03

03

மாணவர் அனுமதிக்கு பணம் அறவிடும் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- வடமாகாண கல்விப்பணிப்பாளர்.

Students_Hindu_Ladies_Jaffna2010 ஆம் அண்டு நிறைவடைந்து, புதிய கல்வியாண்டிற்குப் புதிய மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அனுமதிக்கு பணம் அறவிடும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது நிதி அறவிடும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் ஆதாரத்துடன் முறையிட்டால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாடசாலை அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் போது எவ்விதமான பணத்தையும் பெற்றோர்கள் செலுத்தத் தேவையில்லை எனவும், பெற்றோர்கள் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி. கண்டாவளை பிரிவுகளில் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்வு.

Raining_and_Floodingகிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள ஆயிரம் குடும்பங்களும் தற்போது பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு தற்போது சமைத்த உணவுகளும் மற்றும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முறிகண்டியில் இன்று நடைபெறவிருந்த மீள்குடியமர்வு மழை காரணமாக தாமதம்.

Mullaitivu_Districtமுல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டிப் பகுதியில் இன்று வெள்ளிக்கழமை 150 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவிருந்த போதிலும் கடும் மழை காரணமாக அது தாமதமாகும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த முறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த 150 குடும்பங்களே அழைத்து வரப்பட்டு இன்று மீள்குடியமர்த்தப்படவிருந்தனர். மழை காரணமாகவும் மீள்குடியமர்த்தப்படவிருந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதாலும் வெள்ளம் வழிந்தோடிய பின்னரே இக்குடும்பங்களை மீள்குடியமர்த்த முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

முல்லை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 587 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 335 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் என முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது. இன்னமும் 18 ஆயிரம் பேர் வவுனியா மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ளனர். ஏனையோர் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்.

dengu_1.gifயாழ். குடாநாட்டில் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் அறிகுறியுடன் சிகிச்சைப்பெற வருவோரின் தொகை யாழ்.வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை குருநகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் டெங்கு நொய் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் அம்மரணத்துடன் இவ்வருடத்தில் டெங்கு நோயினால் மரணித்தவர்களின் தொகை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட தொற்று நோய் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி திருமதி. சிவசங்கர் திருமகள் தெரிவித்துள்ளார். மழை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மீண்டும் டெங்கு தாக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும். இந்நோய் தாக்கத்திற்குள்ளாகி நாளொன்றுக்கு மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.