ஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.
இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.
இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.
தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.