14

14

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவருமே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது என கடந்த சனிக்கிழமை பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இதற்காக இருதரப்பிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தங்கள் சார்பில் மூவரைத் தெரிவு செய்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பிலும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரு இறங்குதுறைகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன.

புனர்நிர்மானம் செய்யப்பட்ட காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய இரு இறங்குதுறைகளும் மக்களின் பாவனைக்குத் விடப்படவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி வைபவ ரீதியாக இப்பாதைகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட வுள்ளதாகவும், இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனத்தின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவ்விரு இறங்குதுறைகளும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்துள்ளார். இதன்படி சிறு வீதிகளும் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள வீதிகள் துரிதகதியில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்.ஸ்ரான்லி வீதி இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வருடங்களின் பின் களுவாஞ்சிக்குடியில் நீதவான் நீதிமன்றினை இயங்கச் செய்ய நீதிஅமைச்சர் இணக்கம்

களுவாஞ்சிக்குடியில் 26 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தை இயங்கச் செய்வதற்கு புதிய நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்நீமன்றம் யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. இந்த நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றினை மீண்டும் இயங்கச் செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காலம் கடந்த பிறப்புப் பதிவுகளுக்கு நடமாடும் சேவை.

யாழ்.மாவட்டத்தில் காலம் கடந்த பிறப்புகள் பதிவு தொடர்பாக நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த நடமாடும் சேவைகளுக்கு பிள்ளைகளுடன் தாய்மார்களே 95 சத வீதம் வருகை தருவதாகவும் தந்தைமார் வருவதில்லை எனவும் பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தையரின் விபரங்களைப் ஆவணங்கள் மூலமாகப் பெறுவதில் நேர விரயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தைமார் பிள்ளைகளுடன் வரும்பொழுது அவர்களது கையெழுத்துடன் பதிவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும். காலம் கடந்த பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தந்தைமார் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.