09

09

பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு.

பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்கட்சிகளின் அரங்கம் பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்ததை நடத்த வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Jaffna_Hospitalயாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆறு அம்சக்கோரிகிகயை முன்வைத்து மீண்டும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி ஒரு மணி நேரம் பணிப்பறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று வியாழக்கிழமையும் ஒருமணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல், 11.30 மணியிலிருந்து 12.30 வரை அவர்கள் மிண்டும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து ஒரு மணிநேரம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மூடப்படுகின்றன.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணத்தில் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அதன் அலுவலகங்களையும் அது மூடியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும், மொனராகலை அலுவலகங்கள் இதற்கமைய மூடப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததிட்டங்கள் தொடர்பாக எஞ்சிய தகவல்களை சேகரிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் அதன் உப அலுவலகம் ஒன்றை வைத்திருப்பதற்கு உலக உணவத்திட்ட
நிறுவனம் தீர்மானித்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கி வந்த நாடுகள் தற்போது உதவிகளை நிறுத்தியுள்ளமையினாலேயே இவற்றை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உலக உணவுத்திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மழையினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குடாநாட்டில் மட்டும் 8,363 குடும்பங்களைச் சேர்ந்த 30,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 744 குடும்பங்களைச் சேர்ந்த 5 760 மக்கள் பொது இடங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக யாழ்.குடாநாட்டில் 156வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

2,138 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நெடுந்தீவிலும் நல்லூரிலும் இருவர் வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு காயமடைந்துள்ளனர். இத்தகவல்களை யாழ். மாவட்டச்செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நிலவுவதால் இம்மாதம் நடுப்பகுதிவரை மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிளி.பச்சிலைப்பள்ளியில் தை மாதத்திற்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைவரும் மீள்குடியேற்றப்படுவர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் தை மாதத்திற்கு முன்னதாக மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என பச்சிலைப்பள்ளி பிரதேசச்செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் 72 குடும்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பச்சிலப்பள்ளி பிரதேச்செயலர் பிரிவில் இதுவரை 2393 குடும்பங்களைச் சேர்ந்த 7426 மக்கள் மீள்குடியர்த்தப் பட்டுள்ளதாகவும் பிரதேசச் செயலர் தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்

LTTE LOGOஇன்று வெளியாகி வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலேயே தேசம்நெற் இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதி மனித அவலத்தை நிறுத்துமாறு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் வலியுறித்தி இருந்தது. பாரிய தோல்விகளைச் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிநேரம் வரை காத்திருந்து மனித அவலத்தை ஏற்படுத்தாமல் பல மாத்ங்களுக்கு முன்னதாகவே சரணடைய வேண்டும் என்றும் கேட்கப்பட் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் காலம்கடந்தவையாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அரசியல் எப்போதும் கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரமாகவே இருந்துள்ளது.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் மே 17 2009ல் பதிவிடப்பட்ட இப்பதிவை மீண்டும் மீள்பதிவிடுகிறோம்.

._._._._._.

May 17 2009

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது?

புலிகளின் ‘பிளக் சற்றடே’ ஆக அமைந்த நேற்றைய தினம் (மே 16 2009) எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன், முதல் பல்வேறுபட்ட ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட வேண்டுகோளுக்கு அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் இதுவரை சாதகமான சமிஞைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரின் வேண்டுகோள் வன்னியில் உள்ள தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான முயற்சிக்கு இந்திய சம்மதித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதி நேரத் திருப்பங்களில் மிகுந்த நம்பிக்கையுடைய புலிகள் அவ்வாறான திருப்பத்திற்கு காத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

நேற்றைய இந்தியத் தேர்தல் முடிவுகளால் மிகுந்த ஏமாற்றமடைந்த புலிகள் தங்கள் தோல்வியை ஏதோ ஒரு வகையில் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதன் இறுதி நடவடிக்கையாகவே ஒபாமா நிர்வாகத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்பாளர் விடுத்த வேண்டுகோள் அமைந்து உள்ளது. இலங்கை இராணுவத்திடம் புலிகளின் தலைமை சரணடைவது அவர்களுடைய கடந்த மூன்று தசாப்த போராட்டத்தையும் அர்த்மற்றதாக்கி அவர்களது வரலாறும் களங்கப்பட்டுவிடம் என்பதை சரியாகவே உணர்ந்து உள்ளனர். அதனால் இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திடம் சரணடைவதன் மூலம் தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார்கள்.

ஆனால் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் தனது வேண்டுகோளை இந்தியாவை நோக்கி விடுத்து இருந்தால் இந்த யுத்தத்தைப் பின்னணியில் இருந்து நடாத்தும் இந்தியா அதற்கு சம்மதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல் வந்து அதனிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புலிகளுக்கு இந்தியாவிடம் சரணடைவதில் உள்ள முக்கிய பிரச்சினை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் இந்தியா விதிதத்து உள்ள பிடியாணை. இவ்விருவரும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பகுதியினுள் இருந்தால் இந்தியாவிடம் சரணடையும் முடிவை எடுத்திருக்க இயலாது. அவ்வாறு சரணடைந்து இந்தியாவை அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வைக்கும் அரசியல் வல்லமை புலிகளிடம் இல்லை. அவர்களிடம் உள்ள முரட்டுத்தனமான ஈகோ அவர்களது உயிருக்கும் ஆபத்தாகி உள்ளது.

