2009

2009

அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டி

190909images-sports-games.jpgஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை இம்மாதம் 23ம் திகதி தொடக்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வியமைச்சின் உடற்கல்வி விளையாட்டுப் பிரிவி மேற் கொண்டுள்ளது.

கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக 5 தினங்கள் நடத்தப்படவுள்ள இந்த போட்டி நிகழ்ச்சிகள் 27ம் திகதி நிறைவடைய உள்ளதாக உடற் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எல்.கே. ஜயவீர அறிவித்துள்ளார்.

மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரும் தமது வயது மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையையும், பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். மாகாண மட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியாளர்களை தவிர பட்டியலில் வேறு எவரையும் மாற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

போட்டியாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் நிகழ்ச்சி மாற்றம் செய்ய வேண்டுமாயின் முன்கூட்டியே தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன எம்.எப். ஹூசேனின் ஓவியம்

19-mf-hussain.jpgபுகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் அவருடைய ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது.

முதலில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் நடந்த மையத்திற்கு ஹூசேன் வந்த பின்னர் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. இறுதியில் ரூ. 1.6 கோடிக்கு அவருடைய படைப்பு ஏலம் போனது.

இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம்- சங்ககரா

120909sanath-jayasuriya.jpgசாம்பி யன்ஸ் டிராபி போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்ககரா கூறினார். தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் 22-ம் திகதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஜோஹன்னஸ்பர்க் வந்தடைந்தது. பின்னர் நிருபர்களுக்கு இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டி:

போட்டியை வெல்லக்கூடிய அணியாக இலங்கை அணியை வல்லுநர்கள் கணிக்கவில்லை. எனவே எங்கள் மீதான அழுத்தம் குறைந்துள்ளது. இதற்காக இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம். நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். தென்னாப்பிரிக்கா, இந்தியா, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இருப்பினும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முழு நம்பிக்கையுடன் களம் காணவுள்ளனர். கோப்பையை வெல்ல முழு கவனம் செலுத்துவோம்.

வேகப்பந்து வீச்சுதான் எங்களது அணியின் பலம். அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மெண்டிஸ், முரளிதரன் எங்கள் அணியில் உள்ளனர் என்றார் அவர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் இலங்கை மோதவுள்ளது.

நிலநடுக்கம் வருவதை எச்சரிக்கும் கருவி – தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

190909computer.jpgநில நடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவி ஒன்றை தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லெப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இதை லிப்ட்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ யி மின் கூறுகையில் :-

இந்தக் கருவி நில நடுக்கத்தின் போது ஏற்படும் குறுக்கலை, நெட்டலைகளை அடையாளம் காணும் நில நடுக்கம் தரைமட்டத்துக்கு வரும் முன்பே அலைகளை இந்தக் கருவி கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் 15 வினாடிகள் முன்னதாக நில நடுக்கம் ஏற்பட போவதை அறிந்து கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றார்.

சச்சின் மீதான விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை – மஞ்சுரேக்கர்

sep-14-2009-india.jpgசச்சின் டெண்டுல்கர் இலங்கையில் ஆடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், அதற்காக கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறிய போது வைத்த விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன் ஃபார்மிற்காக திணறிய போது ஓய்வறையில் ஒரு யானை என்று வர்ணித்தார்.

அதாவது கடந்த ஆண்டு 51 ஒருநாள் போட்டி களில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது 24 இன் னிங்ஸ்களில் 62.10 என்ற சராசரி வைத்திருந்தார். ஆனால் அதே காலக் கட்டத்தில் இந்தியா இரண் டாவதாக துடுப்பெடுத்தாடிய போது அல்லது இலக்கைத் துரத்தும்போது 26 ஓட்டங்களையே சராசரியாக வைத்திருந்தார் என்பதே சஞ்சய் மஞ்சு ரேக்கர் கடந்த ஆண்டு வைத்த விமர்சனத்திற்கு காரணம்.

