ஒத்துழைப்பை தம்பக்கம் ஈர்த்தெடுத்தல் போன்ற விடயத்தில் கே.பி. இயங்கும் வரை அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற முடியாது போகும் என அது குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அரசாங்கம் இன்று அதில் வெற்றிகண்டுவிட்டது. இனி மேல் புலிகளின் பெயரால் எதனையும் செய்யக்கூடிய சிறிய முயற்சிக்குக் கூட இடம் கிடையாது. கே.பி.யை கைதுசெய்ய எடுக்கப்பட்ட மூன்றாவது முயற்சியிலேயே அது கைகூடியுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி பிரேமதாஸ எடுத்த முயற்சி ஆரம்பத்திலேயே கைநழுவிப்போனது. அடுத்த கட்டமாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் முயற்சிக்கப்பட்டது. அதுவும் இடைநடுவில் செயலிழந்து போனது. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சரியான வியூகம் அமைத்துச் செயற்பட்டதன் மூலம் காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிப்பதில் படைத்தரப்பு தான் வெற்றி கண்டபோதிலும் அதற்குப் பின்புலமாக இருந்தது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தான். யுத்தத்தை வழிநடத்தியது அரசாங்கம் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கே.பி. கைது விவகாரத்தில் சர்வதேச சட்டம் மீறப்பட்டதாக சில சக்திகள் தெரிவிக்கின்றன. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சர்வதேச சட்டவிதிகளில் ஒரு துளியளவும் மீறப்படவில்லை. அவசியப்படும் போது அது குறித்து பாதுகாப்பு விளக்கமளிக்கும். பாதுகாப்புத்தரப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டால் இது குறித்து போதிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விடயத்தில் இதற்கு மேலாக தம்மால் எதனையும் கூறமுடியாது என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு அபராதம்

saeedajmal.jpgநேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சங்கக்காராவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் அவரை வசை பாடியபடி பெவிலியன் நோக்கி செல்லுமாறு செய்கை செய்ததால் அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு ஆட்ட நடுவர்கள் உத்தரவிட்டனர்.

இலங்கை விளையாடும் போது 14-வது ஓவரில் இது நடந்தது. இந்த மோசமான நடத்தையை நடுவர்களான அஷோக டிசில்வா, விஜேவர்தனே ஆகியோர் கண்டித்தனர்.

இதனால் உடனேயே தவறை உணர்ந்த சயீத் அஜ்மல் இருவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, ஆட்டம் முடிந்த பின்பு சங்கக்கராவிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஐ.நா இலங்கைப் வதிவிடப் பிரதிநிதியாக டாக்டர் பாலித கோஹன தெரிவு

Dr Kohonaஐ.நா விற்கான இலங்கைப் வதிவிடப் பிரதிநிதியாக நியூ யோர்க்கில் தங்கியுள்ள எச்.எம்.எஸ் பலியகாரவின் இடத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித கோஹன நியமனம் பெறுகின்றார். எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு டாக்டர் பாலித கோஹகன பாரிய பங்களிப்பைச் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மடு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் : வசதி, வாய்ப்புகள் திருப்தி எனவும் தெரிவிப்பு

madhush_2.jpgவிடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதலாவது மடு ஆலய திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு மாதாவுக்குத் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

சுமார் 30 ஆயிரம் மக்கள் இதுவரை எதுவித அச்சமோ தயக்கமோ இன்றி மடு அன்னையைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

முழு இரவும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை மட்டும் 13,000 பக்தர்கள் ஆலயத்தில் தங்கியிருந்தனர். பாதயாத்திரையாக வந்த சுமார் ஆயிரம் வாகனங்கள், உரிமையாளர்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பான இடங்களில் தரித்து வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை ஆலயத்துக்கு வந்த தமக்கு வழக்கத்தை விடவும் தாராளமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் மகிழ்ச்சியுடன் மடு அன்னையின் பிரார்த்தனை, வழிபாடுகளில் கலந்து கொள்வதாகவும் அங்கு சென்று தங்கியுள்ள அடியார்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.

