16

16

நல்லிணக்க ஆணைக்குழு தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கும் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் வருண டி சேரம் தெரிவித்துள்ளார். இவ்வகையில் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம் மற்றம் காலி, பூஸா முகாம்களுக்கும் ஆணக்குழுவினர் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம், மன்னார் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 7ஆம் திகதி புத்தளத்திலும், 8, 9ஆம் திகதிகளில் மன்னாரிலும், 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அம்பாறையிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆணக்குழுவின் அமர்வுகள் மொனராகலை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வாகன சாரதிகளிடம் தீவிரமாக இலஞ்சம் பெறும் பொலிஸார்!

கிளிநொச்சியில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் சிலர் உள்@ர் வாகன ஓட்டுநர்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடந்த காலத்தின் யுத்தசூழல் காரணமாக வாகனங்களின் ஆவணங்களை பலர் தொலைத்துள்ளனர் அவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகளிலும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் பலர் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றிருக்கவில்லை. இறுதிக்கட்டப் போரின் போது கைவிடப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ள பல வாகனங்கள் திருத்தியமைக்கப்பட்டு வரும் நிலையில். அவற்றில் ‘சிக்னல் லைற்’ போன்றவை இயங்காத நிலையில் பலர் பாவனைக்குட்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் ஏதோவொரு குறைப்பாட்டை அவதானித்து அவர்களிடம் இலஞ்சம் வாங்குவதில் குறித்த பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருதாக அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பணமாக இலஞ்சம் பெறல், சம்பந்தப்பட்டவரை கடைகளுக்கு அழைத்துச்சென்று தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு வற்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் குறித்த பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வுவனியாவில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விரு பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வுவனியா சேமமடுவைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து காணமால் போயுள்ளதாகவும், நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் தொழில்புரியும் பெண்ணான ஜெயசீலன் ஜெயப்பிரவீனா (வயது 25) என்ற பெண்ணும் காலையில் தொழிலுக்குச் சென்ற வழியில் காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாத்தில் இடம்பெற்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் இரு நெற்களஞ்சியங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

பெரும்போக நெற்செய்கையினால் கிடைக்கப்பெறும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வடக்கில் இரு நெற் களஞ்சியங்களை 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விரு நெற்களஞசியங்களையும் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்களஞ்சியங்களை அமைக்க வடமாகாண சபை, வடக்கின் மீள்எழுச்சித்திட்டம் என்பவற்றின் ஊடாக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.