சச்சின் டெண்டுல்கரிடம் இது பற்றி ஒருவரும் வாயைத் திறக்காததற்கு காரணம் அவரது ஆளுமை அவ்வளவு பெரியது என்று கூறும் போதுதான் ஓய்வறையில் அவர் ஒரு யானை என்று கூறினார் மஞ்சுரேக்கர்.அந்த காலக் கட்டத்தில் டெண்டுல்கர் சுதந்திரமாக விளையாடவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் எச்சரிக்கையுடன் விளையாடினார். அழுத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அவர் தன் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

அவர் ஒரு மகத்தான வீரர். ஆனால் அவரும் ஒரு மனிதன்தானே. அவரை 14 வயது முதல் நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் தோல்வி, அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் விளையாடினார் என்பதை என்னால் உணர முடிந்தது. இதனால் அப்போது கூறிய கருத்தை இப்போது மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஆனால், டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில். அவர் அடித்த பேக் ஃபுட் கவர் டிரைவ், பிரண்ட் ஃபுட் கவர் டிரைவ் ஆகியவற்றைப் பார்க்கும் போது தற்போது அவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது போல் தெரிகிறது. இப்போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் என்றார்.

சகல தோட்டங்களிலும் நேற்று வழமையான பணி

080909teawomen.jpgமலையகப் பெருந் தோட்டங்களில் அனை த்துத் தொழிற்சங்கங் களையும் சார்ந்த தொழிலாளர்கள் நேற்று (19) முதல் வழமையான பணிக்குத் திரும்பினர்.

தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு சில சங்கங்கள் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, சகல தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி தோட்டங்களில் சம்பள உயர்வு தொடர் பாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முரண்பாடான கருத்துகள் நீங்கி அனைவரும் ஒரே தீர்மானத்துடன் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பள உயர்வுக்கான போராட்டம் உக்கிரமடைந்து காண ப்பட்ட பொகவந்தலாவை உள்ளிட்ட சகல தோட்டப் பகு திகளிலும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே தடவையில் நூறு ரூபாவுக்கும் அதிகமான தொகை நாளாந்த சம்ப ளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பல தோட்டங்களின் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக சம்பளத்திற்காகப் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்கப் போட்டிக்காகக் கருத்துக் களை வெளியிட்ட பல தொழிற்சங்கங்களின் தோட்டக் கிளைத் தலைவர்கள், சம்பள உயர்வு தொடர்பான விளக்கத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பியன் கோப்பையை வென்று வூல்மருக்கு அர்ப்பணிப்போம் – பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான்

190909pakistan-cricket-team.jpgதென் ஆபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பையை வென்று மறைந்த பயிற்சியாளர் வூல்மருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் கடந்த 2007ஆம் ஆண்டு மே. தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது (50 ஓவர்) மர்மமான முறையில் இறந்தார். பிறகு அவரது மரணம் இயற்கையானது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மண்ணில் நடக்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வாகை சூடி கோப்பையை அவருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கப்டன் யூனுஸ்கான் சூளுரைத்து இருக்கிறார்.

8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வருகிற 22ம் திகதி தென் ஆபிரிக்காவில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் 23ம் திகதி மே. தீவை எதிர்கொள்கிறது.

தென்ஆபிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக யூனுஸ்கான் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் வூல்மரின் சொந்த ஊருக்கு (தென் ஆபிரிக்கா) போகிறோம். சம்பியன்ஸ் கோப்பையை வென்று அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்த போது வூல்மர் எங்களுடன் இருந்தார். அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் விளையாட முடியாமல் போனதால் வூல்மர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டோம். இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

வூல்மர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய இழப்பு, இதனால் நாங்கள் இன்னும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் நான் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.  கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அக் கோப்பையை வூல்மருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தோம்.  இந்த முறையும் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிப்போம்.  ஏனெனில் இது அவர் வாழ்ந்த நாடு என்றார்.

அம்பாந்தோட்டையில் ஆ.அ.அட்டை நடமாடும் சேவை

தென்மாகாண சபைத் தேர்தலுக்கு அடையாள அட்டை கட்டாயமாகையால் அம்பாந்தோட்டையில் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்காக நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை நகர சபையும் ஆட்பதிவுத் திணைக் களமும் இணைந்து நாளை காலை 10.00 மணி முதல் அம்பாந்தோட்டை நகர சபை காரியாலயத்தில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நடாத்தவுள்ளது.

இதில் இதுவரை அடையாள அட்டையை பெறாதவ ர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் கே.ஜீ.காமினி வேண்டு கோள்விடுத்தார்.

ஜனவரி 21, 22, 23,24 தேதிகளில் உலகத் தமிழ் மாநாடு – கருணாநிதி

karunanithi.jpgகோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.

இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் – ஜனாதிபதி

190909mainpic.jpgஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல்,  மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித்தார்.

இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்டகாலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.  அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.