சாம்பி யன்ஸ் டிராபி போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்ககரா கூறினார். தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் 22-ம் திகதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வியாழக்கிழமை ஜோஹன்னஸ்பர்க் வந்தடைந்தது. பின்னர் நிருபர்களுக்கு இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டி:
போட்டியை வெல்லக்கூடிய அணியாக இலங்கை அணியை வல்லுநர்கள் கணிக்கவில்லை. எனவே எங்கள் மீதான அழுத்தம் குறைந்துள்ளது. இதற்காக இலங்கை அணியை யாரும் சாதாரணமாக எடைபோட்டு விடவேண்டாம். நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். தென்னாப்பிரிக்கா, இந்தியா, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இருப்பினும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முழு நம்பிக்கையுடன் களம் காணவுள்ளனர். கோப்பையை வெல்ல முழு கவனம் செலுத்துவோம்.
வேகப்பந்து வீச்சுதான் எங்களது அணியின் பலம். அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மெண்டிஸ், முரளிதரன் எங்கள் அணியில் உள்ளனர் என்றார் அவர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் இலங்கை மோதவுள்ளது.