இன்று (மே 17 2009) அதிகாலை முள்ளிவாய்க்கால் களமுனையில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு தப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரிய தாக்குதலில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் தாள்வாகப் பறந்து வேவு பார்த்ததில் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியினுள் இருப்பதாகவே இராணுவம் நம்புவதாக உறுதிப்படுத்த முடியாத மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து இராணுவம் சுற்றுவளைக்கப்பட்ட பகுதி தொடர்பாக இறுதியான சில முடிவுகளை எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இராணுவம் தற்போது சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் இருந்து கடந்த 72 மணித்தியாலங்களில் 50 000 மக்கள் வெளியேறி உள்ளதாகவும் அப்பகுதியில் பொது மக்கள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. பொது மக்கள் அங்கு உள்ளார்களா? அல்லது அனைவரும் வெளியேறிவிட்டார்களா? என்பதனை சுயாதீனமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பொதுமக்கள் யாவரும் வெளியேறிவிட்டார்கள் என்று இராணுவம் கூறி இருப்பது கடுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இராணுவம் தயாராகலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராணுவம் புலிகளின் தலைமையை உயிருடன் கைது செய்வதையோ அல்லது அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடைவதையோ பெரும்பாலும் விரும்புகின்றது. வெளியேறி வருகின்ற மக்களுக்கும் இடப்பெயர்வு முகாம்களுக்குமே சர்வதேச பொது ஸ்தாபனங்களை அனுமதிக்காத இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை அமெரிக்காவிடமோ அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றிடமோ ஒப்படைக்க அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடாது. அதற்கான நெருக்குதல்களே பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணின் ‘பின் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்கள். இது சர்வதேச அமைப்புகள் மூலமும் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படலாம்.

ஆனால் மீண்டும் இந்தியாவின் பாத்திரம் இதில் மிகவும் முக்கியமானது. இந்தியா புலிகளை தன்னை நோக்கி மண்டியிட முயற்சிக்கும் என்றே நம்பலாம். அதனால் இலங்கை அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்களுக்கு பணியாமல் இருப்பதற்கு இலங்கைக்கு பக்க பலமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

2002ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா உங்களுக்கு பிடியாணை பிறப்பித்து உள்ளது பற்றி புலிகளின் தலைவர் வே பிரபாகரனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகரன் அப்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துக்கூடாகக் கூறியது, ‘அண்ணை நடக்கிறதை கதைக்கச் சொல்லுங்கோ’ என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் புலிகள் அடுக்கடுக்காக விட்ட அரசியல் தவறுகள் இன்று அவர்களது மரணம் வரை அவர்களைத் துரத்துகின்றது. ‘அரசன் அன்று கொல்வான். இந்தியா நின்று கொல்லும்.’ என்பது பொருத்தமாகிவிட்டது.

இலங்கை அரசாங்கம் சரணடையும் தருவாயில் உள்ள புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதோ அல்லது அப்பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதோ மற்றுமொரு மனித அவலத்தை உருவாக்கும். மேலும் அது சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக அமையும். ஆகவே இந்த யுத்தத்தை மனிதாபிமான நோக்கில் சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக முடிவுக்கு கொண்டுவருவதே பொருத்தமானது. இராணுவத்தரப்பில் மக்கள் அங்கில்லை என்று கூறப்பட்டாலும் அது சுயாதீனமாக ஒறுதிப்பட்ட ஒன்றல்ல. அப்பகுதி மீது தாக்குதல் நடத்துவது மற்றுமொரு மனித அவலத்தை ஏற்படுத்தும்.

இன்று புலிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். அதனால் அரசு வலிந்து தாக்குதல் நடத்தி மனித அவலத்தை ஏற்படுத்துவது அவர்கள் புலிகளாக இருந்தாலுமே பாரிய மனிதவிரோதச் செயலாகும். சுற்றி வளைக்கப்பட்டு உள்ள புலிகள் மனிதாபிமான முறையில் கௌரவமாக சரணடைவதற்கான வழிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பதே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கு வழியை ஏற்படுத்தும்.

அவர்கள் புலிகளாக இருந்தாலும் அவர்கள் போராடுவதற்கான சூழலை இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளே ஏற்படுத்தின. அவர்களது போராட்டமுறை பயங்கரமானதாக இருந்துள்ளது. இன்று அவர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டு உள்ளனர். அதற்கு மேல் அவர்களைக் கொன்றொழிப்பதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தமிழ் தாயுடைய பிள்ளைகள் சகோதரர்கள். அவர்கள் பிரதான சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட பூர்வமான அரசினுடைய முதற்கடமை.

தமிழ் மக்களை அரசின் மீது நம்பிக்கைகொள்ள வைப்பதற்கான மிக முக்கிய காலகட்டம் இது. சுமுகமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் உள்ள முதல் நிபந்தனை இன்று சுற்றிவளைக்கப்பட்டு உள்ள புலிகளை கௌரவமான முறையில் சரணடைய ஏற்பாடு செய்து அவர்களையும் வன்னி முகாம்களில் உள்ள மக்களையும் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவது.

இதனைவிடுத்து அவசர அவசரமாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர்களை அழிப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வன்மத்தை ஏற்படுத்தும்.  மேலும் ஏற்கனவே எல்லைப்புறக் கிராமங்களில் பதுங்கி உள்ள புலிகள் சிங்களக் கிராமங்கள் மீதும் தாக்குதளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. இது 1983யை மீண்டும் நிகழ்த்த வழிககுக்கலாம்.

என்னதான் புலிகள் மக்களைக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தாலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை அழிக்க முற்படுவது அரச பயங்கரவாதமாகவே அமையும். ஏற்கனவே ஏற்பட்ட மனித அவலங்களுக்கு அரச படைகளும் சம பொறுப்புடையவர்கள். இன்று அரசு இராணுவ நகர்வில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மற்றுமொரு மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசினுடையது.