June

June

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு !

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில்  வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர்.

வீட்டுக்கு முன் குப்பை கொட்டியவர்கள் மீது சூனியம் வைத்த நபரால் யாழ்ப்பாணத்தில் பரபரப்பு !

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்தி உள்ளார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே அவ்வாறு காட்சிப்படுத்தி உள்ளார்.

குறித்த நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளனர். அதனால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.

அதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி , “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” என பதாகை எழுதி காட்சிப்படுத்தி உள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

“உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பு சாத்தியமில்லை.” – ஹர்ஷ டி சில்வா

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் கைது !

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஜூன் 22 அன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.

அவர்கள் 926 கிராம் ஹெரோயின் வைத்திருந்தனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மூன்று லட்சம் மேன்முறையீடுகள் – “அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் உள்வாங்கப்பட்ட செல்வந்தர்களும் !

இலங்கையின் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கை மக்களிடையேயான ஏழ்மை நிலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் சாதாரண ஏழை மக்களிடையே காணப்படக்கூடிய ஏழ்மை நிலையை போக்குவதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் , தேவையுடைய ஏழ்மையான குடும்பங்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாத நிலையில் இது தொடர்பான அதிருப்தி பல பகுதிகளில் மக்களைப் எதிர்ப்பு போராட்ட களத்திற்கும் தள்ளி உள்ளது.
பெயர்ப்பட்டியல் வெளியானமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வரும் மக்கள் 26.06.2023 அன்று மலையகம் குறிப்பாக நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதே வேளை 27.06.2023 அன்று வடக்கின் சில பகுதிகளிலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். வவுனியாவின் ஆசி குளம் பகுதியில் சுமார் 12 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமக்கு நீதி வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டு 27.06.2023 அன்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் பேசிய போது ” அஸ்வெசும பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு எமது கிராமத்தில் பலர் வாழ்கின்றோம். எமது பகுதியில் தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பெயர் விபரங்கள் சமர்ப்பித்தும் தங்களுடைய விபரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.”என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பில் பேசியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் “, நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பனவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு ஆறுதலாக இருந்தது.
எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர். இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள வடக்கு – கிழக்கு பகுதிகளின் தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலி அரசியலுக்கும் – போலித் தேசியம் பேசவும் முண்டியடித்துக் கொண்டு வரும் எந்த அரசியல்வாதிகளும் இது தொடர்பில் எதுவித எதிர்ப்பையும் இந்த செய்தி உருவாக்கப்படும்வரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
இதேவேளை அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி “எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என அரசு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பில் அதிக ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர், இது தொடர்பான தகவல்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் ஆராய வேண்டும். எமக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைவாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியமே பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு இதனை மேற்கொள்வதுதான் சரியான செயற்பாடு என்று ஆளுநர் கூறினாலும், நாம் இதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை.

இது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு இதனால் பாதிப்பொன்று ஏற்படாது என்றே அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.

இந்த நிலையில், தற்போது இதற்கு முரணாக செயற்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய முடியாது. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதே எமது கொள்கையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மூலமாக பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? – 24 மணிநேரத்தில் உங்களுக்கு தீர்வு !

FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள்.
புகார் கொடுக்கும் விண்ணப்பப்படிவம்.
May be an image of text that says "Home SRI LANKA POLICE "පොලිස්පතිට කියන්න" பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் TELLIG මහජන ප්‍රතිචාර பொது பதில் Public Feedback පැමිණිල්ලේ තත්ත්වය புகாரின் நிலை Complaint Status Your -Select District- ඔබේ දිස්ත්‍රික්කය உங்கள் மாவட்டம் District ළඟම ඇති පොලිස් ස්ථානය அருகிலுள்ள காவல் நிலையம் Nearest Police Station පැමිණිලි වර්ගය புகாரின் வசை Complaint Category ඔබේ නම් உங்கள் பெயர்- Your Name -Select Police Station- -SelectComplaint Category- ලීෂිනය முகவரி Address ජාතික හැඳුනුමපත් අංකය- தே.அ.அ. இல. NIC Number ඇමතුම අංකය தொடர்பு இல. Contact Number විදපුත් තැපෑල් ලිපිනය மின்னஞ்சல் முகவரி- Email Address"

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 29 மற்றும் 37 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“புதிய வரிகளால் மக்கள் மீது சுமை சுமத்தப்பட மாட்டாது.” – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரி வலையமைப்பை விஸ்தரித்து, வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைப்புக்கள் கூட எதிர்பார்க்காத வேகத்தில் நாடு பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த சாதனைகள் அனைத்தும் மக்களுடையதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனத்தின் சுற்றுலாவுக்கு சென்று பாடசாலைக்கு வராத மாணவர்களை தண்டித்த அதிபர் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர்.

 

மார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் சிலர் மதியம் வரை வகுப்புக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், இவ் விவகாரம் வலய கல்விப் பணிமனைக்கு சென்ற பின்னர், அதிகாரிகளின் தலையீட்டையடுத்தே மாணவர்கள்  அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் எழுதி வந்த சுகயீன விடுப்பு கடிதத்தின் காரணம் தவறென்றும் குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தபவரின் பெயரை குறிப்பிட்டு அவரால் சுற்றுலா அழைத்துச் சென்றதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கடிதம் எழுதி தருமாறும் அதிபர் அழுத்தம் கொடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.