யாழ் பஸ் சேவை வவுனியா வரையில் கட்டணங்களும் குறைப்பு

25sri-lankan-road.jpgயாழ்ப் பாணத்திலிருந்து மதவாச்சி வரை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட யாழ் பஸ் சேவை வவுனியா வரையிலுமே இப்போது நடத்தப்படுகின்றது. பயணிகள் வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கிவிடப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு 200 ரூபா மட்டுமே இப்போது கட்டணமாக அறவிடப்படுகின்றது. முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கென 475 ரூபா கட்டணமாக அறவிடப்பட்டு, பயணிகள் மதவாச்சி வரையில் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டார்கள்.  எனினும் மதவாச்சியில் இருந்து இந்த பயணிகளுக்கான இணைப்பு பஸ் சேவைகள் சீராக இடம்பெறாத காரணத்தினாலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் மதவாச்சியில் பஸ் வண்டிகள் ஒழுங்கு படுத்தப்படாத காரணத்தினாலும், இந்த பஸ் சேவை வவுனியா வரையில் மட்டுமே நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காலை 11 அல்லது 11.30 மணிக்குப் புற்பபடும் பஸ் வண்டிகள் இராணுவத்தினரின் வழித்துணையுடன் தொடரணியாக வவுனியாவை பிற்பகல் 2 அல்லது 2.30 மணிக்கு வந்தடைகின்றன.

வவுனியா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுகின்ற இந்த பஸ் வண்டிகள் வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்திற்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி அல்லது 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி இராணுவ பாதுகாப்புடன் தொடரணியாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

வீதிச் சிறுவர்களை கண்டுபிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தகவல்

police_man.jpgபாடசா லைக்குச் செல்லாது வீதிகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் சிறுவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை செல்லாதுள்ள அனைத்து சிறுவர்களையும் கண்டுபிடிக்குமாறு கொழும்பு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சிறுவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பெண் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இரவுவேளைகளில் சிறுவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்கள் நகரிலுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.ஆனால் சிறுவர்கள் விளக்கமறியல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட மாட்டார்கள். பிடிக்கப்படும் சிறார்களின் பெற்றோரோ பாதுகாவலர்களோ கண்டுபடிக்கப்பட்டால் அவர்கள் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணிக்கும். அக்குடும்பங்களிடம் அதற்கான பண வசதி இல்லாவிட்டால் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்கும். இலங்கையில் 14 வயது பூர்த்தியாகும் வரை அனைத்து சிறார்களும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக பெறவேண்டும் என்பது சட்டமாகும் என்றும் அவர் கூறினார்

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு மலேசியா ஒரு லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!

malasiia_agre.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ரொஸ்லி இஸ்மாயில் இந்த உதவியை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் இன்று கையளித்தார்.

இது தொடர்பாக வைபவம் வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. இலங்கையின் சார்பில் இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை நடத்திய யுத்தத்திலும் மலேசிய அரசு வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு மலேசியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்

களனி பல்கலைக்கழகத்துக்கு புதுக்கட்டடம்

wiswa_warnapala_00.jpgகளனி பல்கலைகழத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்துக்கு புதுக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி 2010 ஆம் ஆண்டில் 600 மீட்டர் சதுர நிலப்பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கு திறைசேரி மூலம் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

சிறிய கட்சியாக மாறி வரும் ஐ.தே.க – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா

anura_priyadarshana_yapa00.jpgஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வேகமாக பிரதேசக் கட்சியின் அளவுக்கு ஒரு சிறிய கட்சியாக மாறி வருகிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தோல்விகள் மூலம் இது புலனாகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருந்தால் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றிருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்படிக் கூறிய அவர்களுக்கு நடந்து முடிந்த யாழ்ப்பாண மா நகரசபைத் தேர்தலில் 83 வாக்குகளே கிடைத்துள்ளன

இந்தத் தோல்விகளையும் பெற்றுவரும் வாக்குகளையும் கவனித்தில் கொள்ளும் போது வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறிய கட்சியாக ஒரு பிரதேசக் கட்சியாக மாறிவிடும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.